Last Updated : 05 Feb, 2021 08:08 PM

 

Published : 05 Feb 2021 08:08 PM
Last Updated : 05 Feb 2021 08:08 PM

இயந்திரம் இருந்தும் கொள்முதல் நிலையம் திறக்காததால் மானாமதுரை அருகே 10 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம்

மானாமதுரை அருகே சின்னகண்ணனூரில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் பயன்பாடின்றி இருக்கும் தரம் பிரிக்கும் இயந்திரம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தரம் பிரிக்கும் இயந்திரம் இருந்தும் கொள்முதல் நிலையம் திறக்காததால் 10 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கமடைந்தன.

சிவகங்கை மாவட்டத்தில் 1.90 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில் தொடர் மழையால் 90 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் சேதமடைந்தன.

பாதிக்கப்படாத நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சார்பில் 30-க்கும் மேற்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மானாமதுரை அருகே சின்னகண்ணனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கரிசல்குளம், கிருஷ்ணராஜபுரம், மானங்காத்தான், புலிக்குளம், சோமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இதனால் கடந்த ஆண்டு சின்னகண்ணனரில் 2 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. ஒரு கொள்முதல் நிலையத்திற்கான தரம் பிரிக்கும் இயந்திரத்தையே விவசாயிகள் வாங்கி கொடுத்துள்ளனர்.

ஆனால் இந்தாண்டு ஒரே ஒரு நெல் கொள்முதல் நிலையம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கமடைந்துள்ளன.

இதுகுறித்து சின்னகண்ணனூர் விவசாயிகள் கூறியதாவது: ஒரு கொள்முதல் நிலையம் மூலம் தினமும் 300 மூடைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆனால் தினமும் ஆயிரக்கணக்கான மூடைகளை விவசாயிகளை கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டங்களில் இருந்து கூட நெல் மூடைகள் வருகின்றன. இதனால் கடந்த ஆண்டை போலவே கூடுதலாக கொள்முதல் நிலையம் திறக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.

ஆனால் நடவடிக்கை இல்லை. மேலும் நாங்கள் வாங்கி கொடுத்த தரம் பிரிக்கும் இயந்திரமும் வீணாக தான் உள்ளது. எடை இயந்திரமும், சாக்கு பைககள் இருந்தாலே கொள்முதல் நிலையத்தை திறந்துவிடலாம். ஆனால் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர், என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x