Published : 02 Nov 2016 10:56 AM
Last Updated : 02 Nov 2016 10:56 AM
பிரபல வங்க எழுத்தாளர்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பும் படைப்பாளியும், நவீன வங்க இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான ஷிர்ஷேந்து முகோபாத்யாய் (Shirshendu Mukopadhyay) பிறந்த தினம் இன்று (நவம்பர் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* வங்கதேசத்தின் மைமேம்சிங் பகுதியில் (1935) பிறந்தார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை அடுத்து, தாக்காவில் இருந்து குடும்பம் கல்கத்தாவில் குடியேறியது. ரயில்வேயில் பணியாற்றிய தந்தை அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டதால், இவரது குழந்தைப் பருவம் வங்கம், பிஹார், அசாம் என பல இடங்களில் கழிந்தது.
* உலகத்தின் மீதான இவரது பார்வையும் விரிவடைந்தது. கல்கத்தா விக்டோரியா கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வங்கமொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சிறு வயது முதலே இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நூல்களைப் படித்து, எழுத்தாற்றலை வளர்த்துக்கொண்டார்.
* ‘ஜோல் தொரெங்கோ’ என்ற இவரது முதல் கதை 1959-ல், ‘தேஷ்’ இதழில் வெளிவந்தது. அதே ஆண்டில், அதே இதழில் இவரது முதல் நாவலான ‘குன்போகா’ வெளிவந்தது. இதைத் தொடர்ந்து, வங்க இலக்கிய உலகில் பிரபலமடைந்தார். குழந்தைகளுக்கான இவரது முதல் நாவல் ‘மனோஜ்தர் அத்புத் பாரி’ பெரும் வரவேற்பை பெற்றது.
* இளம் வயதில் பல்வேறு இடங்களில் வசித்ததால், பலதரப்பட்ட மக்கள், அவர்களின் குணாதிசயங்கள், வாழ்க்கை முறை, சூழல், சமூகக் கட்டமைப்புகள் குறித்து ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார். அவை அனைத்தும் இவரது படைப்புகளில் எதிரொலித்தன.
* ‘பிபின்பாபுர் பிபாத்’ என்ற இவரது சித்திரக் கதை, ‘ஆனந்த்மேளா’ இதழில் தொடராக வந்தது. இவரது நாவல்களைத் தழுவி, குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகங்களும் ஏராளமாக வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றன.
* பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கான கதைகளையும் அதிகம் எழுதியுள்ளார். பெரியவர்களுக்கான 50 நாவல்கள், சிறுவர்களுக்கான 25 அறிவியல் புனைக் கதைகளை எழுதியுள்ளார்.
* ‘பாதாள்கர்’, ‘தோசர்’, ‘காகஜர் பாவு’, ‘ஹிரேர் அங்க்தி’, ‘பன்ஷிவாலா’, ‘சாயமோய்’ உள்ளிட்ட இவரது நாவல்கள் திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. இவரது எழுத்துகள் அறிவார்ந்த, உணர்வுபூர்வமான, உயிர்ப்பான படைப்புகளாகப் போற்றப்படுகின்றன.
* சம்பவங்களைக் கோர்வையாக சொல்வதைவிட, கதாபாத்திரங்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக்கொள்ள வைப்பதில் அதிக கவனம் செலுத்துவார். ‘அற்புதமான கதைசொல்லி’ எனப் புகழ் பெற்றார். இவரது படைப்புகள் மனித நேயம், நேசம், நம்பிக்கையை விதைத்தன. இவரது கதை மாந்தர்கள் அந்தந்த காலகட்டத்தின் மக்கள் மனநிலையை துல்லியமாகப் பிரதிபலித்தனர்.
* துப்பறியும் நாவல், த்ரில்லர் கதை, புனைக் கதை, அல்புனைக் கதைகள், அறிவியல் புனைக் கதை என அனைத்து விதமான கதைகளையும் எழுதியுள்ளார். மேற்குவங்க அரசின் வித்யாசாகர் விருது, 3 முறை ஆனந்த புரஸ்கார் விருது, 1975-ல் ‘மனபஜமினா’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
* உலகப் புகழ்பெற்ற பல படைப்புகளை வங்கமொழியில் மொழிபெயர்த்துள்ளார். தற்போது ஆனந்த பஜார் பத்திரிகா இதழில் பணியாற்றிவருகிறார். வங்க இலக்கியக் களத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கிய ஷிர்ஷேந்து முகோபாத்யாய் இன்று 81-வது வயதை நிறைவு செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT