Published : 01 Sep 2017 08:39 AM
Last Updated : 01 Sep 2017 08:39 AM

ராய் ஜே. கிளாபெர் 10

மெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் அறிஞரும், இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ராய் ஜே.கிளாபெர் (Roy J. Glauber) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* நியூயார்க் நகரில் யூதக் குடும்பத்தில் பிறந்தவர் (1925). அரசுப் பள்ளியில் ஆரம்பக்கல்வி கற்றார். சிறுவயது முதலே மின் சாதனங்களால் வசீகரிக்கப்பட்டார். அவை எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது. எனவே எது கிடைத்தாலும் அதைக் கொண்டு ஆராயத் தொடங்கி விடுவார்.

* இவரது ஆர்வத்தைக் கண்ட இவரது உறவினர், அப்போது மிகவும் பிரபலமான இயந்திரங்கள் தொடர்பான இதழுக்கான 3 ஆண்டுகள் சந்தா பெற்றுத் தந்தார். அந்தப் புத்தகத்தை வைத்துக்கொண்டு அதில் இருக்கும் அனைத்தையும் செய்து பார்த்துவிடுவார்.

* பல்வேறு அறிவியல் அறிஞர்களைப் பற்றிய நூல்களை வாசித்தார். பள்ளியில் கணிதத்தில் ஆர்வமும் திறனும் கொண்டிருந்தாலும்கூட, ஒளியியல் கருவிகளை ஆராய்வதிலும் கண்டறிவதிலும் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார்.

* நிறப்பிரிகை (spectroscopy) அணுக்களைப் பற்றிய புரிதலுக்கு முக்கியமானது என அறிந்துகொண்ட இவர், தானே ஒரு ஒளிக்கதிர் ஆய்வுக்கருவியை (spectroscope) வடிவமைக்க வேண்டும் என முடிவு செய்தார். தன் ஆசிரியர் உதவியுடன் இவர் வடிவமைத்த இந்தக் கருவி, 1939-ல் ஓர் அறிவியல் கண்காட்சி யில் 2 பரிசுகளைத் தட்டிச்சென்றது.

* புரோனஸ் அறிவியல் கல்லூரியில் கல்வி உதவித் தொகை பெற்று, ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மன்ஹாட்டன் திட்டத்தில் லாஸ் ஆல்மோஸ் தேசிய சோதனைக்கூடத்தில் பணியாற்ற நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்குப் பின், ஹாவர்ட் திரும்பி 1946-ல் பட்டம் பெற்றார்.

* 1949-ல் முனைவர் பட்டம் பெற்றார். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறிதுகாலம் கலிபோர்னியா தொழில்நுட்ப கல்வி அமைப்பில் ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கு மூலக்கூறுகளின் எலக்ட்ரான் சிதறல் குறித்து ஆராய்ந்தபோது சிதறல் கோட்பாடு குறித்து ஆர்வம் கொண்டார்.

* தொடர்ந்து இதுகுறித்து மேற்கொண்ட ஆராய்ச்சிகளால், அணு சிதறல் கோட்பாட்டைக் கண்டறிந்தார். குவாண்டம் ஒளியியலில் உள்ள பல சிக்கல்களுக்கான குறிப்பாக, ஒளி மற்றும் பொருளின் குவாண்டம் மின்சார இயக்கவியல் இடைவினைகள் குறித்து ஆராய்ந்தார்.

* 1963-ல் ஃபோட்டோ கண்டறிதலுக்கான மாதிரியை உருவாக்கியதோடு, லேசர் ஒளி, லைட் பல்புகளின் ஒளி உள்ளிட்ட பல்வேறு வகையான ஒளியின் அடிப்படைப் பண்புகள் குறித்தும் விளக்கினார். ஒளியியல் இணக்கத்தின் குவாண்டம் கோட்பாட்டைக் (quantum theory of optical coherence) கண்டறிந்தமைக்காக அமெரிக்க விஞ்ஞானி ஜான் ஹால் மற்றும் ஜெர்மன் விஞ்ஞானி தியோடர் ஹன்ச் ஆகியோருடன் இணைந்து 2005-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

* மாக்ஸ் போர்ன் விருது, மைக்கேல்சன் பதக்கம், டேனி ஹெய்ன்மான் பரிசு உள்ளிட்ட பல பரிசுகள், விருதுகளையும் பெற்றுள்ளார். பல்வேறு அறிவியல் அமைப்புகளில் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

* உயர் ஆற்றல் எதிர்வினைகள், அவற்றால் உருவாகும் துகள்களின் புள்ளியியல் தொடர்பு குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவல் தடைக்கான அமைப்பின் தேசிய ஆலோசனைக் குழு ஆலோசகர் என சுறுசுறுப்பாக இயங்கிவரும் இவர், இன்று 92வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x