Published : 17 Nov 2021 11:55 PM
Last Updated : 17 Nov 2021 11:55 PM

மங்களங்களை வாரிவழங்கும் கார்த்திகை தீபத் திருவிழா

ஆண்டுதோறும் ஒளித் திருவிழாவாம் தீபாவளி முடிந்ததும் அடுத்துவரும் பண்டிகையாக கார்த்திகை தீபத் திருவிழா விளங்குகிறது. இந்தப் பண்டிகை கொண்டாட காரணமென்ன என்பதை அறிந்துகொள்வோம்.

ஒருமுறை தங்களில் யார் பெரியவர் எனும் போட்டி பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்குமிடையே நடக்கிறது. அப்போது சிவன் விண்ணுக்கும் மண்ணுக்குமான ஜோதிப் பிழம்பாக உருவெடுத்து நிற்கிறார்.

அப்போது, “சிவனின் அடியையோ, முடியையோ யார் முதலில் கண்டடைகிறீர்களோ அவர்களே பெரியவர்” என்று அசரரீயாக குரலொன்று வானிலிருந்து கேட்கிறது. இந்தப் போட்டியில் பிரம்மா, விஷ்ணு இருவருமே தோற்கின்றனர். தங்கள் தவறினை உணர்ந்த இருவரும், “மக்கள் எல்லோரும் வணங்கி வழிபட ஏதுவான உருவத்தை எடுக்க வேண்டும்’’ என்கிற கோரிக்கையை சிவனிடம் வைக்க, சிவன் தற்போது இருக்கின்ற திருவண்ணாமலையாகவே மாறுகிறார். ஆகையினால், மலையையே லிங்கமாக பாவித்து, மக்கள் அனைவரும் கிரிவலம் வந்து வழிபடுவதாக புராணம் கூறுகிறது.

ஒருமுறை பார்வதி தேவி விளையாட்டாகச் சிவபெருமானின் கண்களை மூட, பூலோகமே இருண்டுபோனது. இதனால் கோபமுற்ற சிவன், பூலோகத்திற்குச் சென்று தன்னை வழிபட வேண்டுமென்று பார்வதி தேவிக்கு ஆணையிடுகிறார். காஞ்சிபுரத்துக்கு வந்த தேவியார், மணலால் சிவலிங்கம் செய்து வழிபடுகிறார். தொடர்ந்து திருவண்ணாமலைக்கு வருகிற தேவியார், ‘மடக்கு’ எனும் பாத்திரத்தில் தீபத்தை ஏற்றி, அதனைக் கையில் ஏந்திக்கொண்டு அண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபடுகிறார்.

தேவியின் பக்தியில் மனம் கனிந்த சிவன், ரிஷப வாகனத்தில் வந்து, தன் இடதுபாகமாகத் தேவியாரை ஏற்று காட்சி தருகின்றார். உடனே தேவியார், “எனக்கு மட்டும் தாங்கள் காட்சியளித்தால் போதாது. அனைத்து மக்களுக்கும் காட்சியளிக்க வேண்டும்” என்று கேட்கவே, “நான் ஜோதி ஸ்வரூபமாக ஆண்டில் ஒரு நாள் காட்சி தருவேன். அந்த ஜோதியை தரிசிப்பவர்களின் 21 தலைமுறையும் முக்தியடையும். அந்த நாளில் என்னைத் தரிசிப்பவர்களின் சகல பாவங்களும் நிவர்த்தியாகும்” என்று அருளுகிறார் சிவன்.

கார்த்திகை மாதம் முழுவதுமே தினமும் மாலை நேரங்களில் நம் வீடுகளிலும் ஆலயங்களிலும் தீபமேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்துக்கு நிகரான பலன் தரக்கூடியதாகும். தினமும் ஏற்றும் தீபத்தை கைகளை உயர்த்தியோ, வாயால் ஊதியோ அணைக்கக்கூடாது. பூவின் காம்பினாலும், தூண்டும் குச்சியினாலும் லேசாக அழுத்தி அணைக்கலாம்.

கார்த்திகை தீபமேற்றி வழிபடுவது நம் வாழ்வில் நமக்கு எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்வதோடு, சாந்தியையும் மன அமைதியையும் உண்டாக்கும்.

இந்தக் கார்த்திகையில் நாம் ஏற்றும் தீபம், நம் வாழ்வில் வளம் சேர்ப்பதோடு, வரவிருக்கும் புதிய 2022 புத்தாண்டிலும் புதிய வெளிச்சங்களை, நம்பிக்கைகளை நமக்கு தருவதாக அமையட்டும்.

தங்கள் இல்லத்தில் ஏற்றப்படும் கார்த்திகை தீப அலங்காரத்தோடு நீங்களும் இருக்கும் புகைப்படத்தை https://www.htamil.org/00123 என்ற லிங்கில் வரும் நவம்பர் 22-ஆம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள்.

சிறப்பான 100 புகைப்படங்களுக்கு பரிசுகள் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x