Published : 15 Jul 2014 12:23 PM
Last Updated : 15 Jul 2014 12:23 PM

ஒரு நிமிட கதை: தடுமாற்றம்

சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, சவரம் செய்துகொண்டு புத்துணர்ச்சி யோடு யாருக்காகவோ காத்திருந்தார்.

அவருக்கு தொந்தி இல்லாததால், டீ ஷர்ட்டை இன் செய்து, லேசாக சென்ட் அடித்துக்கொண்டார். முகத்துக்கு கிரீம் தடவி அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார். அடிக்கடி எழுந்து தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். இருபது வருஷங்களுக்கு முன் ஆபீஸூக்கு பைக்கில் போகும்போது எப்படி இருந்தாரோ அப்படியே தன் தோற்றம் இருப்பதைப் பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டார். அவருக்கு அறுபத்தி ஐந்து வயசு ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்!

அன்று காலையில் அவர் மனைவி சகுந்தலா பேரனுக்கு உடம்பு சரியில்லை என்று இளைய மகள் வீட்டுக்குப் போயிருந்தாள். இனி இரவு சாப் பாட்டுக்குப் பிறகுதான் அவள் வீடு திரும்புவாள்.

அவர்கள் வீட்டு வேலைக்காரி நிர்மலாவின் கணவன் வேறொருத்தியோடு ஓடிப் போய் விட்டான். கடந்த பத்து வருடங்களாக, நிர்மலா அந்த வீட்டில் நம்பிக்கைக்கு உரியவளாகவும், எல்லோரிடமும் பிரியத்தோடும் பழகி வந்தாள். அந்த வீட்டில் அவளையும் ஒருத்தியாகவே நினைத்து சகுந்தலாவும், அவர்களின் மூன்று பெண்களும் அவ ளிடம் பாசத்தோடு நடந்து கொண்டார்கள்.

நிர்மலாவுக்கு முப்பத்தைந்து வயசு என்று யாரும் சொல்ல முடியாது. நல்ல கட்டான உடல் வாகு. சுந்தரத்திடம் அவளுக்கு ரொம்ப மரியாதை! அதனால் அவள் அனுசரித்துப் போய் விடுவாள் என்று அவருக்கு ஒரு நம்பிக்கை! அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

அவர் எதிர்பார்த்த சந்தர்ப்பம் அன்று வந்து விட்டது. நிர்மலா சிரித்துக் கொண்டே வேலைக்கு வந்தாள். ஒவ்வொரு அறையாக பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டே வந்தாள். சுந்தரம் ஹாலில் காத்திருந்தார். நிர்மலா படுக்கையறையை பெருக்கப் போனாள்.

சுந்தரம் மெதுவாக அவளைப் பின்தொடர்ந்து போனார். கீழே கிடந்த பக்கெட்டை கவனிக்காததால் தடுக்கி விழப் போனார். சத்தம் கேட்டுத் திரும்பிய நிர்மலா உடனே ஓடிவந்து அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

“அப்பா! பார்த்து வரக்கூடாதா? இந்த அறையில எதை எடுக்க வந்தீங்க? என்கிட்ட சொல்லியிருந்தா நான் எடுத்து தர மாட்டேனா? என்னப்பா! வயசாகியும் இன்னும் நீங்க சின்னப் பிள்ளையாட்டமே நடந்துக்கிறீங்க? நாங்க எல்லாம் எதுக்கு இருக்கிறோம்?” என்று சுந்தரத்தின் கைகளை உரிமையோடு கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சொல்ல, சுந்தரம் தலைகுனிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x