Published : 06 Dec 2016 01:54 PM
Last Updated : 06 Dec 2016 01:54 PM
முதல்வர் ஜெயலலிதா எப்போதும் தனது சுயசரிதையை எழுதியதில்லை. மாறாக தனது சொந்த வாழ்க்கைக் கதைகளை புனைகதைகளாக எழுதினார். அவர் ஏதோ நாவல் எழுதுகிறார் என்றுதான் முதலில் நினைத்திருப்பார்கள்.
அது அவரது கதை மட்டுமல்ல சம்பந்தப்பட்ட பலரது கதைகளும் அந்த தொடர்கதைகளில் வருவதைக் காணும்போதுதான் அது தடைசெய்யப்பட்டது. ஒரு முறை 'குமுதத்'திலும் இன்னொருமுறை 'தாய்' வார இதழிலும் அவரது படைப்புகள் பாதியிலேயே நின்றன.
நிறைய புனைவிலக்கியங்களை வாசித்தவர் என்ற முறையில் அவருக்கு எழுத்து சரளமாகவே வந்தது. அவர் எழுதிய தொடர்கதை முழுமையாக வெளிவந்தது எதில் என்றால் அது 'கல்கி' வார இதழில்தான். 1979களில் 'உறவின் கைதிகள்' என்ற பெயரில் வெளிவந்தது. வாரந்தோறும் அவரது கதைகளைப் படிக்க வாசகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
காரணம் அதில் அவர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு பாத்திரமும் நம் நிஜவாழ்க்கையில் பிரபல பிம்பங்களாக வலம் வந்தவர்கள் என்பதை வெவ்வேறு வாரங்களில் வாசகர்கள் உணர்ந்துகொண்டனர். கூடவே மாயா எனும் ஓவியரின் கைவண்ணத்தில் கதாசிரியர் உணர்த்த விரும்பும் பாத்திரங்கள் பட்டவர்த்தனமாய் வெளிப்பட்டது ரசிக்கத்தக்க அம்சமாக அமைந்தது.
ஆனால் எந்தப் பாத்திரமும் அததற்கு உண்டான மிகைஅழுத்தமின்றி இயல்புநவிற்சியோடே படைக்கப்பட்டன. உறவின் கைதிகளில் சுவாரஸ்யமிக்க அதே நேரத்தில் தவிர்க்கமுடியாத, கூடாத உண்மைகள் உள்கூடத்தில் வைக்கப்பட்ட அகல்விளக்கைப்போல நின்றொளிர்ந்தன. அதனாலேயே அவர் எழுத வேண்டாம் எனவும் முக்கியமானவரால் பலமுறை அறிவுறுத்தப்பட்டது. அவர் அரசியலில் முக்கியமான பொறுப்பேற்கும்வரை அவரது எழுத்துப்பணி அவரது வாழ்க்கையோடு தொடர்புடையவர்களுக்கு நேரடியாக அன்றி மறைமுகமாக விடுக்கப்படும் அறைகூவலாகவே இருந்தது.
எழுத்தை குறைந்தபட்சம் தனது வாழ்வின் வெளிச்சத்திற்காகவாவது பயன்படுத்துவதில் தெளிவாக இருந்தது அவரது புத்திக்கூர்மையும் அவருக்குள் மறைந்துகிடந்த போராட்ட உணர்வையுமே வெளிப்படுத்தியதை புரிந்து கொள்ளமுடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT