Published : 03 Feb 2023 05:38 PM
Last Updated : 03 Feb 2023 05:38 PM
ஜெர்மனியில் சிந்திக் கிடக்கும் தமிழ் முத்துக்களை ஒன்றாய் இணைத்து மனம் வீசும் தமிழ் மாலையாய் கோர்க்கும் பணியை முன்சென் தமிழ் சங்கம் செய்து வருகிறது. இந்த தமிழ் சங்கத்தின் பல முயற்சிகளில் முத்தாய்ப்பான ஒன்றுதான் ஜனவரி 28. இந்நாளில் கோலாகலமாக அரங்கேறிய பொங்கலோ பொங்கல் நிகழ்வில், முன்சென் வாழ் தமிழ்க் குடும்பங்கள் திரளாக பங்கேற்றனர்.
அன்றைய தினத்தின் தமிழ் கலாசார நிகழ்வுகளைக் பார்த்து மகிழ்ந்தனர். முன்சென் (Munich) நகரில் அமைந்துள்ள Trudering Kulturzentrum வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு கிளம்பி ஐரோப்பாவிற்கு ஒரு நாள் சுற்று பயணம் சென்று வந்ததோ என்ற உணர்வை தந்தது. விழா தொடக்கத்தில் நுழைவாயிலில் விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட மாக்கோலம் அனைவரையும் வரவேற்றன.
இந்த பொங்கல் திருவிழா உணர்வு நாள் முழுதும் கூடிக் கொண்டே போனது என்றால் அது மிகையாகாது. கொட்டும் பனிமழைக்கு இடையில் -3 டிகிரியில் அடுப்பை கூட்டி அதன் மீது பானை வைக்கப்பட்டது. கரும்பும் மஞ்சளும் புடை சூழ, பட்டாடை உடுத்திய ஆணும் பெண்ணும் அகமகிழ உறையும் பனியில் கூடி நின்றனர். இதன் சிறப்பு விருந்தினர் மேதகு தூதரக செயலர் மோஹித் யாதவ் தம் கைகளால் பானையில் அரிசியை போட்டார்.
நெருப்பின் தீயால் ஆனந்தமாய் பொங்கியது பொங்கல். கூடிநின்ற தமிழர்கள் 'பொங்கலோ பொங்கல்!' எனக் கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர். தொடர்ந்து தைத்திருநாளுக்கே உரித்தான அடையாள விளையாட்டாம் உறியடித்தல் உற்சாகத்துடன் நிகழ்ந்தன. அப்போது நாசியின் சுவாசத்தில் மண் மனம் கலந்து கடந்து சென்றதென்பது உண்மை.
விழா மன்றத்தின் நுழைவு வாயிலில் நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக சிறுதானிய காட்சியும், கைத்தறி நெசவு துணிகளையும் காட்சிப்படுத்தபட்டன. தமிழ் பாரம்பரிய முறையில் விழாவின் தலைமை விருந்தினர் மேதகு தூதரக செயலர் மற்றும் விழாவிற்கு உழைத்த தன்னார்வலர்கள் இணைந்து குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.
சங்கத்தின் துணைத்தலைவர் நிர்மல் ராமன் வரவேற்புரை வழங்க, சிறப்பு விருந்தினர் மேதகு தூதரக செயலர் ஜெர்மனிக்கும் தமிழகத்திற்குமான பல நூற்றாண்டுக்கு மேலான தொடர்பை நினைவுப் படுத்தினார். தமிழ் மக்கள் ஜெர்மனிய நண்பர்களை தமிழ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் சென்று நம் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
சங்கத்தின் தலைவர் செல்வகுமார் பெரியசாமி நம் முன்சென் தமிழ்சங்கத்தின் நடவடிக்கைகள், தமிழ் நாடு அரசுடன் இணைந்து செயல்படுத்திவரும் ஜெர்மனிக்கான சிறப்பு தமிழ் வளர்ச்சித் திட்டங்களை விளக்கினார். அதன்பிறகு சிறுதானியங்களின் பயன்கள் பற்றியும், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று யுனெஸ்கா 2023ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்ததை தன்னார்வலர் அருணாச்சலம் நினைவுபடுத்தினார்.
இதனால், பெருமளவு இந்திய சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஜெர்மானிய மக்களிடம் எடுத்துச்செல்ல நம் அனைவரும் முன்வரவேண்டும் என மேடையில் அறிவுத்தப்படட்டது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக மேடையை அலங்கரித்தன. நிகழ்ச்சி மேடையில் முதலாய் அரங்கேறியது கண்களுக்கு விருந்தாய் அமைந்த நம்முடைய பரதநாட்டிய நடனம்.
பிறகு சங்கம் நடத்தும் தமிழ் பள்ளியில், மொழி கற்கும் சிறார்களின் கலை நிகழ்ச்சி வருங்கால தமிழ் சந்ததி மீது புது நம்பிக்கை அளிக்கும் விதமாய் அமைந்தது. பண்டைய சிலம்பம், பட்டிமன்றம், மொழிசார் விளையாட்டுகள் மேடையில் முக்கிய இடம் பிடித்தன. கண் பறிக்கும் வண்ண உடைகளுடன் கொத்து கொத்தாய் குழந்தைகளும் பெண்களும் மேடையில் ஆடினர்.
இவர்களது அழகிய நடனங்கள் மனதை விட்டு நீங்க சில நாட்கள் பிடிக்கும். இயலும் நாடகமும் அலங்கரித்த மேடையில் இசை இல்லாமலா? தேர்ந்த கலைஞர்களால் தொடுக்கப்பட்ட இசை சரத்தில் இதயம் சற்று லயித்து தான் போனது. மனதிற்கு புது தெம்பும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருவது மரபு சார்ந்த விழாக்கள் என்பதை இப்பொங்கல் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
இத்தகு ஒரு விழாவை ஏற்பாடு செய்து வெற்றிகரமாய் அரங்கேற்றியமைக்காக முன்சென் தமிழ் சங்கம் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT