Last Updated : 08 Nov, 2016 02:54 PM

 

Published : 08 Nov 2016 02:54 PM
Last Updated : 08 Nov 2016 02:54 PM

பாம்புப் படையிடம் சிக்கிய உடும்பு: சினிமாவை விஞ்சும் சிலிர்ப்பனுபவம்!

பிபிசி தொலைக்காட்சியில் 2006-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஆவணத் தொடர் பிளானட் எர்த் (Planet Earth). இதுவரை பிபிசி எடுத்த இயற்கை சார்ந்த ஆவணப்படங்களிலேயே அதிக செலவு செய்து எடுத்த ஆவணப் படம் இது.

10 வருடங்கள் கழித்து இதன் இரண்டாவது சீஸன் தற்போது பிபிசி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சர் டேவிட் அட்டன்பரோ இந்த ஆவணப்படத்துக்கான வர்ணனையைக் கொடுத்துள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் இதற்கு இசையமைத்துள்ளார்.

இந்த சீஸனின் முதல் பகுதி நவம்பர் 6-ஆம் தேதி ஒளிபரப்பானது. இதில், குறிப்பாக புதிதாக பிறந்த உடும்பு ஒன்றை பாம்புகள் கூட்டம் துரத்தும் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களை விஞ்சும் அளவுக்கு பதைபதைப்பு ஏற்படுத்தும் இந்தக் காட்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

நிகழ்ச்சி முடிந்ததும் ட்விட்டருக்குப் படையெடுத்த ரசிகர்கள் இந்தக் காட்சியை வெகுவாக பாராட்டியுள்ளனர், தொடர்ந்து பாராட்டியும் வருகின்றனர்.

ஆவணப்பட வரலாற்றில் மிகச் சிறந்த காட்சிகளில் ஒன்று என சிலர் சிலாகித்தும் வருகின்றனர். அப்படி என்னக் காட்சி அது என யோசிப்பவர்கள், மேற்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் கீழே இருக்கும் இணைப்பில் அதைப் பார்க்கலாம்.