Published : 01 Jun 2024 06:54 AM
Last Updated : 01 Jun 2024 06:54 AM
சென்னை; ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘தமிழ்நாடு பிராப்பர்ட்டி எக்ஸ்போ-2024’ என்ற வீட்டுவசதி கண்காட்சி நேற்று தொடங்கியது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், I Ads Events-ம் இணைந்து நடத்தும்‘தமிழ்நாடு பிராப்பர்ட்டி எக்ஸ்போ-2024’ என்ற வீட்டுவசதி கண்காட்சி நந்தம்பாக்கம், சென்னை வர்த்தகமையத்தில் 3 நாட்கள் நடக்கிறது.
இக்கண்காட்சியை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மண்டல மேலாளர் எஸ்.திருமுருகன், பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பொது மேலாளர் மற்றும் மண்டல தலைவர் ஏ.சரவணகுமார், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா துணைப்பொது மேலாளர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் (சென்னை தெற்கு)ரஞ்சித் சுவாமிநாதன், முத்து ரத்தினம் (சென்னை வடக்கு), கேன்ஃபின்ஹோம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர், தமிழ்நாடுகிளஸ்டர் தலைவர் என்.சிவசங்கரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மண்டல மேலாளர் எஸ்.திருமுருகன் பேசும்போது, ‘‘நடுத்தர மக்களும் வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் குறைந்தபட்சமாக 8.4 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வழங்குகிறோம். இவை தவிர, டாப்-அப் கடன்கள், வீடுகளை சீரமைப்பதற்கான கடன்களும் வழங்குகிறோம்.
மேலும், இந்தக் கண்காட்சியில் வந்து வீட்டுக் கடன் பெறுபவர் களுக்கு புராசசிங் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அத்துடன், டாக்குமெண்டேஷன் கட்டணத்திலும் சலுகை வழங்கப்படும். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் இக்கண்காட்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இணைந்திருப்பது பெருமை’’ என்றார்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பொது மேலாளர் மற்றும் மண்டல தலைவர் ஏ.சரவணகுமார் கூறும்போது, ‘‘நாட்டின் 2-வது பெரிய பொதுத் துறை வங்கியான எங்கள்வங்கி, வீட்டுக் கடன்களை வழங்கபல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறோம். 8.4 சதவீத வட்டியில் வீட்டுக் கடன்களை வழங்குகிறோம். எங்களது வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் வீட்டுக் கடன் பெற்றால் அவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு.
உதாரணமாக, எங்களது வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் நபர் ரூ.50 லட்சம் வீட்டுக் கடன்பெற்றிருந்தால், அவரது சேமிப்புக் கணக்கில் ரூ.20 லட்சம் இருப்பு இருந்தால், அவர் பெற்ற வீட்டுக் கடனில்ரூ.20 லட்சத்தை கழித்துவிட்டு ரூ.30லட்சத்துக்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். மேலும், வீட்டு கடன் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு 2 முதல் 3 நாட்களுக்குள் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவாக கடன் வழங்கப்படும்’’ என்றார்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா துணைப் பொது மேலாளர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் (சென்னைதெற்கு) ரஞ்சித் சுவாமிநாதன், முத்து ரத்தினம் (சென்னை வடக்கு) ஆகியோர் பேசும்போது, ‘‘எங்கள் வங்கியில் 8.35 சதவீத வட்டியில் வீட்டுக் கடன்களை வழங்குகிறோம்.
அத்துடன், ஆவணக் கட்டணம் வசூலிப்பதில்லை. மேலும், வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும். இவைதவிர, வீடு கட்டுவதற்கு தேவையானநிலம் வாங்கவும் கடன் வழங்கப்படும். வீட்டுக் கடன் பெற்றவர்கள் வாகனக் கடன் வாங்கினால், வாகனத்தின் முழு மதிப்புக்கும் கடன் வழங்கப்படும்’’ என்றனர்.
இக்கண்காட்சியில் 50 நிறுவனங்களின் அரங்குகள் உள்ளன. காலிமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், மூத்தக் குடிமக்களுக்கான கம்யூனிட்டி வீடுகள், ஹாலிடே ஹோம்ஸ் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். நாளை (2-ம் தேதி) வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் விளம்பர விற்பனை பிரிவு பொதுமேலாளர் வி.சிவக்குமார் உள்ளிட்டோர் கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT