Published : 25 Jul 2014 04:44 PM
Last Updated : 25 Jul 2014 04:44 PM
கல்வி, பொருளாதார அடிப்படையில் மேம்பட அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் அ.கருப்பையா.
சிறுபான்மையினர் உலமாக்கள், பணியாளர்கள் நலவாரியத்தில் என்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?
கல்வி உதவித்தொகை மட்டுமின்றி திருமண உதவித்தொகையாக ரூ.2000, மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6000, கருச்சிதைவு, கருக்கலைப்பு நேர்ந்தால் ரூ.3000, முதியோர் ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.1000, கண்ணாடி அணிய ரூ.500, விபத்தால் ஏற்படும் மரணம் அல்லது ஊனத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை என பல உதவிகள் வழங்கப்படுகின்றன.
சிறுபான்மையினருக்கு வேறு என்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் சிறு குற்றங்களுக்கு தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளிவரும் சிறுபான்மையின மக்களுக்கு மறுவாழ்வு நிதயுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படும். இதற்கான விண்ணப்பம் பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தை அணுகவேண்டும்.
முஸ்லிம் பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறதா?
ஆம். தமிழகத்தில் வாழும் வயது முதிர்ந்த, ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நலனுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, முஸ்லிம் ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத் தும் வகையில் உதவிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு சங்கத்துக்கும் தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படு கிறது. சங்கத்தின் நிதி ஆதாரத்துக்கேற்ப ஒரு சங்கத்துக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது.
சிறுபான்மை பிரிவினருக்கு பிரத்தியேகமாக வேறு என்ன நிதியுதவி வழங்கப்படுகிறது?
தமிழகத்தில் வசிக்கும் கிறிஸ்தவ மதத்தினர் ஜெருசலேத்துக்கு புனிதப் பயணம் செல்ல நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 500 பயணிகளுக்கு புனிதப் பயண நிதியுதவி வழங்கப்படுகிறது.
புனிதப் பயணம் மேற்கொள்ள அடிப்படை தகுதிகள் உண்டா?
ஆம். தமிழகத்தை சேர்ந்தவராக, கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும். வெளிநாடு பயணம் மேற்கொள்ள உடற்தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட் இருப்பது அவசியம். வயது வரம்பு கிடையாது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 4 பேர் செல்லலாம். 2 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்.
புனிதப் பயணம் மேற்கொள்ள விண்ணப்பம் எங்கு பெறுவது?
அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
(மீண்டும் நாளை சந்திப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT