Published : 20 Jan 2021 04:30 PM
Last Updated : 20 Jan 2021 04:30 PM
திருச்சி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்ட 30 நாட்களில் புதிதாக 80,095 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவையின் 9 தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.சிவராசு வாக்காளர் பட்டியலை வெளியிட, மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் அதைப் பெற்றுக் கொண்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ச.ஜெயப்பிரீத்தா, தேர்தல் வட்டாட்சியர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆட்சியர் சு.சிவராசு கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவையின் 9 தொகுதிகளுக்குமான வரைவு வாக்காளர் பட்டியல் 2020, நவ.16-ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2021, ஜன.1-ம் தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு, சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் 2020, நவ.16 முதல் டிச.15-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டன. இந்த நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கு உரிய படிவங்கள் பெறப்பட்டு, கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அனைத்துப் பணிகளும் முடிவடைந்ததையடுத்து, இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்ந்து நடைபெறும். எனவே, இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்யத் தகுதி வாய்ந்தவர்கள் இருப்பின் அனைத்து வேலை நாட்களிலும், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் உரிய படிவங்களை அளிக்கலாம். மாநகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகம் மற்றும் கோட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
மேலும், www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் voters helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்றார்.
மொத்த வாக்காளர்கள் 23,32,886 பேர்:
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக மணப்பாறையில் 2,88,990 பேர், ஸ்ரீரங்கத்தில் 3,10,739 பேர், திருச்சி மேற்கில் 2,68,379 பேர், திருச்சி கிழக்கில் 2,54,427 பேர், திருவெறும்பூரில் 2,91,891 பேர், லால்குடியில் 2,17,526 பேர், மண்ணச்சநல்லூரில் 2,43,272 பேர், முசிறியில் 2,32,117 பேர், தனித் தொகுதியான துறையூரில் 2,25,545 பேர் என 9 தொகுதிகளிலும் மொத்தம் 23,32,886 வாக்காளர்கள் உள்ளனர். இதில், மூன்றாம் பாலினத்தவர்கள் 231 பேர், ஆண்கள் 11,33,020 பேர், பெண்கள் 11,99,635 பேர்.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கமும், குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக லால்குடியும் உள்ளது.
புதிதாக இணைந்த 80,095 பேர்:
2020, நவ.16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் திருச்சி மாவட்டத்தில் 22,60,439 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதைத் தொடர்ந்து, சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணியின்போது புதிதாக 80,095 பேர் சேர்க்கப்பட்டனர். இதில், 35,885 பேர் 18, 19 வயதினர். இதேபோல், உயிரிழந்தோர், இடம் பெயர்ந்தோர், இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களால் 7,648 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். இதன்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்ததைக் காட்டிலும், இறுதி வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 72,447 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT