Published : 08 Jan 2024 05:24 AM
Last Updated : 08 Jan 2024 05:24 AM
வண்டலூர்: வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னா லாஜி (விஐடி) வழங்கும் ‘இந்து தமிழ் திசை - நாளைய விஞ்ஞானி 2023’ என்ற மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்வு, சென்னை மண்டல அளவில் விஐடி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எல்லையில்லா பொறியாளர்கள் – இந்தியா (பெங்களூரு பிரிவு) ஆகியவை இணைந்து நடத்தின.
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், மாணவர்களிடம் மறைந்திருக்கும் அறிவியல் திறனை வெளிக்கொணரும் வகையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்க, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.
தங்களது பகுதியில் நிலவும் பிரச்சினையை அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளை பல்வேறு அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி மாணவர்கள் உருவாக்கியிருந்தனர்.
இவ்வாறு மாணவர்கள் தயாரித்த ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் நிகழ்வு 4 மண்டலங்களில் நடைபெறுகிறது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளடக்கிய சென்னைமண்டல நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவில் சென்னை விஐடி கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் பேசும்போது “அறிவியல், மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தி, முன்னேற்றமடையவே துணைபுரிய வேண்டும். அறிவியல் அணுகுமுறை மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதன் மூலம், மனிதர்களின் வாழ்க்கைஎளிமையாவதுடன், முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும். நமது நோக்கமும், செயல்பாடுகளும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.
நிகழ்வைத் தொடங்கிவைத்து பொது நூலக இயக்குநர் க.இளம்பகவத் பேசியதாவது: நமது சமுதாயத்தில் அறிவியல் சார்ந்த நிகழ்வுகளைக் காட்டிலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளே அதிகம் நடைபெறுகின்றன. பொழுதுபோக்கு நிகழ்வுகள் மனிதர்கள் மேம்பாட்டுக்கு வளர்ச்சியைக் கொடுக்காது.
மனிதகுலத்தை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லவும், அதில் ஏற்படும்தீங்குகளைக் களையவும், சவால்களை முறியடித்து, அடுத்த கட்டத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும் அறிவியலும், தொழில்நுட்ப வளர்ச்சியும்தான் உதவும்.
விஞ்ஞான வளர்ச்சி காரணமாக கரோனா தடுப்பு மருந்து ஒரே ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதகுலம் எதிர் நோக்கிய பல்வேறு சிக்கல்களைத் தீர்த்துவைத்ததில் அறிவியலும், தொழில்நுட்பமும்தான் பெரும் பங்காற்றியுள்ளன. எனவே, நமது குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மை பெரிதும் வளர வேண்டும் அதை வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அமைப்புகளை நான் பாராட்டுகிறேன்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தினமும்ஒரு சிறப்பு இணைப்புப் பக்கத்தை வெளியிடுகிறது. அறிவியலுக்கும் ஒருசிறப்பு இணைப்புப் பக்கத்தை வெளியிட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
அறிவியலை மக்களிடம் கொண்டு செல்வது மிகச் சிறந்த முயற்சி.அறிவியல் சார்ந்த கட்டுரைகள் அதிகஅளவில் நாளிதழ்களில் வெளிவரும் போது, பலர் விஞ்ஞானிகளாக உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
20 ஆய்வுகள் தேர்வு: தொடர்ந்து, 175 தலைப்புகளில் மாணவர்கள் ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர். இவற்றில் 20 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், வேலூர் விஐடியில் நடைபெற உள்ள மாநில அறிவியல் திருவிழாவில் பங்கேற்க, புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி, சென்னை மேற்கு சிஐடி நகர் ஆல்பா பள்ளி, அய்யச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அம்பத்தூர் சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வேளச்சேரி சென்னை மேல்நிலைப் பள்ளி, அசோக் நகர் கேந்திரியா வித்யாலயா ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 6 அறிவியல் ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) சிவிஆர்டிஇ பிரிவு முன்னாள் இயக்குநர் வி.பாலமுருகன் பேசியதாவது: நாளைய விஞ்ஞானி நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றது மகிழ்ச்சிஅளிக்கிறது. இதில் வெற்றி வாய்ப்பைஇழந்தவர்கள், நாளைய வெற்றியாளர்கள். எனவே, எப்போதும் முயற்சியைக்கைவிடக்கூடாது. தற்போது சிறிய அளவில் அறிவியல் ஆய்வுகளை காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். இதை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உங்களுக்குப் பிடித்த துறையை, பெற்றோர், ஆசிரியர்கள் ஆலோசனையுடன் தேர்ந்தெடுக்க வேண்டும். 2047-ல் எல்லா துறைகளிலும் இந்தியா முதலிடத்தில் இருக்கும்போது, நீங்கள் சிறந்த விஞ்ஞானிகளாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். படித்த பின்னர் வெளிநாட்டுக்குச் செல்லாமல், நமது தேசத்துக்கு உங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் முனைவர் என்.மாதவன், பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி, பொருளாளர் ஜீவானந்தம், ‘இந்து தமிழ் திசை’ பொது மேலாளர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT