Published : 22 Oct 2023 02:19 PM
Last Updated : 22 Oct 2023 02:19 PM

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘வாக்கரூ’ நிறுவனம் இணைந்து முன்னெடுக்கும் ‘நற்சிந்தனை - நன்னடை’ : நற்செயல்களைச் செய்யும் மாணவர்களுக்கான கவுரவ மேடை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘வாக்கரூ’ நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கும் ‘நற்சிந்தனை - நன்னடை’ நற்செயல்களைச் செய்யும் மாணவர்களுக்கான கவுரவ மேடை

இன்றைய தலைமுறை மாணவர்கள் நற்சிந்தனையோடு நல்ல பல செயல்களையும் செய்துவருவது நாளைய சமுதாயத்திற்கான நம்பிக்கையை விதைப்பதாக உள்ளது. அப்படியான செயல்களைச் செய்யும் சிலரைப் பற்றி நாம் அறிந்துகொள்வோம்.


தோள் கொடுக்கும் நண்பர்கள் :

கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ளது பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளி. அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் எ.பிரவீன். விபத்தொன்றில் வலது காலில் முட்டிக்கு மேல் பகுதி எலும்பு முறிவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சையில் காலில் கம்பி பொருத்தப்பட்டது. காலை - மாலை தந்தையின் உதவியுடன் பள்ளிக்கு வரும் பிரவீனுக்கு, வாக்கர் இல்லாமல் நடக்க இயலாத நிலை. உடன் பயிலும் சக மாணவர்களான மதன்குமார், பிரனேஷ் ஆகியோர் கடந்த ஒன்றரை மாதங்களாக மாணவன் பிரவீனைப் பள்ளியின் கழிப்பறை உள்ளிட்ட இடங்களுக்கு தோள் சாய்த்து, அழைத்துச் சென்று வருகின்றனர்.

கற்போம், கற்பிப்போம்:

மதுரையில் உள்ள டாக்டர் திருஞானம் தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காவ்யா, தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு காலையிலும், மதிய இடைவேளை நேரங்களிலும் வாசிப்பு பழக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறார். மேலும் அப்பகுதியில் எழுதப்படிக்க விரும்பும் முதியோர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார். கற்றலுக்கு அடிப்படையான வாசிப்பு பழக்கத்தைச் சொல்லித் தருவதால், பல மாணவர்கள் ஆர்வத்தோடு பாடங்களையும் கற்றுக் கொள்கின்றனர்.

மண்ணில் மலரும் பசுமை பூமி:

ராமநாதபுரத்திலுள்ள போதி வித்யாலயா பள்ளியில் 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் கவின் சேதுபதி, இயற்கையைப் பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு சமூக சேவை செய்வதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பரமக்குடி முதல் பார்த்திபனூர் மறிச்சுக்கட்டி வரை தனது தந்தையுடன் சேர்ந்து 200-க்கும் மேற்பட்ட வேம்பு, புங்கன் உள்ளிட்ட மர விதைப்பந்துகளை எறிந்தார். பாக்கெட்டுகளில் மண் நிரப்பி விதையிட்டு, நாற்றங்கால் போடுவது, அந்த மரக்கன்றுகளை பொதுஇடங்களில் நடும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.


இப்படியாக நீங்கள் செய்துவரும் செயலைப் பற்றியும், இனி செய்ய நினைத்திருக்கும் செயலைப் பற்றியும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நீங்கள் செய்துவரும் சிறப்பான செயலை பலரும் அறிய வெளிச்சப்படுத்துவதற்கே ‘இந்து தமிழ் திசை’யும் ‘வாக்கரூ’ நிறுவனமும் இந்த ‘நற்சிந்தனை நன்னடை’ கவுரவ மேடையை அமைத்துள்ளது.

வாருங்கள்… நற்சிந்தனையோடு நன்னடை போடுவோம்.

நீங்கள் செய்துவரும் நற்செயலை எழுதி, அதற்கான படங்களையும் இணைத்து nne2023@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது ‘நற்சிந்தனை – நன்னடை’, ஆசிரியர், இந்து தமிழ் திசை - நாளிதழ், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002 எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x