Published : 19 Dec 2016 03:31 PM
Last Updated : 19 Dec 2016 03:31 PM
குதிரைக்கு குர்றம் என்றால் யானைக்கு அர்றம் என்பது. அதாவது நீங்கள் ஒன்று சொன்னால் நான் ஒன்று சொல்வது... அப்புறம் எப்படி குடும்பம் விளங்கும்? குடும்பங்கள் மகிழ்ச்சிபெறவேண்டும் என்றால் முதலில் அன்பு முக்கியம். இதற்காக கவலைப்பட்டு எடுத்ததுதான் 'புருஷன் வெட்ஸ் பொண்டாட்டி' குறும்படம். கவலைப்பட்டு என்றால் ஏதோ கண்ணீர் சிந்தி அல்ல. சிரிக்கசிரிக்க என்று எடுத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே 'கண்ணாடி முன்னாடி ஒரு கிறுக்கன்' தந்த அதே நவீன்குமார்தான் இக்குறும்படத்தையும் நகைச்சுவையாக தந்திருக்கிறார்.
புதிதாக திருமணம் ஆன சில மாதங்களில் சண்டையாகவே மாறும் கருத்துவேறுபாடுகள் என்று சில வரத்தான் செய்கிறது. அதைக் களைவதற்கு இப்படத்தில் புது ஐடியா ஒன்று சொல்லியிருக்கிறார்கள். அதை செயல்படுத்தும் விதத்தையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் அது ஒர்க்அவுட் ஆகும் போலத்தான் தெரிகிறது.
அப்படியானால் இப்படத்தின் செய்தி இளந்தம்பதிகளுக்கு மட்டுந்தானா என்றால் இல்லை. பொதுவாகவே அன்பின் வாசலில் காத்திருக்கும் இளைய உள்ளங்கள் யாவருக்கும் இது அழகாக பொருந்தக்கூடியதுதான்.
இப்படத்தில் முன்மொழியப்பட்ட யோசனை ஏதோ நகைச்சுவைக்காக மட்டும் அல்ல. திருமண உறவுகள், சம்பிரதாயங்களின் பிடியில் மட்டுமே அமைந்தாலும் அது இதயங்களின் பிணைப்புகளிலிருந்தும் மலர வேண்டும். இதற்காக ஒரு திருமணமான இணைகள், இரண்டு திருமணமாகாத, அதற்கான முன்முயற்சிகளில் அலைபாயும் இரண்டு வெவ்வேறு இணைகள் என ஆறுபேரை வைத்து ஒரு மினி சினிமாவையே தந்துவிட்டார் இயக்குநர் நவீன்குமார்.
வினு அரவிந்த், ஜெயப்பிரகாஷ், வைரம், சுஜா, பவானி, தேவிகா ஆகியோரின் நடிப்பில், கேமரா ரத்தினக்குமார், இசை சாந்தன் உள்ளிட்டோரின் ஆர்வமிக்க பங்களிப்பில் குறும்படம் எளிமையாக அழகாக வந்துள்ளது. சர்வானி பிக்சர்ஸ் மற்றும் ராம சஞ்சீவ ராவ் புரொடெஷ்ன்ஸ் தயாரித்துள்ளது.
குடும்பங்கள் கலகலத்துப் போய்விடக்கூடாது என்பதற்காக கலகலப்பாக எப்படி சொல்லியுள்ளார்கள் என்பதை நீங்களும் பாருங்களேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT