Published : 31 Dec 2016 10:00 AM
Last Updated : 31 Dec 2016 10:00 AM
அறிவியல் தமிழின் முன்னோடி
சிறந்த தமிழறிஞரும், அறிவியல் தமிழின் முன்னோடி என்று போற்றப்பட்டவருமான பெ.நா.அப்புசுவாமி (Pe.Na.Appuswamy) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* நெல்லை மாவட்டத்தில் பெருங்குளம் என்ற ஊரில் (1891) பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் சட்டம் பயின்றார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு வழக்கறிஞராக சுமார் 50 ஆண்டு காலம் பணியாற்றியவர்.
* தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றவர். புத்தகம் படிப்பதில் அதிக நாட்டம் கொண்டவர். சிறந்த தமிழறிஞரும் தமிழ் நேசன் பத்திரிகையின் ஆசிரியருமான அ.மாதவையர் இவரது சித்தப்பா. இவரை ஒரு கட்டுரை எழுதும்படி கூறியபோது, பள்ளி யில் தமிழை முறையாகப் படிக்கவில்லை என்று கூறி மறுத்தாராம். உன்னாலும் எழுத முடியும் என்று சித்தப்பாதான் ஊக்கமளித்தார்.
* ‘பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா?’ என்ற கட்டுரையை முதன்முதலாக எழுதினார் அப்புசுவாமி. அதற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால், தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். அறிவியல் சிறுவர் இலக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தினார். கட்டுரைகள், கதைகள் என ஏராளமாக எழுதினார். பல சிறுவர் நூல்களை எழுதினார்.
* ‘அற்புத உலகம்’, ‘மின்சாரத்தின் கதை’, ‘வானொலியும் ஒலிபரப்பும்’, ‘எக்ஸ்ரே’, ‘அணுவின் கதை’ உள்ளிட்ட படைப்புகள் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். 1979 முதல் 1983 வரை தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார்.
* கா.சுப்பிரமணியம், வையாபுரிப் பிள்ளை, க.அ.நீலகண்ட சாஸ்திரி உள்ளிட்டவர்கள் இவரது நண்பர்கள். ‘கலைமகள்’ இதழில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். கல்லூரியில் படிக்கும்போதே உ.வே.சா.வுடன் தொடர்பு இருந்தது. டி.கே.சி., கல்கி, வையாபுரிப் பிள்ளை, டி.எல்.வெங்கட்ராமய்யர், வாசன், ஏ.என்.சிவராமன் உள்ளிட்ட தமிழறிஞர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் கூடும் இடமாக இவரது வீடு இருந்தது.
* அனைத்து மொழிகளின் சிறந்த நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினார். மொழிமாற்றம் குறித்து பல வரையறைகளை வகுத்தார். அறிவியல், வரலாறு முதலான துறைகளில் ஏராளமான நூல்கள், கட்டுரைகளை ஆங்கிலம் தமிழ் இடையே மொழிபெயர்த்தார்.
இவரது அறிவியல் கலைச்சொல்லாக்க முனைப்பு மகத்தானது. அணுப்பிளவு, துணைக்கோள், மின்னணு, புத்தமைப்பு, நுண்ணோக்கி, கதிரியக்கம் உள்ளிட்ட ஏராளமான அறிவியல் சொற்களைத் தமிழில் உருவாக்கினார். எளிய நடையில் தமிழ்க் கலைச் சொற்களைப் பயன்படுத்தி ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதினார்.
* எப்போதும் தன் அறிவியல் அறிவைப் புதுப்பித்துக்கொண்டே இருந் தார். தமிழிலும் அறிவியல் கற்க முடியும் என்பதை நிரூபித்தார். 25 அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். ‘பேனா’ என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதியுள்ளார்.
* எழுத்தாளர் சங்கம், குழந்தை எழுத்தாளர் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகளும் இவருக்குக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தன. எதையும் நகைச்சுவையுடன் எடுத்துக் கூறும் தன்மை பெற்றவர். இசை ஆர்வம் மிக்கவர். பல இசை விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 26 வயது முதல் 95 வயது வரை எழுதிக்கொண்டே இருந்தார்.
* இறப்பதற்கு முந்தைய நாள்கூட ‘பாரத்ஸ் விஷன் ஆஃப் தி மதர்லேண்ட்’ என்ற கட்டுரையை எழுதிப் பத்திரிகைக்கு அனுப்பினார். இறுதிவரை அறிவியல் தமிழுக்கு அரும்பணியாற்றிய பெ.நா.அப்புசுவாமி 95-வது வயதில் (1986) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT