Published : 28 Nov 2016 10:11 AM
Last Updated : 28 Nov 2016 10:11 AM
இங்கிலாந்து கவிஞர், ஒவியர், அச்சு உருவாக்குநர்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கவிஞர், ஓவியர் மற்றும் அச்சு உருவாக்குநருமான வில்லியம் பிளேக் (William Blake) பிறந்த தினம் இன்று (நவம்பர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* லண்டனில் பிராட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் (1757). குழந்தைப் பருவத்திலிருந்தே இவர் வித்தியாசமாக இருந்தார். இறைவனைக் கண்டதாகவும், தேவதைகளைக் கண்டதாகவும் தன் பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் அவன் போக்கிலேயே விட்டுவிடுவார்கள்.
* பத்து வயது வரைதான் பள்ளி சென்றார். பிறகு வீட்டிலேயே கல்வி. இவரது விருப்பப்படி இவரை பெற்றோர் ஓவியப் பள்ளியில் சேர்த்துவிட்டனர். 12-ம் வயதில் கவிதை எழுதத் தொடங்கினார். அப்பா வாங்கித் தந்த பண்டைய கிரேக்கப் பொருட்களின் வரைப்பட நகல்களை வைத்துக்கொண்டு, அவற்றைச் சித்திர வேலைப்பாடுகள் போல செதுக்கினார்.
* ஓவிய வகுப்புகள் மிகவும் செலவு பிடிப்பதாக இருக்கவே பெற்றோர் 1772-ல் பிரபல செதுக்குநர் (Engraver) ஒருவரிடம் தொழிற்பயிற்சி மாணவராக சேர்த்தனர். அங்கு 7 ஆண்டுகள் பயிற்சி பெற்று வல்லுநரானார். லண்டனில் கோத்திக் தேவாலயங்களில் இருந்த உருவங்களைப் பிரதி எடுக்கும் வேலை இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
* சிலைகள், பெயின்டிங்குகள் மற்றும் நினைவுச் சின்னங்களை ஓவியம் வரைவதற்காகவும் பல இடங்களுக்கு இவர் அனுப்பப்பட்டார். 1780-ல் ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்டில் செதுக்குநராக வேலை கிடைத்தது. எந்த வேலையைச் செய்தாலும் கவிதைகள் எழுதுவதை விடவில்லை.
* 1783-ல் ‘பொயட்டிகல் ஸ்கெட்சஸ்’ என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. தன் கவிதைகளை விளக்கும் வகையில் வண்ணச் சித்திரங்களைச் செதுக்கினார். ஒரே பிளேட்டில் கவிதை வரிகளும் அதற்கான விரிவான இல்லஸ்ட்ரேஷன் இமேஜ்களும் வருமாறு உருவாக்கும் முறையைக் கண்டறிந்தார். அச்சு உருவாக்கம் (print making) செய்வதற்காக 1784-ல் சொந்தமாக ஒரு கடையைத் தொடங்கினார்.
* அதே ஆண்டு, ‘ஐலான்ட் இன் தி மூன்’ என்ற படைப்பைப் பூர்த்தி செய்தார். மனித உடல் அல்லது அபாரமான கற்பனைத் திறனுடன்கூடிய உருவங்களையும் இவர் படைத்தார். ஓரங்களை அலங்கரிக்க புதிய நுட்பத்தைப் பயன்படுத்தினார். பிற எழுத்தா ளர்கள், கவிஞர்களின் படைப்புகளுக்கும் வரைந்துகொடுத்தார்.
* ‘தி புக் ஆஃப் தெல்’, ‘தி மேரேஜ் ஆஃப் ஹெவன் அன்ட் ஹெல்’, ‘அமெரிக்கா: ஏ புரொபசி’உள்ளிட்ட இவரது படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. நல்லது, கெட்டது, மத நம்பிக்கைகள் குறித்த, இவரது கருத்துகள் பெரும்பாலானோருக்கு முரண்பாடாகத் தோன்றின.
* இவர் தன் மனைவிக்கு எழுதப் படிக்கக் கற்றுத் தந்தார். இருவரும் இணைந்து இவரது பல நூல்களை வெளியிட்டனர். இவரது பல படைப்புகள் ஆங்கில இலக்கியத்தில் அரிதாகக் காணப்பட்ட தீர்க்கதரிசனம் வாய்ந்தவை. இவரது ஓவியங்களும் கவிதைகளும் 18-ம் நூற்றாண்டின் ரொமான்டிக், அதற்கு முந்தைய ப்ரீ-ரொமான்டிக் இயக்கங்களின் அங்கமாகப் போற்றப்பட்டன.
* பைபிளை மதித்த அதே நேரத்தில் இங்கிலாந்து தேவாலய அமைப்பை எதிர்த்தார். இவரது தனித்தன்மை வாய்ந்த படைப்பு பாணியால் விமர்சகர்களுக்கு இவரை ஒரு வரையறைக்குள் வகைப்படுத்துவது சிரமமானதாக இருந்தது.
* இவரைக் கலைஞர் என்பதா, மேதை என்பதா, ஆன்மிகவாதி என்பதா அல்லது பைத்தியக்காரர் என்பதா என்று இவரது நெருங் கிய நண்பரும் நாட்குறிப்பாளருமான ஹென்றி கிராப் ராபின்சன் இவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தனித்துவம் வாய்ந்த படைப்பாளியாகப் போற்றப்பட்ட வில்லியம் பிளேக் 69-ம் வயதில் (1827) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT