Published : 10 Sep 2017 11:57 AM
Last Updated : 10 Sep 2017 11:57 AM

பி.அ.நாராயணசாமி ஐயர் 10

தலைசிறந்த தமிழறிஞரும், சிறந்த ஆசிரியருமான பி.அ.நாராயணசாமி ஐயர் (P.A.Narayanasamy Iyer) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டியில் பின்னத்தூர் என்ற சிற்றூரில் பிறந்தார் (1862). தந்தை மருத்துவ நூல் புலவர். லட்சுமிநாராயண அவதானிகள் என்பது இவரது இயற்பெயர். கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதியாரின் திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்றார். சமஸ்கிருதம் மற்றும் வேதம் கற்றார்.

* மன்னார்குடியில் உள்ள ஆங்கிலப் பள்ளியின் தமிழ்ப் பண்டிதர் நாராயணசாமிப் பிள்ளை என்பவர் நிகழ்த்திய ராமாயண சொற்பொழிவைக் கேட்ட பிறகு தமிழின் மீதும், ராமாயணத்தின் மீதும் நாட்டம் பிறந்தது. முதன் முதலில் சுந்தரகாண்டம் படித்தார். தொடர்ந்து நிறைய படித்தார்.

* ஆசான் உதவி இல்லாமல் ஏராளமான தமிழ் நூல்களைத் தானே கற்றுத் தேர்ந்தார். ஆனாலும் சில இடங்களில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள சிறந்த ஆசிரியரைத் தேடினார்.

* திருமறைக்காட்டில் வசித்து வந்த ஈழத்துப் புலவர் பொன்னம்பலப் பிள்ளை என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழறிஞர் ஆறுமுகநாவலரின் உறவினர்.

* அவரிடம் தொல்காப்பியம், சிந்தாமணி, சிலப்பதிகாரம், கந்தபுராணம், ராமாயணம் உள்ளிட்ட தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இளம் பருவத்திலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். தன் ஆசானின் முன்னிலையில் தான் இயற்றிய ‘நீலகண்டேஸ்வரக் கோவை’ நூலை பாடி அரங்கேற்றினார்.

* 1899 முதல் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியற்றினார். கோயில்கள் குறித்த பழைய வரலாறுகளை ஆராய்வதில் நாட்டம் கொண்டிருந்த இவர், கோயில்களிலும் வேறு பல இடங்களிலும் உள்ள கல்வெட்டுகளைப் படித்தறியும் திறனை வளர்த்துக்கொண்டார். எப்போதும் எதைப் படித்தாலும் மனதில் பதிய வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டிருந்த இவர், இவற்றைத் தன் படைப்புகளிலும், உரைகளிலும் பொருத்தமான இடங்களில் வெளிப்படுத்தும் திறமை பெற்றிருந்தார்.

* ‘நீலகண்டேஸ்வரக் கோவை’, ‘தென்தில்லை’ (தில்லைவிளக்கம்), ‘உலா சிவகீதை’, ‘நரிவிருத்தம்’, ‘பழையது விடு தூது’, ‘மாணாக்கராற்றுப்படை’, ‘மருதப்பாட்டு’, ‘களப்பாழ்ப் புராணம்’, ‘வீரகாவியம்’ உள்ளிட்ட நூல்கள் மிகவும் பிரபலம். குறிப்பாக, சங்க இலக்கியத்தில் உள்ள ‘திருமுருகாற்றுப்படை’, ‘பொருநராற்றுப்படை’ போலவே மாணவர்களை ஆற்றுப்படுத்தும் இவரது ‘மாணாக்கராற்றுப்படை’ தனித்துவம் வாய்ந்ததாகப் போற்றப்பட்டது.

* குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு நூல்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு உரை எழுதினார். இவை இனிய நடை, திணை, இலக்கண விளக்கம், இலக்கணக் குறிப்பு, பாடல், பாடல் பொருள் விளக்கம், சொல்விளக்கம், எடுத்துக்காட்டு, உள்ளுறை, துறைவிளக்கம், மெய்ப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி இருப்பதோடு, ஒவ்வொரு பாடலடிக்கும் தெளிவான விளக்கமும் இடம்பெற்றுள்ளது.

* சமஸ்கிருத மொழியில் காளிதாசன் எழுதிய ‘பிரகசன’ என்ற நாடக நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் என்ற பெயரில் எழுதினார். இவரது இயன்மொழி வாழ்த்து நூல், புதுக்கோட்டை நகரின் சிறப்புப் பற்றியும் அதை ஆண்ட மன்னரைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறது.

* சிறந்த தமிழறிஞர், உரையாசிரியர், நினைவாற்றல் கலைஞர், கவிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் கொண்டிருந்த பி.அ.நாராயணசாமி ஐயர் 1914-ம் ஆண்டு ஜூலை மாதம் 52-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x