Published : 06 Dec 2023 04:21 AM
Last Updated : 06 Dec 2023 04:21 AM
சென்னை: கட்டுமானத்திலும், கட்டமைப்பிலும் சிறப்பான முறையில் பணியாற்றி, தனித்துவத்துடன் செயல்பட்டு வரும் பொறியாளர்களைப் பாராட்டி, கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்பர் கிரீட் சிமென்ட், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஆகியவை இணைந்து ‘சீர்மிகு பொறியாளர் விருது’ மற்றும் ‘வளர்மிகு பொறியாளர் விருது- 2023 ஆகியவற்றை வழங்க உள்ளன.
சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நாளை (டிச. 7) காலை 10 மணிக்குநடைபெற உள்ள இந்நிகழ்வை, ரினாகான் ஏ.ஏ.சி. ப்ளாக்ஸ், லெட்சுமி செராமிக்ஸ், டாக்டர்எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.
இந்த விருதுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 280-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் விண்ணப்பித்தனர். ‘சீர்மிகு பொறியாளர் விருது’, ‘வளர்மிகு பொறியாளர் விருது’ஆகியவற்றுக்கான விருதாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் ஆன்லைன் வழியே நடைபெற்றன.
கட்டுமானத் துறையின் முன்னோடிகளான அண்ணா பல்கலைக்கழக சிவில் இன்ஜினீயரிங் துறை முன்னாள் பேராசிரியரும், தலைவருமான டாக்டர் ஏ.ஆர்.சாந்தகுமார், சென்னை சிஎஸ்ஐஆர் இயக்குநர் டாக்டர் என்.ஆனந்தவள்ளி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பூகம்பம் மற்றும் மண் கட்டமைப்பு பிரிவுத் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் கே.பி.ஜெயா, சென்னை ஐடிபிஎல், எல்&டி-யின் சாலைகள் மற்றும் பாலங்கள் தலைமை வடிவமைப்பாளர் ரவீந்திர சுப்பையா ஆகியோர் நடுவர்
களாக செயல்பட்டு, சிறந்த பொறியாளர்களைத் தேர்வுசெய்தனர்.
சிறந்த பொறியாளர்களுக்கு... கட்டுமானத்திலும், கட்டமைப்பிலும் சிறந்து விளங்கும் பொறியாளர்களுக்கு ‘சீர்மிகு பொறியாளர்’ என்ற விருதும், வருங்காலங்களில் கட்டிடத் துறையில் நம்பிக்கைக்குரிய பொறியாளராக மலரவிருக்கிற பொறியாளர்களுக்கு ‘வளர்மிகு பொறியாளர் விருது’ என்ற விருதும் வழங்கப்படுகிறது. ராம்கோ சூப்பர் கிரீட் சிமென்ட் நிறுவனத்துடன் இணைந்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இந்த விருதுகளை வழங்குகிறது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் (திட்டங்கள்) டி.அர்ச்சுனன் கலந்துகொண்டு, பொறியாளர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார். மேலும், `கட்டுமானத் துறையில் வருங்கால மாற்றமும் ஏற்றமும்', `கட்டுமானத் துறையில் தொழிலாளர்கள் பாதுகாப்பு' என்ற தலைப்புகளில் இரு குழு விவாதங்களும் நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT