Published : 26 Dec 2016 10:23 AM
Last Updated : 26 Dec 2016 10:23 AM

சார்லஸ் பேபேஜ் 10

பிரிட்டிஷ் கணித அறிஞர்

தற்கால கணினியின் தந்தை என்று போற்றப்படும், உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் சார்லஸ் பேபேஜ் (Charles Babbage) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* லண்டனில் (1791) பிறந்தவர். பொற்கொல்லராக இருந்த தந்தை, பின்னர் வியாபாரி, வங்கியாளராக உயர்ந்தவர். சிறுவயதில் மோசமான உடல்நிலை காரணமாக சார்லஸ், பள்ளிக்குப் போக முடியவில்லை. வீட்டுக்கே ஆசிரியர்களை வரவழைத்து கல்வி கற்பித்தனர்.

* ஹோம்வுட் அகாடமியில் சிறிது காலம் பயின்றார். அங்கு நூலகத்தில் இருந்த நூல்கள், இவரிடம் கணித ஆர்வத்தை தூண்டின. வானியல் ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்ட பள்ளி ஆசிரியரால் இவருக்கு அறிவியலிலும் ஆர்வம் அதிகரித்தது.

*அல்ஜீப்ராவை ஆர்வத்துடன் கற்றார். 1810-ல் கேம்ப்ரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஏற்கெனவே பல மேதைகளின் நூல்களைப் பயின்று சுயமாக கணிதத்தில் தேர்ச்சி பெற்றிருந்த இவருக்கு அங்கு கற்பிக்கப்படும் கணிதம் ஏமாற்றம் அளித்தது.

* நண்பர்கள் ஜே.ஹெர்ஷல், ஜி.பீகாக் உள்ளிட்ட பலருடன் இணைந்து ‘அனலிட்டிகல் சொசைட்டி’ என்ற அமைப்பை 1812-ல் தொடங்கினார். கேம்ப்ரிட்ஜில் பாரம்பரிய கற்பித்தல் முறையை மாற்றி, நவீன கணித முறைகளை அறிமுகம் செய்வதுதான் இதன் நோக்கம். இந்த அமைப்பு விரைவில் பிரபலமடைந்தது.

* சிறந்த கணித வல்லுநராக உயர்ந்ததால், தேர்வு இல்லாமலேயே 1814-ல் இவருக்குப் பட்டம் வழங்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜில் பேராசிரியர் பதவிக்கு 3 முறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டார். 1827-ல் தந்தையின் சொத்துகள் இவருக்கு வந்தன. அதன் பின்னர் ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொண்டார். அதுவரை மறுக்கப்பட்ட பேராசிரியர் பணி தேடி வந்தது.

* வானியலிலும் சிறந்து விளங்கினார். ராயல் கல்வி நிறுவனத்தில் வானியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்தின் முன்னணி கணித வல்லுநர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். உலகப் புகழ்பெற்ற வானியலாளர் ஹெர்சலுடன் இணைந்து மின்காந்தவியல் குறித்து ஆராய்ந்தார்.

* 1820-ல் வானியல் கழகம் தொடங்கப்பட உறுதுணையாக இருந்தார். கணிதம், வானியல் தொடர்பான கணிப்புகளை மேற் கொள்ள, புரோகிராம் செய்யக்கூடிய இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இறுதியாக 1835-ல் இப்படிப்பட்ட ஒரு சாதனத்தை (அனலிட்டிகல் இன்ஜின்) உருவாக்கினார்.

* இதில் மில், ஸ்டோர் என்ற 2 பகுதிகள் இருந்தன. மில் என்பது தற்போதைய கணினிகளின் ‘சிபியூ’வுக்கு இணையான தாகவும், ‘ஸ்டோர்’ தற்போதைய கணினியின் மெமரி பகுதியாகவும் செயல்பட்டன. இதுவே இன்றைய கணினியின் முன்னோடி யாக கருதப்படுகிறது. வானியல் கணிப்புகளுக்கும் இது பயன் படுத்தப்பட்டது.

* இதற்காக இவருக்கு வானியல் கழகத்தின் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. அனலிட்டிகல் இன்ஜின் அடிப்படையில் ‘செகண்ட் டிஃபரென்ஸ்’ என்ற இன்ஜினைக் கண்டறிந்தார். மேலும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, ரயில் பாதையை அளவிடும் கருவி, சீரான அஞ்சல் கட்டண முறைக்கான கருவி, கிரீன்விச் ரேகைக் குறியீடு, சூரிய ஒளியைக் கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி உள்ளிட்ட இயந்திரங்களைக் கண்டறிந்தார்.

* பல நூல்களை எழுதினார். இவரைப் பற்றி நூல்கள், நாவல்களும் எழுதப்பட்டன. திரைப்படங்கள், ஆவணப் படங்களும் தயாரிக்கப்பட்டன. கணிதம், கண்டுபிடிப்பு, பகுப்பாய்வு, தத்துவம் இயந்திரப் பொறியியல் எனப் பல்வேறு களங்களில் முத்திரை பதித்த சார்லஸ் பேபேஜ் 80-வது வயதில் (1871) மறைந்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x