Published : 23 Nov 2016 06:17 PM
Last Updated : 23 Nov 2016 06:17 PM
வடகிழக்கு இந்தியப் பகுதி அது. அசாம் மாநிலத்தில் உள்ள கார்பி கிராமம். பல்வேறு விதமான உயிரினங்கள் அங்கே வாழ்கின்றன. சுமார் 19,000 கி.மீ. நீளத்துக்கு ஓடைகளும், ஆறுகளும் பாய்கின்றன.
அங்கிருக்கும் அரிய வகை கெண்டை மீன்களைப் பிடிக்க புதுவித முறையைக் கையாளுகின்றனர் கிராமத்தினர். என்ன முறை அது? தூண்டில் மூலமா? இல்லை. கையால் மீன்பிடிப்பது? ம்ஹூம். வலை மூலம்? நோ. ஈட்டி மூலம் குத்திப் பிடிப்பதா? அதுவும் இல்லை. பொறி வைப்பதன் மூலமாகவா? இல்லை என்பதுதான் பதில். வேறு எதன் மூலமாகத்தான் பிடிக்கிறார்கள்?
வாருங்கள்.. காணொலி மூலமாகக் களத்துக்குச் சென்று காண்போம்.
ஆம் மக்காச்சோளத்தைக் கொண்டுதான் கிராம மக்கள் மீன் பிடிக்கிறார்கள். என்ன வகை மீன் தெரியுமா? பூமீன் கெண்டை. பெரிய வாயைக் கொண்ட மீன் இது. 9 அடி வரை வளரும் தன்மையும், 50 கிலோ எடை வரை வரும் தன்மையும் கொண்டது. இது பெரும்பாலும் இமாலய நதிகளில் மட்டுமே காணப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் விளையாட்டுக்கு இந்த மீன் பயன்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய சமஸ்தான அரசு இலச்சினைகளில் இவ்வகை மீன்களின் உருவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வாழ்விட இழப்பு, மாசுபாடு, மீன்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டன. தற்போது இவ்வகை கெண்டை மீன்கள் அழிந்து வரும் பட்டியலில் இணைந்துள்ளன.
ஆனால் கார்பி இன மக்களுக்கு இவ்வகை மீன்கள் அதிகம் பிடிக்குமாம். அவற்றைப் பிடிக்க மழைக்காலங்களில் ஆற்று நீரினுள் மக்காச் சோளத்தை வீசுகின்றனர். தினந்தோறும் பல மாதங்களுக்கு காலையிலும் மாலையிலும் மக்காச்சோள விதைகள் வீசப்படுகின்றன. மீன்கள் அதிகமாக இருந்தால் அவை நீரினுள் விழும்முன்பே அவை எம்பிக்குதித்து இரையைப் பிடிக்கின்றன. பின்னர் மீன்கள் கிடைக்கும் வரை காத்திருக்கும் படலம் தொடர்கிறது.
வெடி வைத்துப் பிடிப்பது உள்ளிட்ட காரணிகளால் இவ்வகை கெண்டைகள் மறைந்துவருகின்றன என்பது கவலைக்குரிய விஷயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT