Published : 25 Mar 2023 05:55 PM
Last Updated : 25 Mar 2023 05:55 PM

சென்னைத் தமிழிசைச் சங்கம் - சிங்கப்பூர் கலாமஞ்சரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிங்கப்பூர்: சென்னைத் தமிழிசைச் சங்கம் - சிங்கப்பூர் கலாமஞ்சரி (தமிழ் இணைப் பரப்பு மன்றம்) தமிழ் இசைப் பயிற்றுவிக்கும் நிறுவனம் செய்துகொண்ட புரிந்துணர்வு கையொப்பமிடல் நிகழ்ச்சி 20.3.23 சிங்கப்பூர் தேசிய வாரியக் கட்டிடத்தின் பாசிபிளிட்டி அறையில் நடைபெற்றது. இவர்களின் தமிழிசைப் பயணம் பற்றிய விளக்கப் படக் காணொளி சிறப்பாகத் தயாரிக்கப்பட்டு நல்ல அரிய பல வரலாற்றுச் செய்திகளை மக்களிடம் பகிர்ந்துகொண்டது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ‘நிகழ்வில் பேராசிரியர் சுப.திண்ணப்பன் தமது தலைமையுரையில் தமிழிசையின் தொன்மை, வளமை, நன்மைகளைப் பட்டியலிட்டு இந்நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததெனப் பாராட்டிப் பேசினார். தமிழிசையைப் பாடுதல் அருகிவரும் இக்காலத்தில் இத்தகைய மீட்டெடுக்கும் முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினராக இந்திய மரபுடமைக் கழகத்தின் தலைவர் மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆர்.இராஜாராம் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில் இந்த விழாவின் நோக்கத்தையும் மேலும் இதற்காகக் கலாமஞ்சரி அமைப்பு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு மேன்மையடைந்ததையும் பற்றிக் குறிப்பிட்டார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சிங்கையில் தமிழ் இசையில் நிகர்நிலைப் படிப்புகளுக்கு, கலாமஞ்சரி அமைப்பினரால் சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் மூலம்த் தேர்வுகள் நடத்தி மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிட இயலும் என்பது மகிழ்ச்சிக்குரியது என்று கூறினார்.

இசையறிஞர் அரிமளம் பத்மநாபன் தமது வாழ்த்துரையில் கலாமஞ்சரியின் ஆலோசகராகத் தாம் பங்களிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். மேலும் இதன் மூலம் வருங்காலத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் உருவாகும் சூழலைத் தாம் மகிழ்வுடன் எதிர்பார்ப்பதாகக் கூறினார். சௌந்தரநாயகி வயிரவன் தமது உரையில் கலாமஞ்சரி அமைப்பு தமிழிசை மூலம் செய்துவரும் பல நல்ல சமூகப் பணிகளைக் குறிப்பிட்டுப் பேசினார். தாமும் தமக்கு உறுதுணையாக இருந்துவரும் சமூக அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த ஒப்பந்தத்திற்கு சாட்சி கையெழுத்திட்ட டாக்டர் வெள்ளையப்பன் மற்றும் டாக்டர் கருணாநிதி ஆகியோருக்குச் சிறப்பு செய்யப்பட்டது. இசையாசிரியர்உமா பிரகாஷ் தமது மாணவர்களுடன் நேர்த்தியாகச் சிலத் தமிழிசைப் பாடல்களைப் பாடி அனைவரியும் மகிழ்வித்தார். சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் முதல்வர் டாக்டர் மீனாக்ஷி தனது நன்றியுரையில் தமிழிசையின் முக்கியத்துவத்தையும் பயனையும் குறிப்பிட்டு இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

ஒளியொளிக் காட்சிகளை நட்சத்திரம் பிரேம்குமார் மற்றும் ஜெயக்குமார் இணைந்து கையாண்டனர். விழா நிகழ்ச்சியினை திருமதி அகிலா முத்து அழகானத் தமிழில் மிக நேர்த்தியாக வழங்கினார். மிக மகிழ்ச்சியான நிறைவான ஒரு நல்ல நிகழ்வு தமிழிசையின் பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக நடந்தேறியது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x