Published : 08 Aug 2024 06:20 AM
Last Updated : 08 Aug 2024 06:20 AM

கடின உழைப்பு, தொடர் முயற்சி இருந்தால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறலாம்: ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் ஆனந்தகுமார் உறுதி

நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள்.

சென்னை: மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும், கடின உழைப்பும், தொடர் முயற்சியும் இருந்தால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறலாம் என்று ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் ஆனந்தகுமார் உறுதியாக கூறினார். சிவில் சர்வீஸ் தேர்வு உள்ளிட்ட மத்திய - மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில், ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - வெற்றிப்பாதை’ வழிகாட்டி நிகழ்ச்சி சென்னையை அடுத்த சோழிங்க நல்லூர் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி (பயிற்சி பிரிவு) ஆணையர் டாக்டர் ஆர்.ஆனந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நான் ஒரு கால்நடை மருத்துவர். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பிவிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்த போது ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் பேசிய சிவில் சர்வீஸ்தேர்வு தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போதுதான் நாமும் ஓர் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை என் மனதில் துளிர்விட்டது. வாழ்க்கையில் நாம் நிர்ணயிக்கும் இலக்குதான் நாம் செல்லும் பாதையை தீர்மானிக்கிறது. படித்து முடித்துவிட்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி, அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றினேன்.

அரசு பணியில் இருந்து கொண்டே ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரானேன். முதல் முயற்சியில் முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால், முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து 2-வது முறை முயற்சி செய்தபோது முதல் நிலைத் தேர்விலேயே தோல்வி அடைந்தேன். 3-வது முறை முயற்சிக்கும்போது, நேர்முகத்தேர்வு வரை சென்றேன். ஆனால், வெற்றிபெற முடியவில்லை. எனது 4-வது முயற்சியில்தான் வெற்றிபெற்று ஐஏஎஸ் பணிக்கு தேர்வானேன்.

ஐஏஎஸ் தேர்வை பொருத்த வரையில் அனைத்து விஷயங்கள் குறித்தும் கொஞ்சமாக அதேநேரத்தில் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். இத்தேர்வில் வெற்றிபெறுவதற்கு குறுக்கு வழி கிடையாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும், கடின உழைப்பும், தொடர் முயற்சியும் இருந்தால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறலாம்.

நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி படிப்பில் சுமாராக இருக்கும் மாணவர்களும் இந்த தேர்வில் வெற்றிபெறுகிறார்கள். சிலர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சுமாராக படித்திருப்பார்கள். ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரான பிறகு, அவர்கள் அர்ப்பணிப்புடன் படித்திருப்பார்கள்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நேற்று
முன்தினம் நடைபெற்ற ‘இந்து தமிழ் திசை - வெற்றிப்பாதை’ வழிகாட்டி நிகழ்ச்சியில் சிறப்பு
விருந்தினராக கலந்துகொண்ட ஊரக வளர்ச்சி (பயிற்சி பிரிவு) ஆணையர்
டாக்டர் ஆர்.ஆனந்தகுமார். உடன், ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர்
பேராசிரியர் டி.ஸ்டாலின், சத்யபாமா பல்கலைக்கழக இயக்குநர் (நிர்வாகம்) சுந்தரி.

வெற்றி அடைந்திருப்பார்கள். இந்த தேர்வில் கடின உழைப்பு மட்டுமன்றி ஸ்மார்ட் ஒர்க்கும் முக்கியம். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு அதிக நேரம் படிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பணியில் இருந்துகொண்டும் படித்து ஐஏஎஸ் தேர்வில் வற்றிபெறலாம். நானும் அரசு பணியில் இருந்துகொண்டுதான் இந்த தேர்வுக்கு படித்தேன். நமக்கு ஆர்வம் இருந்தால் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் முழு கவனத்துடன் படித்துக்கொண்டே இருக்க முடியும். படிப்பதற்கு நமது மனதை தயார்படுத்த முடியும்.

நம்பிக்கையோடு செய்யும் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். ஆசையை உண்மையான வெற்றியாக மாற்றுவது நமது கையில்தான் இருக்கிறது. மாணவர்கள் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும். ஒரு புத்தகமோ அல்லது அதில் இடம்பெற்றுள்ள ஒரு பக்கமோ ஏன் அதில் உள்ள ஒரு வார்த்தை கூட நமது வாழ்க்கையை மாற்றிவிடும். புத்தகங்களுக்கு அந்த ஆற்றல் உண்டு. இதை அனுபவப்பூர்வமாக சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் பேராசிரியர் டி.ஸ்டாலின் பேசும்போது, “வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். நம்மால் முடியாதது ஒன்றுமில்லை. தன்னம் பிக்கையோடு கடைசி நிமிடம் வரை போராடுவோருக்கு வெற்றி காத்திருக்கிறது.

மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வெற்றியை செயலில் காண்பிக்க வேண்டும். போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அறிவை தொடர்ந்து மேம்படுத்தி வரவேண்டும். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவதை ஓர் இமாலய சாதனையாக பார்க்கிறார்கள். விடா முயற்சியுடன் கடினமாக உழைத்தால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறலாம். இந்த தேர்வுக்கு தொடர் முயற்சி மிகவும் அவசியம்” என்றார்.

சத்யபாமா பல்கலைக்கழக இயக்குநர் (நிர்வாகம் ) டாக்டர் சுந்தரி வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் வரவேற்றார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆனந்தகுமார் பதிலளித்தார்.சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘இந்து தமிழ் திசை - வெற்றிப்பாதை’ வழிகாட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஊரக வளர்ச்சி (பயிற்சி பிரிவு) ஆணையர் டாக்டர் ஆர்.ஆனந்தகுமார். உடன், ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் பேராசிரியர் டி.ஸ்டாலின், சத்யபாமா பல்கலைக்கழக இயக்குநர் (நிர்வாகம்) சுந்தரி. (அடுத்தபடம்) நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x