Published : 12 Aug 2017 10:08 AM
Last Updated : 12 Aug 2017 10:08 AM
வ
சமாக மாட்டினீர்கள். இம்முறை நான் எந்த உணவைப் பற்றியும் எழுதப் போவதில்லை. கதறவைக்கும் ஒரு கண்ணீர்க் காவியத்துக்குத் தயாராக வேண்டியது உங்கள் ஊழ். எப்பப் பார் உணவைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் உண்பதைப் பற்றி வேறு எப்போது பேசுவது? அதுவும் எம்பெருமான் யாருக்கு, எந்த இடத்தில், எம்மாதிரியான தங்க ஆப்பு தயாரித்து வைப்பான் என்பது தெரியாது. இந்த, கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்பார்களே, அதைச் சொல்கிறேன்.
சரி, ஒரு கேள்வி. மனசாட்சிக்கு விரோதமின்றி உண்மையாக பதில் சொல்லுங்கள். உங்களில் எத்தனை பேருக்குப் பார்க்க லட்சணமாக பஃபே உண்ணத் தெரியும்? நமக்கு நாமே எல்லாம் மற்ற விஷயங்களில் சரி. சாப்பிடுகிற சமாச்சாரத்தில் இந்த பஃபே கலாச்சாரமென்பது ஒரு கொடுந்தண்டனை என்றே நினைக்கிறேன்.
ஒரு சமயம் சிங்கப்பூருக்குப் போயிருந்தேன். அழைத்த உத்தமர்கள் பெனின்சுலா என்ற பேர்கொண்ட ஓர் உயர்தர ஓட்டலில் மரியாதையாகத் தங்கவைத்தார்கள். உயர்தரம்தான் என்றாலும் அங்கே காலை உணவுக்குக் கையேந்தத்தான் வேண்டும். மகாப்பெரிய அரங்கம் ஒன்றில் வரிசையாக நூற்றுக்கணக்கான உணவு வகைகள் அணி வகுத்துக்கொண்டிருந்தன. பல நாட்டு வியாபார வேந்தர்கள் வந்து போகிற தலம் என்பதால் எல்லா தேசத்து உணவு வகையும் அங்கு இருந்தன. அடுப்பின்மீது அமர்ந்திருந்த ஒவ்வொரு பாத்திரத்துக்கு முன்பும் அந்த உணவின் பெயர் எழுதப்பட்டிருந்தது. யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடலாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
நல்ல திட்டம்தான். விதவிதமாக ருசித்துப் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்குப் பெரும் வேட்டை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் என் பிரச்சினை அங்கே வேறாக இருந்தது. எந்தப் பாத்திரத்தைத் திறந்தாலும் உள்ளே இருப்பது நண்டா, தேளா, நட்டுவாக்கிளியா என்று சந்தேகம் வந்தது. சேச்சே, பொழுது விடிகிற நேரத்தில் சமூகமானது இப்படி வளைத்துக்கட்டி அசைவம் உண்ண விரும்பாது என்று நினைத்தபடி திரும்பிப் பார்த்தால், யாரோ ஒரு சீனத்து ராஜ்கிரண் முழங்கை நீளத்துக்கு எலும்பை எடுத்துக் கடித்துக் களேபரம் பண்ணிக்கொண்டிருந்தார். ஈர்க்குச்சிக்கு இஸ்திரி போட்ட மாதிரி இருந்த சில பெண்கள் நிறம் மாறிய முழுக் கோழியை மேசைக்கு நடுவே வைத்து ஆளுக்கொரு பக்கம் கிள்ளிக் கிள்ளி உண்டு கொண்டிருந்தார்கள். கோழிதானா? அளவைப் பார்த்தால் கோழியாகத் தெரியவில்லை; ஒருவேளை ஆமையாக இருக்கலாம் என்று தோன்றியது.
எம்பெருமானே என்று அலறியது என் அந்தராத்மா. அன்றைக்கு ஒரு தட்டை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு உணவாகத் திறந்து பார்த்துக்கொண்டே இருந்தேனே தவிர, எதை எடுப்பது, எதை எடுக்காதிருப்பது என்றே புரியவில்லை. யாரையாவது கேட்டால் அவசியம் உதவியிருப்பார்கள். ஆனால் நாணத்தில் சாம்புதலுற்று நகர்ந்துவிட்டேன்.
அதற்காகச் சாப்பிடாமலே இருந்து விட முடியுமா. ஒருவாறு என்னைத் தேற்றிக்கொண்டு ஒரு வெண்ணுடை வேந்தனை அணுகி வெஜ் என்பது மட்டும் கேட்கிறபடியாகவும், பிற சொற்கள் எதுவும் அவருக்குப் புரியாத படியுமாக சேர்ந்தாற்போல் நாலைந்து வரிகள் பேசினேன். வெள்ளையரை வேறெப்படிப் பழிவாங்குவது? அவர் கைகாட்டிய திசையில் நாலைந்து முட்டை மலைகள் இருந்தன. வெள்ளை முட்டை. பிரவுன் நிற முட்டை. இளம் பச்சை நிறத்திலும் ஒரு முட்டை இருக்கிறது. ஒருவேளை காண்டாமிருக முட்டையோ என்னமோ. சாம்பல் நிற முட்டை. இளம் சிவப்பு முட்டைகள். இன்னும் என்னென்னமோ. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித அளவு. எல்லாமே கோள வடிவமல்ல. கோலி குண்டு போன்ற முட்டைகளையும் கண்டேன்.
நம் ஊரில் அசைவர்களுக்குக் கூட அத்தனை தினுசு சாத்தியமில்லை. உலகில் என்னவெல்லாம் உண்கிறார்கள்!
ஆனால், என் பிரச்சினை அதுவல்ல. நான் முட்டையும் உண்ணா வீர வெஜிடேரியன். எனக்குத் தேவை நான்கு இட்லிகள். அல்லது இரண்டு தோசை. பொங்கல் என்றால் சந்தோஷம். பூரி என்றால் கும்மாளம். ஒன்றுமே இல்லையா? ஒழிகிறது, பிரெட் எங்கே இருக்கிறது? அந்தச் சனியன் எனக்கு அசைவத்தைக் காட்டிலும் பெரும் விரோதி. இருந்தாலும் பாதகமில்லை என்றே நினைத்தேன். என் துரதிருஷ்டம், அத்தனை பெரிய அரங்கில் பிரட் எங்கே வைக்கப்பட்டிருந்தது என்பது எனக்குத் தெரிய வில்லை.
இறுதியில் தட்டு நிறைய அன்னாசிப் பழத் துண்டுகளையும் கொய்யாத் துண்டுகளையும் எடுத்துப் போட்டுக்கொண்டு வெண்ணெய் போல் இருந்த ஏதோ ஒன்றை நாலைந்து கரண்டிகள் அள்ளி அதன்மீது கொட்டிக்கொண்டு வந்து அமர்ந்தேன்.
ஆனால் சாப்பிட்டுப் பார்த்தால் அந்த வெள்ளைச் சரக்கு தோசை மாவு போலிருந்தது. நறநறப்பு இல்லையே தவிர அது நிச்சயமாக வெண்ணெய் இல்லை. இதற்குள் இரண்டாவதோ, மூன்றாவதோ ரவுண்டில் தனக்குரிய உணவை எடுத்துக்கொண்டு வந்து எதிரே அமர்ந்த யாரோ ஒரு நல்லவர், எதற்கு இத்தனை ஃப்ரெஷ் க்ரீம் என்று கேட்டார். வாழ்நாளில் அதற்குமுன் ஃப்ரெஷ் க்ரீம் என்றொரு வஸ்துவை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. எனவே ஒரு மாதிரி ஆகிவிட்டது. 'இது அசைவமில்லையே' என்று மட்டும் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு, முன்வைத்த வாயைப் பின்வைக்காத வெறியுடன் அன்னாசிப் பழத்தை ஃப்ரெஷ் க்ரீமில் தோய்த்துத் தோய்த்து உண்ணத் தொடங்கினேன்.
அன்றைய எனது அனுபவத்தை வாழ்நாள் முழுதும் என்னால் மறக்க இயலாது. இனி எங்கு போனாலும் எனக்குரிய உணவை உரிமையுடன் கேட்டுத் தெரிந்துகொண்டுதான் களத்தில் இறங்கவேண்டும் என்று முடிவு செய்த நாள் அது.
இன்னொன்றும் தெரிந்துகொண்டேன். என்னால் ஒரு கையில் தட்டை வைத்துக்கொண்டு மறு கையால் எடுத்துப் போட்டுக்கொள்ள முடியாது என்பது. அன்னாசிப் பழத் துண்டுகள் நல்லவைதான். ஆனால் அந்த ஃப்ரெஷ் க்ரீம் தன் வேலையைக் காட்டி விட்டிருந்தது. அன்றைக்கு உண்டுகொண்டிருந்த நேரமெல்லாம் நான் உண்ணாதிருந்ததைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபடியால் ஃப்ரெஷ் க்ரீமானது எனக்குத் தெரியாமல் என் சட்டை முழுதும் சிந்திச் சீரழித்துவிட்டிருந்தது.
எப்படிப் பார்த்தாலும் ஒரு ஏழு நட்சத்திர ஓட்டல் என் ஒருவனைத் திருப்திப்படுத்துவதில் படுதோல்வி கண்ட தினம் அது. இருக்கட்டும், சிங்கப்பூர் சரித்திரத்தில் ஒரு கரும்புள்ளியாவது வேண்டாமா?
சென்னை திரும்பிய பின்பும் மேற்படி சம்பவத்தை நினைத்து நினைத்து மனத்துக்குள் மிகவும் வருந்திக்கொண்டிருந்தேன். என் வருத்தத்தைப் போக்கும் விதமாக வெகு சீக்கிரத்திலேயே வேறொரு விருந்துக்கு அழைப்பு வந்தது. இம்முறை உள்ளூர்தான். இதுவும் உயர்தர ஓட்டல்தான். அழைத்தவர் ஒரு பிரபல தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர். வெற்றிகரமாக முடிவடைந்திருந்த அவரது ஒரு நெடுந்தொடர்க் கலைஞர்களுக்கு விடைகொடுக்கும் விதமாகவும், அடுத்தத் தொடரை அலங்கரிக்கவிருந்தவர்களை வரவேற்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து. இந்த விருந்தில் ஒரு கை பார்த்துவிடுவது என்று கொலைவெறியுடன் புறப்பட்டேன். ஏ.சி அரங்கம். ஏராளமான பிரமுகர்கள். அன்பான நலன் விசாரிப்புகள். அப்புறம் உணவு. அதே வரிசை அணிவகுப்புகள். தமிழன் தன்னிகரற்றவன். இங்கே சைவம், அங்கே அசைவம் என்று பிரித்து வைத்திருந்தான். ஆகவே ஒரு சிக்கல் ஒழிந்தது. சிங்கப்பூரில் சாப்பிடாமல் விட்டதைச் சேர்த்து இங்கே ஒரு வழி பண்ணிவிடுவது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினேன்.
ஆனால் இம்முறை பிரச்சினை வேறு விதத்தில் வந்தது. ம்ஹும். அதை இன்னும் இருபது சொற்களிலெல்லாம் சொல்லி முடிக்க இயலாது. அடுத்த வாரம் சொல்கிறேன். சொகுசை வேண்டுமானால் ஒரு கட்டுரையில் எழுதிவிடலாம். சோகத்தை இரு பாகங்களாகத்தான் விவரிக்க முடியும்.
- ருசிக்கும்…
எண்ணங்களைப் பகிர:
writerpara@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT