Published : 15 Dec 2016 10:22 AM
Last Updated : 15 Dec 2016 10:22 AM
தலைசிறந்த பத்திரிகையாளர்
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின்போது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழை விலைக்கு வாங்கி, உலக அரங்கில் மதிக்கப்படும் நாளிதழாக மறுவடிவம் பெறுவதற்கு அடித்தளமிட்ட எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.
* கும்பகோணத்தில் பிறந்தார் (1859). இன்னம்பூர் மற்றும் கபிஸ்தலத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். 12-வது வயதில் புரொவின்சியல் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளி படிப்புக்குப் பின்னர் சென்னை பிரசிடன்சி கல்லூரியில் சேர்ந்தார். ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
* 1879-ல் பி.ஏ. பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் சட்டம் பயின்றார். சட்டப் படிப்பை முடிக்காமலேயே 1881-ல் துணைப் பதிவாளராகப் பொறுப்பு ஏற்றார். 1884-ல் சட்டப் படிப்பு தேர்ச்சியடைந்ததும் துணைப் பதிவாளர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, பி.பாஷ்யம் ஐயங்காரிடம் ஜூனியராகச் சேர்ந்தார். அப்போதிருந்தே அரசியலிலும் பொது வாழ்விலும் ஆர்வம் காட்டிவந்தார். 1884-ம் ஆண்டு சென்னையில், பொதுஜனக் கருத்துகளை வெளியிடுவதற்காக ‘மெட்ராஸ் மஹாஜன சபா’ என்ற மன்றம் தொடங்கப்பட்டது. இந்தச் சபையின் நிர்வாக உறுப்பினராகச் செயல்பட்டார்.
* 1878-ம் ஆண்டு ஜி.சுப்ரமணிய ஐயர் உள்ளிட்ட அறுவரின் முயற்சியால் ‘தி இந்து’ வாராந்திர இதழாகத் தொடங்கப்பட்டது. கஸ்தூரிரங்க ஐயங்கார் செயல்பட்டுவந்த மெட்ராஸ் மஹாஜன சபாவின் அலுவலகம் ‘தி இந்து’ அலுவலக வளாகத்தில் இருந்தது.
* கஸ்தூரிரங்க ஐயங்கார் 1885-ல் கோவையில் வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார். ‘மிகவும் உணர்வுப்பூர்வமானவர்; கூச்ச சுபாவம் உடையவர்; மெதுவாகப் பேசுபவர்; எனவே வழக்கறிஞர் தொழிலில் பெரிதாக வெற்றிபெற வாய்ப்பில்லை’ எனும் இவரைப் பற்றிய கணிப்பைப் பொய்யாக்கி, வெற்றிகரமான வழக்கறிஞராகப் பிரபலமடைந்தார்.
* இவர் கோயம்பத்தூர் வந்த ஒருசில மாதங்களிலேயே உள்ளூர் மாநகர சபைக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை மாவட்ட வாரியத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1892 வரை அங்கு பணியாற்றினார்.
* வழக்கறிஞர் சங்கக் குழுவின் உறுப்பினராக இணைந்த இவர், 1897-ல் அதன் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக் கூட்டங்களில் இவர் ஆற்றும் உரைகளில் தகவல் செறிவும் தெளிவும் சிறந்த ஆலோசனைகளும் பளிச்சிட்டன.
* 1886-ல் மாணவர்களுக்கான இலக்கிய அமைப்பு தொடங்க உதவினார். பின்னர், ஜி.சுப்ரமணிய ஐயர் நடத்திவந்த ‘தி இந்து’ இதழில் இணைந்தார். இந்த இதழ் ஏப்ரல் 1, 1889-ல் நாளிதழாக மாற்றப்பட்டது.
* குறைவான பிரதிகளே விற்பனையான ‘தி இந்து’ பத்திரிகையை, 1905-ம் ஆண்டு ரூ.75 ஆயிரம் விலை கொடுத்து துணிச்சலாக வாங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். தனது உறவினர் ஏ.ரங்கஸ்வாமி ஐயங்காரை உதவி ஆசிரியராக நியமித்தார்.
* நாளிதழில் விளம்பரங்களை அதிகரித்தார். சரிந்து வந்த பத்திரிகையைத் தூக்கி நிறுத்தி, ஐந்தே ஆண்டுகளில் அதன் கடன்களை அடைத்தார். சென்னையில் ரோட்டரி பிரின்டிங் பிரஸ் தொடங்கினார்.
* ‘தி இந்து’ பத்திரிகையை மக்களின் குரலாக ஒலிக்கவைத்தார். இன்று உலக அளவில் முக்கியமான நாளிதழ்களில் ஒன்றாக மதிக்கப்படும் ‘தி இந்து’ நாளிதழ் அத்தகைய பெருமையைப் பெறுவதற்கான அடித்தளமிட்டவர், தலைசிறந்த பத்திரிகையாளர்களுள் ஒருவராகப் போற்றப்பட்ட கஸ்தூரிரங்க ஐயங்கார், 1923-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 64 வயது நிறைவடையும் தருணத்தில் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT