Published : 18 Nov 2016 10:33 AM
Last Updated : 18 Nov 2016 10:33 AM
ஆங்கில நாடகாசிரியர், கவிஞர்
இங்கிலாந்தின் புகழ்பெற்ற நாடகாசிரியரும், கோட்டோவியருமான சர் வில்லியம் கில்பர்ட் (Sir William Gilbert) பிறந்த தினம் இன்று (நவம்பர் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இங்கிலாந்து தலைநகர் லண்டனில் (1836) பிறந்தார். தந்தை, கடற்படை மருத்துவர் என்பதால், பெற்றோருடன் ஐரோப்பா முழுவதும் பயணம் சென்றுள்ளார். சிறு வயதிலேயே நாடகத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி நாட்களிலேயே பல நாடகங்கள் எழுதி, இயக்கினார்.
* லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பயின்றார். ராணுவத்தில் சேர்ந்து பீரங்கிப் படை அதிகாரியாக வேண்டும் என்பது இவரது விருப்பம். இவரது ராணுவப் பயிற்சி முடியும்போது போரும் முடிந்ததால், கல்வித் துறையில் குமாஸ்தா வேலையில் சேர்ந்தார். 7 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.
* அதில் கிடைத்த வருமானம் மூலம் சட்டம் பயின்று, வழக்கறிஞரானார். அதிலும் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லாததால், சில இதழ்களில் ஓவியங்கள் தீட்டினார். கவிதைகள், நாடகங்கள் எழுதினார். ‘அங்கிள் பேபி’ என்ற இவரது முதல் நாடகம் லண்டன் ராயல் தியேட்டரில் 1863-ல் அரங்கேறியது.
* தொடர்ந்து இவர் எழுதிய நகைச்சுவை நாடகங்களும் வெற்றி பெற்றதால், நாடகத் துறையில் பிரபலமானார். மேடை நாடக இயக்கம் குறித்து டாம் ராபர்ட்சன் என்ற நாடக இயக்குநரிடம் கற்றார். பிறகு, தான் எழுதும் நாடகங்களைத் தானே இயக்கத் தொடங்கினார். 1871-ல் மட்டும் 7 நாடகங்கள் படைத்தார்.
* பிரபல இசைக் கலைஞர் ஆர்தர் சல்லிவனுடன் இணைந்து பல இசை நாடகங்களை வடித்தார். பல்வேறு வகையிலான நாடகங்களை அரங்கேற்றினார். பிரபல நாவல்களின் தழுவல்கள், வேற்று மொழிக் காவியங்களையும் நாடகமாக்கினார்.
* ஆர்தர் சல்லிவனுடன் இணைந்து இவர் உருவாக்கிய ‘ட்ரையல் பை ஜூரி’, ‘தி ஸோர்சரர்’ உள்ளிட்ட 14 இசை நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘எச்எம்எஸ் பினாஃபோர்’, ‘தி பைரேட்ஸ் ஆஃப் பென்சான்ஸ் தி மிகாடோ’ ஆகியவை உலகப்புகழ் பெற்றன. ‘என்கேஜ்ட்’ நாடகம் இவரது மாஸ்டர்பீஸாக கருதப்படுகிறது. ‘தி மிகாடோ’ நாடகம், இசை நாடக வரலாற்றிலேயே அதிக முறை அரங்கேறிய நாடகமாகப் புகழ்பெற்றது.
* இவர் வாழ்ந்த காலகட்டத்தில் நாடகத் துறை அவ்வளவு மதிப்புக்குரிய கலையாகப் போற்றப்படவில்லை. இந்த நிலையை மாற்ற வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். நாடகத் தயாரிப்பில் கலைத்துவமான ஒருங்கிணைப்பை வலியுறுத்தினார்.
* இவருக்குப் பின் வந்த நாடகாசிரியர்கள் பலர் போற்றப்பட்டதற்கு இவரது முனைப்புகள்தான் அடித்தளம் என்று கருதப்படுகிறது. இவரது நாடகங்கள் ஆஸ்கர் வைல்ட், ஜார்ஜ் பெர்னாட் ஷா உள்ளிட்ட பிற நாடகக் கலைஞர்களுக்குத் தூண்டுதலாக அமைந்தன.
* ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் உள்ள ஓபரா நாடகக் குழுக்கள், பள்ளிகள் மற்றும் சமூக நாடகக் குழுக்கள் இவரது அனைத்து இசை நாடகங்களையும் இன்றும் மேடையேற்றி வருகின்றன. இலக்கிய பாடங்களிலும் இவரது பல நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.
* மொத்தம் 75 நாடகங்கள், ஓபரா வசனங்கள், ஏராளமான சிறுகதைகள், கவிதைகளை எழுதியுள்ளார். நாடகாசிரியர், இயக்குநர், கவிஞர், பத்திரிகையாளர், கதாசிரியர் என்ற பன்முகத் திறனுடன் படைப்புக் களத்தில் முத்திரை பதித்த சர் வில்லியம் கில்பர்ட் 75-வது வயதில் (1911) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT