Published : 25 Sep 2017 09:32 AM
Last Updated : 25 Sep 2017 09:32 AM
அ
ண்மையில் சுந்தர ராமசாமியின் பழைய கோப்புகளைப் பார்த்தபோது, நைந்த தட்டச்சு செய்த தாள் கிடைத்தது. காந்தியின் நாகர்கோவில் கூட்டம் பற்றி அவர் எடுத்த குறிப்புகள்.
1. காந்திஜியின் நாகர்கோவில் கூட்டம்: 1927 அக்டோபர் மாதம்.
2. இந்தியாவைச் சேர்ந்த மிகவும் அழகான பிரதேசம் நாகர்கோவில். ஆனால் இந்தியாவில் வேறு எந்த பாகத்திலும் இல்லாதவாறு இங்கு தீண்டாமைத் தாண்டவமாடுகிறது.
3. ஒரு இந்து மதவாதியாகவே இந்தப் பிரச்சினையை அணுகுகிறார் காந்திஜி. இந்த பயங்கரமான கொள்கைக்கு ஆதாரமோ பிரமாணமோ இல்லை என்பது அவர் கோட்பாடு. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு அச்சிடப்பட்டுள்ள ஒவ்வொன்றுமே சாஸ்திரம் ஆகாது என்றும் மூலாதாரக் கொள்கைக்கு விரோதம் ஆகவும் அனுபவபூர்வமான பகுத்தறிவுக்கு முரணாகவும் இருக்கின்றவற்றை சாஸ்திரம் என்று ஏற்றுக்கொள்ள அவசியம் இல்லை என்றும் அவர் நாகர்கோவில் கூட்டத்தில் வற்புறுத்தியிருக்கிறார்.
4. அவர் கூறியுள்ள மற்றொரு கருத்து தீண்டாமைக்கு எதிராக கிளர்ச்சியை முடுக்க வேண்டும் என்றும் விவேகமுள்ள அரசாங்கம் அதை வரவேற்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.
5. மற்றொரு முக்கியமான கருத்து தீண்டாதவர்களுக்காக தீண்டாதவர்கள் மட்டுமல்ல உயர்சாதி இந்துக்கள்தான் ஆத்மார்த்தமாகத் தீவிரமாக வலுவாக போராட வேண்டும் என்று அவர் கூறினார்.
6. போராட்டத்தை சாத்வீகமாக நடத்த வேண்டும் என்பது அவரது முடிவு. தீண்டாமைக்கு எதிரானப் போராட்டத்தையும் சத்தியத்திற்கானப் போராட்டமாகவே காந்திஜி கருதினார். சத்தியம் எக்காலத்திலும் பலாத்காரத்தினால் நிலைநிறுத்தப்பட மாட்டாது என்பது அவர் கருத்து.
7. பொதுமக்களின் அபிப்பிராயத்தை இதற்கு எதிராக உருவாக்க வேண்டும். சாத்வீக அடிப்படையில் விஷயங்கள் நடைபெற வேண்டும். சாத்வீகத்தை அன்பு என்று கூறலாம். இந்தப் பிரச்சினைக்கு விடுதலை தேடுபவர்கள் பிறரைத் துன்பப்படுத்தக் கூடாது. தன்னைத்தானே துன்பப்படுத்திக்கொள்ள நேர்ந்தாலும் பிறரைத் துன்பப்படுத்தக் கூடாது. இது ஒரு ஆன்ம பரிசுத்த இயக்கம். துவேஷத்துக்கோ அவசரங்களுக்கோ மிகைப்படக் கூறுதலுக்கோ இங்கு இடமில்லை. பிரச்சாரத்தின் மூலம் பொதுஜன அபிப்பிராயத்தைச் சாதகமாக திருப்பிக்கொண்ட பின்னரும் பிரச்சாரத்தைத் திருப்பிக்கொள்ளவில்லை என்றால் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற முடியவில்லை என்றால் சாதி இந்துக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை என்றால் சத்யாகிரகத்தில் இறங்கிவிட வேண்டும் என்று அவர் நாகர்கோவில் மக்களுக்கு யோசனை கூறுகிறார்.
8. தீண்டாமை இந்து மதத்தின் அம்சம் அல்ல. அது இந்து மதத்தில் படிந்துள்ள ஒரு அழுக்கு.
9. தீண்டாமை பாவத்தை இந்துக்கள் அகற்றாவிட்டால் ஓராண்டு சென்றாலும் சரி அல்லது நூறு ஆண்டுகள் சென்றாலும் சரி சுய ராஜ்ஜியம் கிடைக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT