Published : 17 Dec 2016 10:34 AM
Last Updated : 17 Dec 2016 10:34 AM
அமெரிக்க விஞ்ஞானி
அமெரிக்க அறிவியல் விஞ்ஞானியான ஜோசப் ஹென்றி (Joseph Henry) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் (1797) பிறந்தார். படகுகளில் கூலி வேலை செய்துவந்த தந்தை, இவரது 9-வது வயதில் இறந்துவிட்டார். பிறகு, கால்வே என்ற இடத்தில் பாட்டி வீட்டில் வளர்ந்தார். அங்குள்ள பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னாளில் இப்பள்ளிக்கு இவரது பெயரே சூட்டப்பட்டது.
* மீண்டும் தாயுடன் சொந்த ஊர் திரும்பினார். வறுமையால் படிப்பை நிறுத்திவிட்டு, மளிகைக் கடையில் வேலை செய்தார். கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்தில் உதவியாளராக 13 வயதில் சேர்ந்தார். புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கையில் எந்த புத்தகம் கிடைத்தாலும் படித்துவிடுவார்.
* வீட்டில் தாய் நடத்திவந்த விடுதிக்கு வந்த ஒருவர், இவரது வாசிக்கும் ஆர்வத்தைக் கண்டு வியந்தார். பல அறிவியல் விரிவுரைகள் அடங்கிய நூலை இவருக்கு இரவலாக கொடுத்தார். அதைப் படிக்கப் படிக்க பரவசம் பொங்கியது. அது இவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிட்டது.
* அறிவியலில் நாட்டம் பிறந்தது. 1819-ல் அல்பானி அகாடமியில் இலவசமாக அறிவியல் கற்கும் வாய்ப்பு பெற்றார். மாணவர்களுக்கு டியூஷன் வகுப்பு எடுத்து, பணம் சம்பாதித்தார். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் பயின்று 1822-ல் பட்டம் பெற்றார். அதே அகாடமியில் சோதனைக்கூட உதவியாளராகப் பணியாற்றினார்.
* பின்னர், கணிதம், இயற்கை தத்துவப் பாடங்களுக்கான பேராசிரியராக நியமிக்கப்பட்டார். கூடவே, அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. பூமியின் காந்தப் பண்புகள், மின்சாரம், பொதுவான காந்தத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார். காப்பிடப்பட்ட கம்பிகளை இரும்பு மையத்தில் இறுக்கமாகச் சுற்றி, சக்திவாய்ந்த மின்காந்தம் தயாரிக்கும் உத்தியைக் கண்டறிந்தார்.
* இதைப் பயன்படுத்தி, உலகின் மிகவும் வலுவான, 1500 கிலோ எடையைத் தாங்கும் ஆற்றல் வாய்ந்த மின்காந்தத்தை தயாரித்தார். பரிசோதனைகளின் போது மின்காந்தவியல் நிகழ்வான சுய தூண்டலையும் கண்டறிந்தார். 1832-ல் பிரின்ஸ்டனில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
* மின்சாரத்தை நீளமான வயர் மூலம் செலுத்த அதிக வோல்டேஜ் பேட்டரி தேவை எனக் கண்டறிந்தார். இதன்மூலம் அதிக வோல்டேஜ் மின்சாரத்தை நீண்ட தொலைவுக்கு கடத்த முடியும் என்பதையும், அதோடு சிக்னல்களையும் வெகுதொலைவுக்கு பரிமாற்றம் செய்ய முடியும் என்பதையும் கண்டறிந்தார்.
* இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, தந்தி மற்றும் மின்சார வாயில்மணியை (doorbell) இயக்கி செயல்விளக்கம் அளித்தார். ஆனால், இவற்றுக்கு காப்புரிமை பெற முயலவில்லை. தந்தி வசதியைக் கண்டுபிடித்ததில், சாமுவேல் மோர்ஸுக்கு உதவியாக செயல்பட்டார்.
* பரிமாற்றத் தூண்டலை முதலில் கண்டுபிடித்தது இவர்தான் என்றாலும், முன்கூட்டி வெளியிட்டதால் மைக்கேல் ஃபாரடே முந்திக்கொண்டார். ஃபாரடே வடிவமைத்த அதே காலகட்டத்தில் அவர் வடிவமைத்தது போலவே மின்சார மோட்டாரை இவரும் வடிவமைத்தார். இதுவே நவீன டி.சி. மோட்டாரின் முன்னோடி எனப்படுகிறது. மின்சாரம் குறித்து பல்வேறு முக்கிய கோட்பாடுகளைக் கண்டறிந்தார்.
* ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தனது திறமையால் உலகம் போற்றும் விஞ்ஞானியாக உயர்ந்த ஜோசப் ஹென்றி 81-வது வயதில் (1878) மறைந்தார். மின்தூண்டலுக்கான சர்வதேச அலகு, ‘ஹென்றி அலகு’ என இவரது பெயராலேயே குறிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT