Last Updated : 03 Dec, 2016 03:04 PM

 

Published : 03 Dec 2016 03:04 PM
Last Updated : 03 Dec 2016 03:04 PM

எல்லையிலே ராணுவத்தினர் கஷ்டப்படும்போது..!

பணமாற்றப் பிரச்சனை துவங்கியவுடன் வங்கி, ஏடிஎம் வரிசையில் அவதிப்படும் மக்களை "எல்லையில் நிற்கும் வீரர்களுடன்" அபத்தமாய் ஒப்பிட்டதை யார் முதலில் துவங்கியதெனத் தெரியவில்லை. அந்த ஒப்பீடு எந்த வகையிலும் பொருந்தாத ஒன்று. ஆனால் அந்த ஒப்பீடு செய்த ஆட்களைவிட, யாரை நோக்கி எறிகிறோம் என்றே தெரியாமல் "எல்லையிலே... / எல்லையில் ராணுவம்... / எல்லையிலே வீரர்கள் நிற்கையில்..." என வீரர்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் செய்யப்பட்ட பகடிகள் வரம்பு மீறியவை.

இரண்டு நாட்களுக்கு முன் காஷ்மீர் தாக்குதலில் சில ராணுவத்தினர் இறந்த செய்தி அறிந்திருப்பீர்கள். அந்தத் தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து உயிர் தப்பியவர்களில் எனக்குத் தெரிந்தவரும் ஒருவர். அவருக்கு மிக மிக அருகில்தான் அந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. ஏற்கெனவே பல மோசமான தருணங்களைச் சந்தித்திருந்தாலும், இந்தமுறை மரணம் மிக நெருங்கி வந்ததுபோல் உணர்ந்ததாய் இருந்தது அவரின் பதற்றமான பேச்சு.

ஐம்பதை நெருங்குகின்ற அவரின் இளமைக் காலத்தின் பெரும்பகுதி ராணுவத்திலேயே கழிந்திருக்கின்றது. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக மனைவி, மகனைப் பிரிந்து வடகிழக்கு, பஞ்சாப், காஷ்மீர் என பணியாற்றி வருகிறார். ஒரே மகன் இப்போது கல்லூரியில் இருக்கிறான். சிறு விபத்தொன்றில் மகன் காயம்பட்ட நாளில் மட்டும் சுமார் இருபது முறை போனில் விசாரித்திருக்கிறார். அதிலிருக்கும் ஒரு கசப்பான உண்மை, மகனுக்கு அப்பாவோடு மிகப்பெரிய பிணைப்பும் ஒட்டுதலும் ஏற்படவில்லை. கிட்டத்தட்ட தந்தையின் நேரிடையான பாசம், அரவணைப்பு ஆகியவை கிட்டாத ஒரு பிள்ளையென்பதாலும் அப்படியிருக்கலாம்.

வருடத்தில் இரண்டு மூன்று முறை விடுப்பில் வருவார். தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி ஏதேனும் செய்து கொண்டேயிருப்பார். விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பும் நாட்களில் அவர் முகத்தில் இனம்புரியாக் கவலை மற்றும் தனிமையின் ரேகைகள் ஓடத் தொடங்கிவிடும். வலுவிழந்தவராய்த் தோன்றுவார். அக்கம்பக்கம்கூட பேசப் பிடிக்காதவராய்த் தோன்றுவார். ரயில் நிலைய வழியனுப்பல்கள் இன்னும் சோகம் மிகுந்ததாய் இருக்கும். "இத்தன வருசம் இருந்தது போதும்தான்... செரி.. இன்னொரு ரெண்டு வருசம் இருந்துட்டு வந்துடுறேன்" என்பதையே பல ஆண்டுகளாகச் சொல்கிறார். அவரின் ஓய்வு பெறுதலுக்காக அவரின் குடும்பமும், உறவுகளும் மௌனமாய் காத்திருக்கின்றனர். ராணுவத்தினருக்கு சம்பளமும், சலுகைகளும் இருக்கலாம். எனினும் ராணுவத்தினரின் கடமை, தியாகங்களுக்கு சமன் செய்யக்கூடியதாய் இருந்துவிட முடியாது.

நேஷனல் ஜியோகிராபி சேனலில் அவ்வப்போது இந்திய "எல்லைப் பாதுகாப்புப் படை" (BSF) குறித்து ஆவணப்படம் ஒளிபரப்புகிறார்கள். நேரம் ஒதுக்கிப் பாருங்கள் அல்லது யூடியூபில் தேடுங்கள். கட்ச் குடாவிலும், தார் பாலைவனத்திலும், பஞ்சாபின் நெல் வயல்களிலும் எல்லைகளைக் காப்பது என்பது சினிமாக்களில் இருப்பதுபோல் எளிதானதன்று. பஞ்சாபில் எல்லைகளைக் கடந்தும் விவசாயிகள் நிலம் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்கள் நிலத்திற்குச் செல்கையில் சோதனையிட்டு அனுப்புவதோடு, விவசாயப் பணிகளில் இருப்போருக்கு பாதுகாவலாகவும் இவர்கள் நிற்கிறார்கள். படகு, ஒட்டகம், ஜீப், நடை என பலவிதங்களில் எல்லையெங்கும் அவர்கள் பயணித்தபடியே இருக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் எல்லா நிலைகளிலும் கடும் உழைப்பைத் தருகிறார்கள். எந்த உயிரினங்களும் அற்ற வெட்ட வெளியில் இரவு பகலாய் தங்கி எல்லையை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பது எளிதான காரியமா என்ன?

முகம் தெரியாத எதிரிக்குக் காத்திருத்தலும், இது எதுவரை எனத் தெரியாத தனிமை தரும் உளைச்சலும் எதையும்விடக் கொடூரமானது. இன்னும் பனிச் சிகரங்களில் காவலிருக்கும் ராணுவத்தினர் சந்திக்கும் இடர்பாடுகள் எத்தகையதென விளக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு எதிரி பகை நாட்டவர்கள் மட்டுமல்ல, அங்கு நிலவும் தட்பவெப்பமும் பல நேரங்களில் மிகப்பெரிய எதிரிதான்.

யாரையோ கிண்டல் செய்வதற்காக, ஒரு பகடிக்காக, மீம்ஸுக்காக எளிதாக வாய்த்த ஒரு வசனமாக "எல்லையில்... எல்லையில்..." என இடைவிடாது இங்கே கெக்கலிக்கிறோம், சிரிக்கிறோம். (நானும் அவ்விதம் ஏதேனும் பின்னூட்டம் எழுதியிருந்தால் அதையொரு அவமானமான செயலாகவே இப்போது கருதுகிறேன்).

நியாமான கோபத்தைக்கூட அதை செலுத்த வேண்டிய விதத்தில் செலுத்தாமல், உணர்த்த வேண்டிய விதத்தில் உணர்த்தாமல் முழுக்க முழுக்கப் பகடியாக்கி சிதைக்கிறோம் என்றே தோன்றுகிறது. திடீரென ஒரு திட்டத்தை அறிவித்து அடுத்தநாள் செலவுக்கே வங்கி வரிசையில் நிற்க வைத்துவிட்டு அதைப் பூசிமொழுகுவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னைத் தகுதியாக்கி, பயிற்சி பெற்று, விளைவுகள் தெரிந்து எல்லையில் நிற்கும் வீரனோடு எங்ஙனம் ஒப்பிடுகிறீர்கள் என்பது உள்ளிட்டவற்றில் எல்லா விதங்களில் வாதம் செய்யலாம், சண்டை பிடிக்கலாம். அதை விடுத்து அந்தச் செயலை பகடியாக்கி பரப்புகிறேன் என்ற பெயரில் தொடர்ந்து "எல்லையில்... எல்லையில்" என மழுகங்கடிப்பது எவ்வகையிலும் நியாயமானதாய்த் தோன்றவில்லை.

ஒருவேளை எல்லையில் நிற்கும் ஒரு வீரரை, எங்கேனும் நாம் சந்திக்கும் சூழல் வருகையில், அவரும் அவரின் உழைப்பு மற்றும் தியாகம் நினைவுக்கு வராமல், இங்கு தொடர்ந்து பகடி செய்யப்பட்ட அந்த "எல்லையிலே வீரர்கள்" நினைவுக்கு வந்தால் அந்த அவமானம் நமக்கானதே.

ஒருவர் தம் முட்டாள்தனத்தை முன் வைத்தால், அதற்கு பதிலடியாக முட்டாள்தனமே இருக்க வேண்டுமென்பதில்லை. பல நேரங்களில் மௌனம் பெரும் மரியாதைக்குரியது. அந்த மௌனம் நமக்கும், அறிந்தும் அறியாமலும் நாம் இகழ்ச்சிக்கு உட்படுத்தும் பலருக்கும் மரியாதைக் குறைவை தராமல் இருக்கும்.

ஈரோடு கதிர் - எழுத்தாளர், தொடர்புக்கு kathir7@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x