Published : 29 Apr 2024 06:30 AM
Last Updated : 29 Apr 2024 06:30 AM
சென்னை: ஐஏஎஸ் ஆவது என்கிற கனவில் உறுதியாக இருங்கள். சிவில் சர்வீஸ் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று தமிழக அரசு முன்னாள் செயலர் உ.சகாயம் உறுதிபட தெரிவித்தார்.
கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உனக்குள் ஓர் ஐஏஎஸ்' என்கிற யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி சென்னை அடையாறில் உள்ள பாட்ரிஷியன் கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசு முன்னாள் செயலர் உ.சகாயம் பேசியதாவது: ஆண்டுதோறும் 800 முதல் 1,200 பேர் வரை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுகின்றனர். எல்லோரும் மக்களால் அடையாளம் காணப்படுவதில்லை. இத்தேர்வில் வெற்றி பெற்று இங்கு அமர்ந்திருப்பவர்கள் தங்களது தனித்துவத்தை நிலை நாட்ட வேண்டும். எந்த நெருக்கடிக்கும் அஞ்சக்கூடாது.
மிகச் சிறந்தநேர்மையாளராகப் பணியாற்ற வேண்டும். நான் நாமக்கல் ஆட்சியராகப் பணியாற்றியபோது ராசிபுரம் அருகே குதிரை வண்டிக்காரர் ஒருவரைப் பார்த்து மோட்டார் வாகனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் இந்த வண்டியால் கிடைக்கும் வருமானம் போதுமானதாக உள்ளதா என்று கேட்டேன்.
சொற்ப வருமானமே கிடைப்பதால் வறுமையில் வாடுகிறேன் என்றார். நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டபோது சைக்கிள் கடையில் வேலை பார்க்கும் தனது மகனுக்கு கடன் பெற்று, சைக்கிள் கடை வைக்க உதவ வேண்டும் என்று கேட்டார். உடனே எனது உதவியாளர் மூலம் வங்கியை அணுகி, ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுக் கொடுத்தேன். அந்த உதவி நமக்கு பெரிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அது மிகப்பெரிய உதவியாகும்.
எனது தந்தை ஏழை விவசாயி. ஆனால், எனது சித்தப்பா பெரும் செல்வந்தர். புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் மலை அருகே 4 கல்குவாரிகள் வைத்திருந்தார். அவரைப்பார்த்து நானும் குவாரி ஓனர் ஆக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், மதுரை மாவட்டத்தில் அதுபோன்ற மலையையே காப்பாற்றும் நிலைக்கு உயர்ந்தேன்.
படிப்பும் நேர்மையும் அந்த மாற்றத்தை எனக்குள் விதைத்தன. அதுபோல உங்களுக்கும் சிறுவயதில் கனவு இருக்கும். அதுவும் மாறலாம். ஐஏஎஸ் என்ற கனவில் உறுதியாக இருங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். உங்கள் கனவு, ஆசை, லட்சியத்தை ஆழ்மனதுக்கு கொண்டு செல்லுங்கள். உங்கள் வெற்றியை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு சகாயம் பேசினார்.
தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலர் எஸ்.எஸ்.ஜவஹர் பேசியதாவது: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஒருவரின் 99 சதவீத உழைப்புதான் பிரதானம். மற்றவர்கள் வழிகாட்டுவது ஊறுகாய் போலத்தான். டாக்டர், ஆடிட்டர், நீதிபதி, சினிமா என எந்தத் துறையிலும் ‘காட் பாதர்' தேவை. ஆனால் ஐஏஎஸ் ஆவதற்கு எந்தப் பின்புலனும் தேவையில்லை. சுயமுயற்சி மட்டும் இருந்தால்போதும்.
உங்கள் சிந்தனையும் கருத்துகளும் சிறப்பாக இருக்க வேண்டும். பிரச்சினைகளை மற்றவர்கள் அணுகுவதற்கும் ஐஏஎஸ் அதிகாரி அணுகுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இருபுறமும் சமமாக சிந்திக்கும் திறன் அவருக்குத்தான் இருக்கும். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு, முதலில் சமுதாயத்துக்கு என்னால் ஆனதை செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருக்க வேண்டும்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு சுயமாகவும் படிக்கலாம். பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்தும் படிக்கலாம். எங்கு படித்தாலும் முறையாகப் படிக்க வேண்டும். உதாரணத்துக்கு தேர்தல் பத்திரம் குறித்தும், அதுதொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுகள் பற்றியும் உன்னிப்பாக படிக்கும்போது அதுகுறித்து பல சிந்தனைகள் உருவாகும். நீங்கள் ஐஏஎஸ் ஆவதற்கு வசதியான குடும்பம் தேவையில்லை.
அன்பான, ஆதரவான குடும்பமே போதும். அதைவிட மிகப்பெரிய உந்து சக்தி இல்லை. தேவையில்லாத புத்தகங்களைப் படிக்காமல் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். காலை, மாலை என புத்தகங்களோடு ஐக்கியமாக வேண்டும். ஐஏஎஸ் ஆகிவிட்டால் கடைசிவரை உங்களுக்கு சமுதாய சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு ஜவஹர் பேசினார்.
கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் பேசும்போது, “தமிழகத்தில் குரூப்-1 தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், யுபிஎஸ்சி தேர்வுக்கு 30 ஆயிரம் பேர்தான் விண்ணப்பிக்கின்றனர். அதில் பாதி பேர் தேர்வு எழுதுவதில்லை. யுபிஎஸ்சிதேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கையையும், முதன்மைத் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்காக சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 400 கூட்டங்களில் பேசியுள்ளேன். கடந்த 8 ஆண்டுகளாக இத்தகைய வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். யுபிஎஸ்சி தேர்வை 1 லட்சம் பேர் எழுதும் நிலை உருவாக வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்து தமிழ் திசை முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் பேசும்போது, “யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.
ஆனால், அதற்கான முயற்சியும் பயிற்சியும் இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. யுபிஎஸ்சி தேர்வுக்கு படிப்பவர்கள் கட்டாயம் ‘தி இந்து'மற்றும் ‘இந்து தமிழ் திசை' நாளிதழ்களைப் படிக்க வேண்டும் என்று கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள் கூறுகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஜெயசீலன், சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது அன்றைய நாளில் ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் வெளிவந்த பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான கட்டுரையை படித்துவிட்டு சென்றிருக்கிறார். அதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்தது நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்" என்று கூறினார்.
கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் படித்து இந்தாண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகியுள்ள டாக்டர் பிரசாந்த், வெங்கடேஸ்வரன், விக்னேஷ், கார்த்திக்ராஜா, முகிலன், கதிரவன் ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில், மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT