Published : 12 Feb 2024 06:21 AM
Last Updated : 12 Feb 2024 06:21 AM
“அடுத்த10 ஆண்டுகளில் உலகின் சிறந்த 20 ஸ்டார்ட்-அப் மையங்களின் பட்டியலில் தமிழகத்தையும் கொண்டு வருவதுதான் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் அமைப்பின் முக்கிய நோக்கமாகும்” என, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷனின் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சிவராஜா ராமநாதன் தெரிவித்தார்.
தற்போதைய ‘ஸ்டார்ட் - அப்’ காலகட்டத்தில் தொழில் தொடங்குவது குறித்தும், ஏற்கெனவே நடத்திவரும் தொழிலை மேம்படுத்துவது குறித்தும் மக்களுக்கு வழிகாட்டும் நோக்கில், சர்வதேச மார்க்கெட்டிங் நிறுவனமான ‘குரூப் எம்’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை’யின் ‘வணிக வீதி தொழில்முனைவோருக்கான களம்’ எனும்வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஃபேம் டிஎன், டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனங்கள் (FaMe TN, TallySolutions) உடன் இணைந்துள்ளன.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் விளம்பர பிரிவு பொதுமேலாளர் சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார். தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் மிஷனின் திட்ட இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சிவராஜா ராமநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
ஸ்டார்ட்-அப் என்பது ஒரு தனி துறை என சிலர் கருதுகின்றனர். சிலர் ஸ்டார்ட்-அப் என்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம் என கருதுகின்றனர். இது ஓரளவுக்கு உண்மைதான். ஸ்டார்ப்-அப் என்பது புதிதாக தொடங்குவது என நினைக்கிறோம். ஆனால், புதிதாக தொடங்குவது எல்லாமே ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இல்லை.
எம்எஸ்எம்இ நிறுவனங்கள் ஆயிரம் பேர் செய்யும் வேலையை அவர்களும் செய்வார்கள். மிகவும் போட்டி நிறைந்த சூழலில் அவர்கள் வேலை செய்வதால், எம்எஸ்எம்இ நிறுவனங்களின் வளர்ச்சி மெதுவாக இருக்கும்.
ஆனால், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதிய சிந்தனைகளை, புதிய பிரச்சினைகளை கண்டுபிடித்து அதற்கு தீர்வு காண்பது அல்லது ஏற்கெனவே உள்ள பிரச்சினைக்கு மேலும் சிறந்த தீர்வை காண்பது அவர்களுடைய பணி. இதன் மூலம், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் விரைவாக வளர்ச்சி அடைகின்றன. உதாரணமாக, எம்எஸ்எம்இ நிறுவனங்கள் 25 ஆண்டுகள் அடையும் வளர்ச்சியை, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், இரண்டு, மூன்று வருடங்களில் அடைகின்றன.
உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவை கடைக்கு நேரடியாக செல்லாமல் வேண்டிய இடத்தில், வேண்டிய நேரத்தில் வரவழைத்து உண்ண வேண்டும் என ஒருவர் நினைத்தார்.
அதற்காக அவர் 3, 4 தொழில்நுட்பங்களை இணைத்தார். ஸ்மா்ட் போன், செயலி, ஜியோ மேப் தொழில்நுட்பம், மொபைல் பேங்கிங், லாஜிஸ்டிக் ஆகிய 5 புள்ளிகளை இணைத்தார். இதுபோன்ற சிந்தனைகள்தான் புத்தாக்கம் என்பது. ஸ்டார்-அப் நிறுவனங்கள் என்பது இத்தகைய புத்தாக்கங்களைத்தான் செய்து வருகின்றன.
எதிர்காலத்தில் இத்தகைய புதியசிந்தனைகளை செயல்படுத்தும் நிறுவனங்கள்தான் வளர்ச்சி அடையும். எனவே, எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இதுபோன்ற புத்தாக்கங்களை செயல்படுத்த வேண்டும்.
புதிய தொழில் முனைவோர் புதிய சிந்தனைகளை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் 2018-ம் ஆண்டு ஸ்டார்ட்-அப் கொள்கை உருவாக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போதுமத்திய அரசின் அறிவிப்புப்படி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2021-ம் ஆண்டு தமிழகத்தில் 2,300 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்தன. தற்போது, 7,600 நிறுவனங்களாக அதிகரித்துள்ளன. மாறிவரும் தொழில்நுட்பங்களை அனைத்து துறையினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்த10 ஆண்டுகளில் உலகின் சிறந்த 20 ஸ்டார்ட்-அப் மையங்களின் பட்டியலில் தமிழகத்தையும் கொண்டு வருவதுதான் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இவ்வாறு சிவராஜா ராமநாதன் கூறினார்.
தமிழக அரசின் எம்எஸ்எம்இ வணிக ஒருங்கிணைப்பு அதிகாரி எஸ்.ஷாதிகா பானு உரையாற்றுகையில், ‘‘நாட்டில் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு உதவுவதற்காகத்தான் ‘ஃபேம் டிஎன்’ அமைப்பை தமிழகஅரசு ஏற்படுத்தியுள்ளது.
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது, உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவது மற்றும் பிராண்டிங் செய்வது ஆகியவை முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைகளுக்கு ‘ஃபேம் டிஎன்’ அமைப்பு தீர்வு கண்டு உதவி வருகிறது’’ என்றார்.
கிஸ்ஃப்ளோ நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுரேஷ் சம்பந்தம் பேசுகையில், ‘‘இந்தியாவில் ஏனைய மாநிலங்களை ஒப்பிடகல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், தொழில்வளர்ச்சி என பலதளங்களிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. எனினும், தொழில்முனைவு சிந்தனையில் நாம் மேம்பட வேண்டிய இடத்தில் உள்ளோம். வேலைக்குச் செல்வதே நம் இளைஞர்களின் இலக்காக உள்ளது.
பெற்றோரும், சமூகமும் இதைத்தான் வலியுறுத்தவும் செய்கிறது. இந்த மனநிலை மாற வேண்டும். தொழில்முனைவு நோக்கி நம் இளைஞர்கள் நகர வேண்டும். இன்றைக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஆனால், ரிஸ்க் காரணமாக வாய்ப்புகளை பயன்படுத்த தயங்குகின்றனர்.
அதேபோல், தமிழ்நாட்டிலிருந்து சர்வதேசபிராண்டுகள் உருவாக வேண்டும். அதற்கானமுன்னெடுப்புகளை அரசும் தொழில்முனைவோர்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
யுபிஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ‘இப்போ பே’ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மோகன் பேசுகையில்,‘‘ராமேசுவரத்தில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமத்தில் பிறந்த நான் அரசுப் பள்ளியில் பயின்றேன். கல்லூரி தேர்வில் 30 அரியர்ஸ் வைத்திருந்தேன். வேலை தேடி சென்னை வந்தேன். கம்ப்யூட்டர் கோடிங், புரோகிராம் குறித்து எதுவும் தெரியாது. ஃபோட்டோஷாப் மட்டுமே தெரியும்.
அதைவைத்து சென்னையில் ஒரு சில நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால், எனக்கு திறமை இல்லை எனக்கூறி ஒரு நிறுவனத்தில் வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். அப்போதுதான் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 7 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்கினேன். ஆனால், அதுவும் சரியாக கைக்கூடவில்லை. ஆனால், பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
அப்போதுதான், 2018-ம் ஆண்டு துபாய்க்கு சென்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அங்கு, ஃபெலுசி பேமெண்ட் கேட்வே என்ற நிறுவனத்தின் இணை நிறுவனராக இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 2019-ம் ஆண்டு பேமெண்ட் கேட்வேதிட்டத்தைச் செயல்படுத்தினோம். ஓராண்டுக்குள் யுஏஇ சந்தையில் எங்கள் நிறுவனம் ஒரு மிகப் பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது.
நமது சொந்த ஊருக்கு இதுபோன்று ஏதும் செய்யவில்லையே என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அதுதான் ‘இப்போ பே’ நிறுவனம் தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது’’ என்றார்.
நிகழ்ச்சியில், ‘குரூப் எம்’ நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் ரத்தன் சிங் ரத்தோர் தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் விளம்பரம் செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். டேலி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உதவிப் பொதுமேலாளர் எஸ்.ஜானகிராமன் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
‘இந்து தமிழ் திசை’யின் தலைமை இயக்கக அலுவலர் சங்கர் சுப்பிரமணியம், முதுநிலை உதவி ஆசிரியர் முகம்மது ரியாஸ் இருவரும் நெறியாளுகை செய்தனர். ‘இந்து தமிழ் திசை’யின் பொதுமேலாளர் டி.ராஜ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், இந்து தமிழ் திசை சார்பில், வணிக கூட்டணி நிறுவனங்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT