Published : 19 Nov 2016 10:54 AM
Last Updated : 19 Nov 2016 10:54 AM
‘‘நல்ல உணவை சாப்பிடுவதற்கு உனக்கு வெள்ளிக் கரண்டி தேவையில்லை!’’ - பால் புருடோம்
ஹாங்காங் நாட்டில் நானும் என் கணவரும் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தோம். இந்த நாட்டுக்கு மேற்கில் 60 நிமிட படகு பயணத்தில் இருக்கும் மக்காவு நாட்டுக்கு செல்ல பேராவல் கொண்டு அதற்கான விசாவை எடுத்திருந்தோம்.
மக்காவு, 16-ம் நூற்றாண்டில் இருந்து 1999 வரை போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1999, டிசம்பர் 20-ம் தேதி மக்காவுனுடைய ஆட்சி தலைமை உரிமையை சீன மக்கள் குடியரசு எடுத்துக்கொண்டது.
இன்று சீன நாட்டின் ஒரு அங்கமாக மக்காவு இருந்தாலும் ஒரு நாடு, இரு அமைப்பு என்ற திட்டத்தின் கீழ் ராணு வப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களை மட்டும் சீன நாட் டுக்கு விட்டுக்கொடுத்து மற்றவற்றை தன் அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொண்டிருக்கிறது.
‘‘ஆசிய நாட்டின் லாஸ்வேகாஸ்’’ என்று அழைக்கப்படும் அளவுக்கு, சூதாட்ட அரங்கங்கள் நிறைந்து கிடக் கின்றன. உலகிலேயே ஒரு பணக்கார நாடாக விளங்கும் மக்காவுக்குள் காலடி எடுத்து வைத்ததுமே, நானும் என் கண வரும் அங்கே வாழும் நடுத்தர வகுப்பின ருடைய குடியிருப்புகளைப் பார்த்து விட்டு பிறகு மக்காவின் புகழ்பெற்ற ‘தி வெனிடியன் மக்காவு ரிசார்ட்’ ஹோட் டலுக்குச் சென்று, அங்கே வழங்கப்படு கிற பலவிதமான கேளிக்கைகளைக் கண்டு ரசிப்பது என்று முடிவு செய்திருந்தோம்.
வளைந்து நெளிந்து சென்ற அந்தத் தெருக்களின் இருபுறங்களிலும் போர்ச்சு கீசிய மற்றும் சீனத்துக் கட்டிடக் கலையை வெளிப்படுத்தும் வீடுகள் காணப்பட் டன. அவற்றை ரசித்துக்கொண்டே, நடந்து சென்றபோது, எதேச்சையாக ஒரு பஜார் தென்பட, ஆவலோடு அதற்குள் நுழைந்தோம். பல கடைகளில் நுழைந்து, அங்கே வாழும் மக்கள் பேசும் காண் டோனீஸ் மொழி புரியாவிட்டாலும், கால் குலேட்டர் துணைக் கொண்டு, பேரம் பேசி பல பொருட்களை வாங்கினோம்.
பகல் மணி இரண்டைக் கடந்திருந் தது. ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட படகில் கொடுத்த கேக்கும், குளிர் பான மும் பஸ்பம் ஆகி, பசித் தீ எங்கள் வயிற்றை பற்றிக்கொண்டது. பஜாரில் பல உணவகங்கள் இருந்தன. ஆனால், அங்கே என்ன விற்கிறார்கள் என்று புரியாத நிலையில் ஒரு உணவகத்தின் வெளியே நின்று அங்கே இருந்த விளம் பரப் பலகையை ஆராயத் தொடங்கிய அந்த நேரத்தில் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத இன்று நினைத்தாலும் என் முதுகுத்தண்டை ஜில்லிட வைக்கிற அந்த அதிசய உணவின் தயாரிப்பை நான் பார்த்தபடியே விவரிக்கிறேன்:
அந்த உணவகத்தின் வெளியே இருந்த தண்ணீர் நிரம்பிய கண்ணாடிப் பெட்டிகளில் தண்ணீர் பாம்புகள் நீந்தி விளையடிக் கொண்டிருந்தன. சற்றுத் தள்ளி, நம்ம ஊர் பாம்பாட்டிகள் வைத் திருப்பார்களே அது போன்ற மூங்கில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப் பட்டிருக்க, அதனுள்ளும் பாம்புகள்.
திடீர் என்று உள்ளே இருந்து ஒரு மனிதன் கைகளில் ஒரு கம்பியோடு வந்து ஒரு மூங்கில் பெட்டியை சடக்கென்று திறந்து வெளியே எடுக்க, அதில் இருந்த பாம்பு தலைவிரித்தாடியது. அய்யோ! என் சப்த நாடியும் ஒடுங்கியது.
தலைவிரித்த ஆடிய அந்த பாம்பின் தலைப் பகுதியைப் பிடித்து அங்கே இருந்த பலகையின் மீது கிடத்தினார் அந்த மனிதர். பிறகு கையில் ஒரு மரப் பலகையை எடுத்து, பாம்பின் தலையில் அடிக்க… அதன் தலை கிடத்தப்பட்ட பலகையில் இருந்த ஆணியில் மாட்டிக் கொண்டது. வால் பகுதியை இறுக்கமா கப் பிடித்தபடி, கையில் மீண்டும் இரும்பு கம்பியை எடுத்து அதன் மூலையில் நீட்டிக் கொண்டிருந்த இரண்டு கூரிய முனைகள் மூலம் பாம்பின் தலையில் இருந்து வால் வரை லாவகமாக இழுக்க, பிசிறு எதுவும் இல்லாமல் தோல் அப்படியே கழன்று வந்துவிட்டது, பிறகு, பாம்பின் தலைப் பகுதி வெட்டப் பட்டு, குப்பைத் தொட்டியில் விழ, தலை போன பிறகும் துள்ளும் உடம்பை ஒரே சீராக வெட்டி தட்டில் அள்ளிக்கொண்டுச் சென்று, சற்று உயரமான மேடையின் மீது இருந்த தணல் விட்டு எரியும் அடுப் பில் இருந்த கடாய் போன்ற பாத்திரத்தில் கொட்டி வறுக்க தொடங்கினார்.
இவ்வளவும் நடந்து முடிக்க மூன்று நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். ஆனால், எங்களுக்கு மூன்று யுகங்கள் ஆனது போன்ற பிரம்மை ஏற்பட்டது. இரும்பாக கனத்த கால்களையும், மனத்தையும் கொண்டு என்னால் நகரவே முடிய வில்லை. பசி போன இடமே தெரிய வில்லை. மாறாக, குடல்கள் முறுக்கிக் கொண்டன. என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே, என் கணவர் அவசரமாக நடக்கத் தொடங்க… நானும் அங்கிருந்து நகர்ந்தேன்.
இந்தத் திகில் நிறைந்த அனுபவத்தை பின்னாட்களில் எங்களுடைய வழிகாட்டி யுடன் பகிர்ந்துகொண்டோம். அவர் சிரித் துக் கொண்டே சொன்னார், ‘‘ஒரு காண் டோனீஸ் பழமொழி இருக்கிறது. அதை சொன்னால் உங்கள் குழப்பம் தீரும். சொல்லட்டுமா?’’ என்றார். ‘‘உம்…’’ சொல்லி அவரது பதிலுக்குக் காத்தி ருந்தேன்.
‘‘மேஜைகளையும் நாற்காலிகளை யும் தவிர, தரையின் மீது நான்கு கால்களும் இருக்கும் அனைத்தையும் நாங்கள் சாப்பிடுவோம். விமானத்தைத் தவிர ஆகாயத்தில் பறக்கிற எல்லா வற்றையும் சாப்பிடுவோம். இவற்றோடு ஊர்வனவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்!’’ என்றார்.
சீனாவில் நாங்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது அங்கே பல இடங்களில் பெரிய, பெரிய கண்ணாடிக் குடுவைகளில் ரைஸ் ஒயினை நிரப்பி, அதில் அதில் விஷம் நிரம்பிய பாம்புகளை அடைத்து விற்பனைக்கு வைத்திருப் பதைப் பார்த்திருக்கிறேன். பாம்புகளின் விஷம் மதுவோடு கலக்கும்போது அது மிக அற்புதமான மருந்தாகி, பல வியாதிகளைக் குணப்படுத்திவிடும், குறிப்பாக ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் என்று அவர்கள் நம்புகிறார்கள். சின்ன கண்ணாடி டம்ளர்களில் இந்தப் பாம்பு ஒயினை மக்கள் குடிப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாகக் காணப்படும் சுவிப்லெட்ஸ் என்கிற பறவைகளை தமிழில் ‘கூட்டு உழவாரன்’ என்று அழைக்கிறார்கள். இவற்றை சிட்டுக்குருவிகளின் ஒன்று விட்ட சகோதரர்கள் என்கிறார்கள். உயர்ந்த மலைப் பகுதிகளில் உள்ள பாறைகளில் இருக்கிற பொந்துகளில், தங்களுடைய வாயில் இருந்து சுரக்கிற (சிமெண்ட்டைப் போன்ற) உமிழ்நீரைக் கொண்டு கூடுகளைக் கட்டி, அதில் முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கின்றன.
இந்தப் பறவை கட்டுகின்றக் கூடு களைக் கொண்டு சீனாவில் சூப் தயாரிக் கிறார்கள். ஒரு கப் சுவிப்லெட்ஸ் சூப்பின் விலை எவ்வளவு தெரியுமா? 30 முதல் 100 அமெரிக்க டாலர்கள். ஒரு கிலோ வெள்ளை நிற சுவிப்லெட்ஸ் கூடுகளின் விலை… 2, ஆயிரம் அமெரிக்க டாலர்கள். அதுவே, சிவப்பு நிற சுவிப்லெட்ஸ் கூடு கள் என்றால் ஒரு கிலோ… 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். ஹாங்காங்கில் ஒரு ரெஸ்டாரெண்டில் இதன் விலைப்பட்டி யலைப் பார்த்து மலைத்துப் போய்… சுவிப்லெட்ஸ் சூப்புக்கு சொன்னோம்: ‘டாட்டா!’
- பயணிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: shanthisiva12@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT