Published : 23 Jul 2020 08:19 PM
Last Updated : 23 Jul 2020 08:19 PM
நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். அப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்...
3 சக்கர மொபட்டில் மாற்றுத் திறனாளி ஆசிரியை ஹேமகுமாரி குடிசைப் பகுதிக்குச் செல்லும்போது, வண்டியை நிறுத்தி, குடிசையை நோக்கி, “சத்தியா என்ன பண்றே?” என சாந்தமாக கேட்க, உள்ளிருந்து “தோ.... வர்றேன், டீச்சர்” எனக் கூறிக்கொண்டே பரவசத்துடன் அழுக்கு நிறைந்த ஆடையோடு வெளியேவரும் அந்தச் சிறுமியும், அவரைத் தொடர்ந்து, வயதான தாத்தாவும் பாட்டியும் சிரித்த முகத்துடன் ‘வாங்கம்மா...’ என்று அழைக்க, “சத்தியாவை வேலை வாங்குறீங்களா?” உரிமையோடு ஹேமகுமாரி கேட்க, “இல்லம்மா, பள்ளிக்கூடம் எப்போ திறப்பாங்கன்னு கேட்டுக்கிட்டே இருக்காம்மா...”என்கின்றனர்.
பெண்ணாடம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி தமிழாசிரியரான ஹேமகுமாரி, கால்கள் செயலிழந்த நிலையில் , பெண்ணாடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாடோடி வாழ்க்கை வாழும் பூம் பூம் மாடு தொழில் செய்யும் புலம் பெயர் தொழிலாளர்கள் குடும்பத்தினர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளார்.
அம்மாணவர்களும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாடங்களைப் புரிந்துகொண்டு நன்கு கல்வி கற்க ஏதுவாக, தான் பணிபுரியும் பள்ளியில் சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கி கற்பித்து வருகிறார். காலனிப் பகுதியைச் சேர்ந்த பிள்ளைகள் குடும்பச் சூழலால் கல்வியைத் தொடர முடியாத நிலையிலும், மாணவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, பள்ளிக்கு வரச் செய்து, இடைநிற்றலை குறைத்துள்ளதில் ஹேமகுமாரியின் பங்கு மெச்சத்தகுந்தது.
“போதிய படிப்பறிவு இல்லீங்க. பேத்தி எங்களோடு தான் இருக்கு. தவப்பனும் தாயும் வெளியூர்ல வேலை செய்றாங்க. டீச்சர் அப்பப்ப போன் பண்ணி அவள அதிகம் வேலை வாங்காதீங்க, படிக்க வையுங்க, எக்காரணத்தை முன்னிட்டும் பள்ளிக்கூடம் போறத தடுக்கக் கூடாதுன்னு சொல்றது மட்டுமில்ல, எதிர்பாராத விதத்தில் கல்விச் செலவினங்கள் ஏற்பட்டால், அந்த செலவினங்களையும் அவங்களே பாத்துக்குவாங்க” என்கிறார் சத்தியாவின் தாத்தா கணேசன்.
“என் பையன் பள்ளிக்கூடத்துக்கு வரலன்னு தெரிஞ்சா உடனே போன் பண்ணி, பையனுக்கு என்னாச்சு, ஏன் வரலை, வேலைக்கு எங்கயும் அனுப்பிச்சிட்டீங்களா என்று எங்களிடம் கண்டிப்போடு கேட்பார்” என்கிறார் சக்தி என்ற மாணவனின் தந்தை ராஜேந்திரன்.
இவரிடம் பயின்ற பூம் மாடு தொழிலில் ஈடுபட்டு வந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ப்ளஸ் டூ வரை பயில உறுதுணையாக இருந்ததன் விளைவு, தற்போது அந்தப் பெண் தனது கணவருடன் வசித்து வருவதுடன், தன்னைப் போன்ற பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தனிப் பயிற்சி அளித்து வருவதை பெருமையாகக் கூறும் ஹேமகுமாரி, “ஒரு பெண்ணுக்கு கல்வி அளிப்பதன் மூலம் அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக அமையும்” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT