Published : 14 Apr 2023 06:00 AM
Last Updated : 14 Apr 2023 06:00 AM

தமிழ்நாட்டின் குறியீடாக கோயில்... - சத்குரு தமிழ் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, ஈஷா நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நம் தமிழ்க் கலாச்சாரத்தில், மண்ணை ‘தாய் மண்' எனச் சொல்லுகிறோம்.

ஏனெனில், அந்தக் காலத்திலிருந்தே மண் நம் உயிருக்கு மூலமானது, நம் தாய் போல என்று உணர்ந்து, நாம் பல்லாயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வருகிறோம். தமிழ் மக்களுக்கு விவசாயத்தில் மிகவும் ஆழமான அனுபவம் உள்ளது.

அப்படி இருப்பினும், கடந்த இருபது, முப்பது வருடங்களில் நம் மண்ணைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டோம். நம் மண்ணைக் காக்க, நாம் அனைவரும் கம்பு, வரகு, சாமை, ராகி உள்ளிட்ட சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுதானியங்கள் வளரும் இடத்தின் மண் வளமாகவே இருக்கும்.

மேலும், தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. இது ஒரு பெருமை, இது ஒரு திறமை. திறமை என்றால் ஏதோ ஒரு செயல் மட்டும் இல்லை. நாம் வாழும் முறையிலேயே நம் திறமை காட்டப்படவேண்டும். நம் தமிழ் கலாச்சாரத்தில், இலக்கியத்தில், எல்லா இடங்களிலும், சித்தர், சீடர், யோகிகள் என இருந்தனர்.

உள்நிலையில் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் என்பதால், ஒரு ஊரை உருவாக்கும் முன்னரே அங்கு கோயிலை உருவாக்கினோம்.பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றையும்விட முக்கியமானது நமது ஆன்மிகம். நாமே ஒரு கோயிலாக வாழ வேண்டும் என்பதாலேயே, தமிழ்நாட்டின் குறியீடாக ஒரு கோயிலை வைத்துள்ளோம்.

இதுதான் தமிழ் கலாச்சாரம். இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் எனது ஆசியும், வாழ்த்துகளும். இவ்வாறு சத்குரு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x