Published : 28 Jul 2020 11:27 PM
Last Updated : 28 Jul 2020 11:27 PM
நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். திருநங்கைகளின் சுயதொழில் முயற்சிகளுக்கு கை கொடுக்கும் காவல் ஆய்வாளர் ஜி.ஆனந்த்பாபு. இப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்...
‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற சொல்வதைச் செயலில் காட்டுவதுபோல் காவல்துறையில் பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரை வாழ்ந்து வருகிறார் சூளைமேடு காவல்நிலையத்தின் ஆய்வாளர் ஜி.ஆனந்த்பாபு. கடலூரைச் சேர்ந்த ஆனந்த்பாபு, கல்லூரியில் ஹாக்கி விளையாட்டு வீரர். தாத்தா ராணுவம், அப்பா விமானப் படை, மாமா காவல்துறை என இவரது குடும்பத்தினர் மக்கள் சேவைப் பணியில் இருந்தவர்கள். பிறந்ததிலிருந்தே காவல்துறை வேலை ஒரு பெருமை என்ற சூழலில் வளர்ந்த ஆனந்த்பாபுவும், அதே துறைக்குள் நுழைந்தார்.
2000-ஆம் ஆண்டு காட்டுமன்னார் கோயில் பகுதியில் உதவி ஆய்வாளராகத் தன் பணியை ஆரம்பித்தார். காட்டுமன்னார் கோயிலில் பணி செய்த காலத்தில் அங்குள்ள இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு காவல்துறை, ராணுவ வேலையில் சேருவதற்கான பயிற்சியும் ஊக்கமும் அளித்துள்ளார். இதன்மூலம் கிட்டத்தட்ட 100 பேருக்கு காவல்துறையில் வேலை கிடைத்திருக்கிறது.
2010–ஆம் ஆண்டு சென்னை மதுரவாயில் காவல்நிலையத்துக்குப் பதவி உயர்வில் ஆய்வாளராக வந்த ஆனந்த்பாபு, சூளைமேடு பகுதியில் இருக்கும் திருநங்கைகளுக்கு ஆனந்த்பாபு ஒரு உற்ற தோழனாகவே இருக்கிறார். அவர்களின் மறுவாழ்வு, மாற்றுத்தொழில் ஏற்பாடு என உதவி செய்து வருகிறார்.
தோழி, சகோதரன் உள்ளிட்ட அமைப்புகளோடு சேர்ந்து இவரது முன்னெடுப்பால், இதுவரை 6 திருநங்கைகள் தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர். இன்னும் 6 பேருக்கு தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை அமைத்துக் கொடுத்திருக்கிறார், இன்னும் சிலருக்கு டாடா ஏஸ் வண்டி வாங்கிக் கொடுத்து, அதன்மூலம் குடிநீர் கேன் வியாபாரம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
“கடைகள்ல அஞ்சுக்கும் பத்துக்கும் கைநீட்டிக்கிட்டு அசிங்கப் பட்டுக்கிட்டு இருந்தேன். ‘கைகால் நல்லாத்தானே இருக்கு’னு கேலி செய்வாங்க. அவமானப் பட்டு அழுதிருக்கேன். ஆனந்த்பாபு அய்யாக்கிட்டே என்னோட பிரச்சினையை எழுதி கொடுத்தேன். அய்யாவோட முயற்சியிலதான் தள்ளுவண்டி, பாத்திரம், அடுப்பு, 2 சிலிண்டர்னு இன்னிக்கி மானத்தோட சாப்பாட்டுக்கடை நடத்துறேன். திருநங்கையோட பிரச்சினைய புரிஞ்சுக்கிட்ட அந்த மகாராசன் நூறு வருசம் வாழணுங்க…” என்று நெகிழ்கிறார் பட்டினப்பாக்கத்தில் சாப்பாட்டுக் கடை நடத்திவரும் திருநங்கை மோகனா.
காவல்துறையே மக்கள் பணி தான், அதையும் மீறி இதுபோன்ற சமூக சேவைகளைச் செய்வதற்கு நேரம் எங்கிருந்து கிடைக்கிறது என்று கேட்டால், “என்னோட வேலை நேரம் போக, ஓய்வு நேரத்துலதான் இது மாதிரியான சமூகப் பணிகளைச் செய்யிறேன். மேலும், பலரையும் ஒருங்கிணைச்சு, சில நேரங்கள்ல் போன் மூலமா இந்தப் பணிகளைச் செய்யிறதால பெரிய சுமையா தெரியலே, சந்தோஷம் தான்” என மிக எளிமையாகப் புன்னகைக்கிறார் ஆனந்த்பாபு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT