Published : 24 Sep 2017 11:01 AM
Last Updated : 24 Sep 2017 11:01 AM

கூஜாவின் கோபம்!

ம் வீட்டு அடுக்களைகளில் நீண்ட நெடுங்காலமாக அரசோச்சி வந்த பாத்திரங்கள் பலவும் அருங்காட்சியகங்கள் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய பாத்திரங்கள் பயன்பாடு மட்டுமன்றி ரசனையின் அடையாளமாகவும் அக்கால மக்களின் வாழ்க்கையில் இடம்பெற்றிருந்தன. இன்றைய தலைமுறையினர் அவற்றைப் பயன்படுத்துவது இல்லை என்றாலும் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. கூஜா அவற்றில் ஒன்று.

ரயில் கூஜா!

கோயில்களுக்குச் செல்லும்போதும் சுபகாரியங்களுக்குப் போகும்போதும் கூஜாவில் பால் கொண்டுசெல்லும் வழக்கம் இருந்தது.

குறிப்பாக ரயில் பயணத்தின்போது காபியும், பாலும் வாங்கிவரும் பாத்திரமாக கூஜா விளங்கியது. இதற்கு ரயில்கூஜா என்றே பெயர். புறப்படத் தயாராக இருக்கும் ரயில் பெட்டியை நோக்கி ஒருகையில் கூஜாவுடன் மறுகையில் வேட்டி நுனியைப் பிடித்தபடி ஓடிவரும் மனிதர்கள் ரயில் நிலையம் குறித்த ரசனை மிகுந்த சித்திரங்களில் ஒன்று. கல்யாண வீடுகளில் கூஜா தனி இடம் வகித்தது. சீர் வரிசை சாமான்களில் வெள்ளிகூஜா முக்கிய இடம் வகித்தது.

கல்யாண மண்டபத்தில் ஜமக்காளம் விரித்து ஆங்காங்கே நடைபெறும் சீட்டுக் கச்சேரிகளிலும் அரட்டை ஜமாவிலும் கூஜாவும் வெற்றிலைச் சீவலும் பக்கவாத்தியங்களாக இருக்கும்.

அலுமேலு என்றொரு கூஜா!

எங்கள் வீட்டில் வெகுகாலமாக ஒரு வெண்கலக் கூஜா இருந்தது. டவுனுக்கு நடந்தே போய் அப்பா அதில் பெயர் பொறித்து எடுத்து வந்தார். அலமேலு என்ற அம்மாவின் பெயரை அதற்குச் சூட்ட வேண்டும் என்று அப்பாவுக்குத் தோன்றியதில் வியப்பில்லை. வீட்டின் ஒரு மூலையில் அடக்கம் ஒடுக்கமாக இருக்கும் ஒரு சிறுபாத்திரம் கூஜா. அம்மாவும் அப்படித்தான் இருந்தாள்.

திருகு சொம்பு!

எங்கள் தெருவில் எதிர்வீட்டு பத்தர் வீட்டம்மாள் தன் மருமகளை அழைக்கும்போது “அடியே ராசாத்தி! அந்த திருகு சொம்பை எடுத்துகிட்டுவா! டீ வாங்கியாரேன்!” என்பார்.

கூஜாவைத் திருகு சொம்பு என்று குறிப்பிடுவது வெகு நயம். கூஜாவின் மூடியைத் திருகி திருகித்தான் மூடவும் திறக்கவும் முடியும். திருகு சொம்பு என்பதை விடவும் திருத்தமான பெயர் வேறு எதுவாக இருக்கமுடியும்?

கூஜாவும் சீடனும்!

எப்போதும் குருவின் அருகிலேயே இருக்கும் கூஜாவைப் பார்த்துவிட்டு சீடன் கேட்டான்.

“குருவே! எனக்கும் எப்போதும் உங்கள் கூடவே இருக்க ஆசையாக இருக்கிறது! இந்த கூஜாவைப் போல!”

குரு புன்னகைத்தார்.

“உன் பக்தியை மெச்சுகிறேன் ஆனால் முடிவு செய்துவிடு. கூஜாவாகவா சீடனாகவா யாராய் இருக்க சம்மதம்? கூஜா என்றால் தண்ணீரால் நிரப்பப்படுவாய், சீடன் என்றால் ஞானத்தால் நிரப்பப்படுவாய்” சீடன் குனிந்து வணங்கி அவ்விடம் விட்டு அகன்றான்!.

வடிவங்கள் பலவிதம்!

சிறிய கழுத்து, உருண்டை வயிறு, மேல் மூடி, அதில் சிறிய கைப்பிடி இது கூஜாவின் வடிவம். பல வடிவங்களில் கூஜாக்கள் இருந்திருக்கின்றன தஞ்சைக்கு அருகில் உள்ள ஏலாக்குறிச்சி கிராமத்தில் வீரமாமுனிவர் கட்டிய அடைக்கல மாதா கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்திய விதம் விதமான கூஜாக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்!

கூஜா தூக்கிகள்!

சங்கீத வித்வான்களுக்கு அருகில் எப்போதும் ஒரு கூஜாவும் உட்கார்ந்திருக்கும். அதிலிருந்து பாடகருக்கு பால் ஊற்றிக் கொடுக்கவென்றே ஒரு நபர் இருப்பார். பாடகருடன் கூஜாவைத் தூக்கிக்கொண்டு எப்போதும் ஒருநபர் கூடவே போவார். இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்ட நபர்களை கூஜாத்தூக்கிகள் என்று கேலி செய்யும் வழக்கம் உண்டு - இப்போதும்.

கூஜாவின் கோபம்!

அண்மையில் ஒரு ரயில் பயணத்தின்போது நான் உட்கார்ந்திருந்த பெட்டியில் ஒரு நபர் ஓடிவந்து ஏறினார். அவர் மார்பில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் சாய்ந்திருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்னால் கூஜாவுடன் ஓடிவந்த நபர் ஞாபகம் வந்தது. அடடா அந்த கூஜா எங்கே போயிருக்கும்?

தன்னுடைய இடத்தை பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் அபகரித்த கோபம் தாங்காமல் முந்திய ஸ்டேஷனில் இறங்கிப் போய் விட்டதோ?

தஞ்சாவூர்க் கவிராயர்.

தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x