Published : 16 Dec 2016 10:08 AM
Last Updated : 16 Dec 2016 10:08 AM

மயிலை சீனி.வேங்கடசாமி 10

தமிழ் அறிஞர், ஆய்வாளர்

சிறந்த தமிழ் அறிஞர், வரலாற்று ஆய்வாளரான மயிலை சீனி.வேங்கடசாமி (Mayilai Seeni.Venkatasami) பிறந்த தினம் இன்று (டிச.16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சென்னை மயிலாப்பூரில் (1900) பிறந்தவர். தந்தை சித்த மருத்துவர். பழந்தமிழ் ஓலைச் சுவடிகள், நூல்களைத் தேடித் தேடி சேகரித்து வாசிக்கும் பழக்கம் கொண்டவர். வேங்கடசாமிக்கும் இயல்பிலேயே தமிழில் அதிக ஆர்வம் இருந்தது.

* தமிழறிஞர் கோவிந்தராஜன், மகாவித்வான் சண்முகம் பிள்ளை, பண்டிதர் சற்குணர் ஆகியோரிடம் தமிழ் பயின்றார். மயிலை புனித சாந்தோம் உயர்நிலைப் பள்ளி, சென்னை கலைக் கல்லூரியில் படித்தார். ஓவியக் கலையில் இருந்த ஆர்வத்தால், கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு, எழும்பூர் ஓவியப் பள்ளியில் சேர்ந்தார்.

* சாந்தோம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றினார். குடியரசு, ஊழியன், செந்தமிழ், ஆனந்தபோதினி, ஈழகேசரி உள்ளிட்ட இதழ்களில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

* கி.பி. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றும் ஆய்வு செய்தார். தமிழகத்தின் நிலை, ஆண்ட மன்னர்கள், கலாச்சாரம் உள்ளிட்ட பல அம்சங்களையும் ஆராய்ந்தறிந்து துளுநாட்டு வரலாறு, கொங்குநாட்டு வரலாறு உள்ளிட்ட நூல்களை எழுதினார்.

* கல்வெட்டுகள், செப்பேடுகள் குறித்து ஆராய்ந்து, தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணிகள் ஆற்றினார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறைக் கல்வெட்டுகளையும் படித்தறிந்து ஆராயும் திறன் பெற்றிருந்தார்.

* கன்னடம், மலையாளம், பாலி, சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். மலையாளத்தில் இருந்து சில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். புத்த, சமண சமயக் கோயில்கள், தொல்லியல் களங்களை ஆய்வு செய்தார். மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள், பாறைக் கோயில்கள், கட்டிடக் கலையின் தன்மைகளை ஆராய்ந்தார்.

* மகேந்திரவர்மன், கவுதம புத்தர், புத்தர் ஜாதகக் கதைகள், வாதாபிகொண்ட நரசிம்மவர்மன், இறைவன் ஆடிய ஏழுவகைத் தாண்டவங்கள், சமயங்கள் வளர்த்த தமிழ் உள்ளிட்ட 33 நூல்களைப் படைத்துள்ளார்.

* ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்ற நூலில் இலங்கையில் தமிழர் என்ற இவரது ஆய்வுக் கட்டுரையும் இடம்பெற்றது. தமிழக வரலாற்றைக் கட்டமைத்து, ஒழுங்குபடுத்தியதில் முக்கியப் பங்காற்றியவர். பழங்கால ஓவியங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தமிழ், தமிழர் வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கை முறை, இலக்கியம், இயல், இசை, நாடகம் என இவர் ஆய்வு மேற்கொள்ளாத துறைகளே இல்லை.

* தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ‘தலைமுறைக்குத் தமிழ் முதலாக்கிக்கொண்ட பல்கலைத் தலைவன் எல்லாம் தமிழ்ச் சீனி வேங்கடத்தின் கால்தூசும் பெறாதார் என்பேன்’ என்று பாவேந்தர் பாரதிதாசன் இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

* படைப்பாளி, வரலாற்று அறிஞர், சொல்லாய்வு நிபுணர், கல்வெட்டு, சாசனம், தொல்லியல் களங்களில் முத்திரை பதித்தவர், பன்மொழிப் புலவர், சமூகவியல் அறிஞர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட மயிலை சீனி.வேங்கடசாமி 80-வது வயதில் (1980) மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x