Published : 16 Nov 2016 12:40 PM
Last Updated : 16 Nov 2016 12:40 PM
அலுவலகப் பணிகள் முடிந்து வீட்டுக்கு கிளம்பத் தயாராக இருந்த தருணம் அது.
குணசேகரன்தான் செல்போனில் அழைத்தார்.
''குடும்பஸ்தன் ஆன பிறகு மேன்ஷனையே மறந்திட்டியே டா...''
''அப்படில்லாம் இல்லை பெருசு... ஒருநாள் கண்டிப்பா வர்றேன்.''
''இப்படியே எத்தனை நாளைக்குதான் சமாளிப்ப... இன்னைக்கு ஃப்ரீயா..?''
''ஹ்ம்ம். நீங்க எங்கே இருக்கீங்க?''
அடுத்த அரை மணி நேரத்தில் திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் குணசேகரனை சந்தித்தேன்.
சம்பளம் போட்ட தினம் என்பதால் குணசேகரன் நண்பர்களுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
''செல்லா நோட்டு மேட்டரால டாஸ்மாக்-ல பெரும் பாதிப்பாமே..? நாம ஏதாவது சப்போர்ட் பண்ணலாமா?" என்று கேட்டார்.
அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டதால் க்ரில் சிக்கனுக்கும், பிரியாணிக்கும் எங்கள் ஆதரவைத் தெரிவித்துக்கொண்டோம்.
சாப்பிட்டு முடிந்த சமயத்தில்தான் விகடனில் வந்த தமயந்தியின் 'தடயம்' சிறுகதை குறித்து பேசத் தொடங்கினோம்.
''காதலை இவ்வளவு வலியோடவும், அழகாகவும் சொல்ல முடியாது பெருசு. அந்தக் கதையை படிச்சு முடிச்சதும் எனக்கு அழுகை வந்துடுச்சு. தமயந்தி போன் நம்பர் வாங்கி அவங்க கிட்ட பேசணும்னு தோணிக்கிட்டே இருந்தது. ஆனா, அது ஆர்வக்கோளாறாவோ, அதிகப் பிரசிங்கித்தனமாவோ இருக்குமோன்னு விட்டுட்டேன்.''
''உனக்கு அந்த ஃபீல் வந்ததுல்ல. அதுவே போதும். பேசணும்னு அவசியம் இல்லை.''
''நாம என்னவா இருந்தாலும் ஒருத்தரோட அன்புக்குதானே கடைசி வரைக்கும் ஏங்கிக்கிட்டே இருக்கோம். அதை சில சமயங்கள்ல சரியா வெளிப்படுத்திடுறோம். காதலை சொல்லும்போது கூட தயங்கித் தயங்கி அதீத உணர்வுல புரிய வெச்சிடுறோம். ஆனா, பிரியும்போது எந்தக் காரணமும் சொல்லாம நம்ம நிலைமையை புரியவைக்காம விட்டுடுறோம். அது கன்வே ஆகாம கடைசிவரைக்கும் முள்ளாவே உறுத்திக்கிட்டு இருக்கு.''
''காதலிக்கப்பட்ட இதயம், இன்னொரு இதயத்தோட பிரச்சினையை சொல்லாமயே புரிஞ்சுக்கும். சேராத காதலும் அவன்/ அவள் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கும்.''
''எல்லா காதலும் இப்படிதான் இருக்குமா?''
''நிச்சயமா. அது மாற்றுக் காதலா இருந்தா கூட!''
''எப்படி சொல்ற?''
''என் வாழ்க்கையே என்னோட செய்தி.''
''பார்றா. பெருசு... மனசுல என்ன காந்தின்னு நினைப்பா உனக்கு.''
''இல்லை சிறுசு. நான் சீரியஸா சொல்றேன்.''
''அக்காகிட்ட சொல்லணும் போல. நீ அடங்கமாட்ட.''
''நான் வேற அக்காவைப் பத்தி சொல்ல வர்றேன்.''
*
அவர் சொன்ன அன்பின் நீட்சியை சொல்வதற்கு முன் அவரைப் பற்றிய சின்ன அறிமுகம்.
குணசேகரன் கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுத்துலகில் இடைவிடாது இயங்கிக்கொண்டிருப்பவர். வலிகளை மட்டுமே எழுத்தில் வடித்து கொண்டாடப் பழகியவர். தோற்றத்துக்கும், எழுத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியாது. ஆனால், மென்மனசுக்காரன். அவனை சாய்க்க கோடரி தேவையில்லை, குண்டூசி போதும்.
அலட்சியப்படுத்துதலும், புறக்கணித்தலுமே இந்த உலகின் உச்ச பட்ச தண்டனை என்று நினைப்பவன். யாரைப் பார்த்தாலும் மாப்ள, வாடா என்று உரிமையோடு அழைப்பான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அன்பு செய்யப் பிறந்தவன்.
ஃபேஸ்புக் அவன் நட்பின் சாளரங்களை திறந்து வைத்தது. அந்த டெக்னாலஜிக்குள் தன்னை மூழ்கடித்துக்கொண்டான். கண்ணுக்கு முன் இருக்கும் யாரிடமும் பேசாமல், சாப்பிட்டியா என்று கேட்காமல், நலம் விசாரிக்காமல் இருக்கும் குணசேகரன்தான் செல்போனில் மணிக்கணக்கில் பேசுகிறான், முகநூலில் முகம் தெரியாத நபரோடு நள்ளிரவு தாண்டியும் சாட் செய்கிறான் என்று அவதூறுகள் பரப்பப்படுவதுண்டு.
அப்படிப்பட்ட குணசேகரனுக்கு 46-வது வயதில் காதல் வந்தது. அது குணசேகரனுக்கே ஆச்சரியத்தைத் தந்தது.
குணசேகரனின் முகநூல் தோழி ஒருவர் தொடர்ந்து அவரின் கவிதைகளை வாசித்து வந்தார். ஒருநாள் குணசேகரனின் கவிதை வருத்தவடுக்களையே சுமந்து வந்ததை உணர்ந்து, சாட் செய்தார்.
குணசேகரனுடன் முகநூலில் நண்பராகி ஓரிரு மாதங்களில் இந்த சாட் கான்வெர்சேஷன் ஏற்பட்டது.
*
''வணக்கம். நான் சித்ரா."
"நல்லா இருக்கீங்களா?''
''வணக்கம். நல்லா இருக்கேன்..."
"நீங்க...''
''உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா....''
''சொல்லுங்க..''.
''எப்பவுமே ஏன் கஷ்டம், அழுகை, வலி, பைத்தியம், மரணம்னு மட்டுமே உங்க கவிதைகள் இருக்கு.''
''தெரியலை... நிறைய பேர் இதை சொல்லி இருக்காங்க.''
''அவ்ளோ பிரச்சினைகளை நீங்க சந்திச்சு இருக்கீங்களோன்னு நினைச்சேன். ஆனா, நான் நிறைய முறை கஷ்டப்பட்டபோது என் பிரச்சினைகளுக்காக கலங்கி நிக்கும்போது உங்க கவிதைகள் ஆறுதலா இருந்திருக்கு.''
''மகிழ்ச்சி...''
''உண்மையைச் சொல்லுங்க... உங்களோட வலிகளைத்தானே நீங்க வார்த்தைகள் மூலமா கவிதைகயாக்குறீங்க.''
''இல்லை. அந்த வலிகள் என்னோடது இல்லை. ஆனா, எனக்கு வலிகள் பிடிக்கும். அதனால அப்படி எழுதுறேன்.''
''உங்ககிட்ட பேசுனதுல ரொம்ப சந்தோஷம். உங்க புத்தகங்கள் எந்த பதிப்பகத்துல கிடைக்கும்? ''
''முகவரி அனுப்புறேன். சென்னையில எல்லா புத்தகக் கடைகள்லயும் கிடைக்கும்.''
''நான் திருவண்ணாமலை...''
''வம்சியில கிடைக்க வாய்ப்பிருக்கு...''
''நன்றி... ''
*
சில நாட்களுக்குப் பிறகு சித்ரா சாட்டிங்கில்...
''எப்படி இருக்கீங்க....''
.......................
10 நிமிடங்கள் கழித்து குணசேகரனின் பதில்..
''நலம்...........''
''நான் போனவாரம் சென்னை வந்தேன்.''
''ஓ.....''
''உங்களைப் பார்க்க முடியலைன்னு ஒரே வருத்தமாப் போச்சு...''
''என்னை எதுக்குப் பார்க்கணும்?''
''உங்க புக்ஸ் படிச்சேன். தயாளன், சந்திரன், வில்சன், சத்தியமூர்த்தின்னு நிறைய மனிதர்கள் கதை.''
''அதுக்குள்ளே படிச்சிட்டீங்களா?''
''உங்க கதைகள் படிக்கும்போது எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. என்னோட கவலைகளை மறக்க அது பயன்படுது.''
''நல்லது...''
குணசேகரனுக்கு இதற்கு மேல் இந்த உரையாடலைத் தொடர்வது சரியாகப்படவில்லை. லைக் போட்டு உரைக்குத் திரையிட்டான்.
*
அடுத்த நாள்...
''நீங்கதானே அந்த சத்தியமூர்த்தி. உங்க கதையையே எழுதிட்டீங்களா?''
''இல்லை..''
''சும்மா சொல்லாதீங்க. விஸ்காம், சினிமா ஆர்வம் எல்லாம் ஒத்துப்போகுதே.''
''இல்லை..''
''அப்போ இதுக்கு முன்னே என்ன படிச்சீங்க. எங்கே இருந்தீங்க..''
''அவசியம் தெரிஞ்சுக்கணுமா?''
''ஆமாம்.. என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். இப்படி ஒரு எழுத்தாளர் என் ஃப்ரெண்ட்டா இருக்கிறது எனக்குதானே பெருமை. உங்களைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்க ஆசை. ''
படித்தது, பிடித்தது, வேலைக்கு சேர்ந்தது, எழுத வைத்தது என எல்லாம் பகிர்ந்தான். மனைவி, குழந்தைகளைப் பற்றியும் சொன்னான். சித்ராவும் சொல்ல ஆரம்பித்தாள்.
''எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ரெண்டு பசங்க. பொண்ணு இல்லை. என்னை மாதிரி ஒரு பொறப்பு வேணாம்னு கடவுளுக்கே தெரிஞ்சிருக்கு பாருங்களேன். ஆனா, அது நல்லதுக்குதான்.''
''ஏன் எப்பவும் விரக்தியாவே பேசுறீங்க. உங்களுக்கு என்ன பிரச்சினை?''
''பிரச்சினை எதுவும் இல்லை. ஆனா, வாழ்க்கையில எந்த பிடிப்பும் இல்லை.''
''புரியலை''
''மாமியார் கொடுமை, புருஷனோட பிரச்சினைன்னு எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. என் தோழி, தங்கச்சி, சித்தின்னு 3 பேர் வாழ்க்கையில நிறைய பாதிப்புகள். அதைக் கண்கூடா பார்த்ததால அதையும் என்னோட பிரச்சினையாவே பார்க்கத் தோணுது. தள்ளி நின்னு பார்க்க முடியலை. அதனால சராசரிப் பெண்ணா என்னால இருக்க முடியலை. நான் நிறைய படிக்கணும், எழுதணும். என் வலிகளை எழுத்துல தீர்க்கணும்னு ஆசை. அதுல மட்டும்தான் என்னால ஆசுவாசம் அடைய முடியும்னு நம்புறேன். ஆனா, இங்கே அதுக்கான வாய்ப்பு இல்லை. புருஷன் நல்லா பார்த்துக்கிட்டாலும் அவர் மேல பெரிய காதல் இல்லை. இதை எப்படி சொல்றதுன்னு தெரியலை.''
''புரியுது...''
''என் உணர்வைப் புரிந்துகொண்டதுக்காக நன்றி.''
.........
10 நாட்கள் கழித்து...
''என்னாச்சு.. ஃபேஸ்புக் பக்கம் ஆளையே காணோம்.''
''கொஞ்சம் உடம்பு சரியில்லை... அதான்.. லீவ்ல ஊருக்குப் போயிருந்தேன்.''
''தினம் தினம் உங்க சாட்டிங்காக காத்துக்கிட்டு இருந்தேன். உங்க மெசேஜ் பார்க்காம என்னால் இருக்க முடியலை.''
''இது சரியா, தப்பான்னு கூட தெரியலை. ஆனா, பிடிச்சிருக்கு...''
''நான் என்ன சொல்றதுன்னு தெரியலை சித்ரா..''
''நீங்க எதுவும் சொல்ல வேணாம். என்னை அவாய்ட் பண்ணாம பேசுனா போதும்.''
''சின்ன விபத்து நடந்துச்சு. தலையில காயம் பட்டதால என்னால ஆபிஸ் வர முடியலை. லீவ் எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போய்ட்டேன்.''
''இப்போ எப்படி இருக்கு. பரவாயில்லை. இன்னும் கட்டு பிரிக்கலை....''
''எப்போ பிரிப்பீங்க?''
''2 நாள்ல...''
''டேக் கேர்''
''நன்றி...''
*
அடுத்த 2 நாட்களுக்குப் பிறகு சித்ரா சாட்டிங்கில்...
''உங்க போட்டோவை நான் ஃபேஸ்புக்ல பார்த்திருக்கேன். புக்ல சின்ன பாஸ்போர்ட் சைஸ்ல பார்த்திருக்கேன். ஆனா, நீங்க என்னைப் பார்த்ததே இல்லையே. என் முகத்தைக் கூட பார்க்கணும்னு தோணலையா...''
குணசேகரனும் பதில் தருகிறான்.
''ஃபேஸ்புக்ல உங்க ஃபோட்டோ இல்லை. அதனால உங்களுக்கு ஃபோட்டோ போடுறது பிடிக்காதுன்னு நினைச்சேன்.''
''இப்போ இன்பாக்ஸ்ல அனுப்பவா?''
''உங்க விருப்பம்''
''அனுப்புறேன்''
''கிடைச்சதா? எப்படி இருக்கு?''
''நல்லா இருக்கு...''
''அது பழசு....''.
''புதுசு இதோ...''
''என்ன மொட்டை. வேண்டுதலா''
''ஆமாம். என் குணா நல்லா ஆகணும்னு வேண்டிக்கிட்டு அடிச்ச மொட்டை.''
குணசேகரன் அதிர்ந்து போனான்.
''எனக்காகவா ஏன் இப்படி. இதெல்லாம் ரொம்ப அதிகம்னு தோணலையா உங்களுக்கு...''
''இல்லை. தப்புன்னு தோணலை. அதிகம்னு கூட தோணலை. இதை சொல்லணும்னு தோணுச்சு. மத்தபடி உன் மேல உயிரா இருக்கேன்னு சொல்றதுக்காக நான் இதைப் பண்ணலை.
உங்களைப் பிடிச்சிருக்கு. உங்க மேல அன்பு செலுத்துற ஒரு உயிர் இருக்குன்னு தெரிவிச்சுக்குறேன். அவ்ளோதான்....''
''இந்த அன்பை அப்படியே என்னால திருப்பிக் கொடுக்க முடியாது. ''
''நான் அதை எதிர்பார்க்கலை...''
''அடுத்த வெள்ளிக்கிழமை கே.கே.நகர் வர்றேன். சந்திக்கலாமா?''
''பார்க்கலாம்''
.......
அந்த வெள்ளிக்கிழமையில் குணசேகரன் சித்ராவை சந்திக்கவில்லை. சந்திப்பை குணா தவிர்த்ததும் சித்ரா மனமொடிந்துபோனாள்.
ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்து விரல்களில் கோபத்தைக் கொட்டினாள்.
''நான் ஒண்ணும் உங்க கூட வாழப் போறேன்னு பெட்டி படுக்கையோட வந்துடலை. உங்களைப் பார்க்கணும்னு துடிச்சது உண்மைதான். ஆனா, எந்த காலத்துலயும் அப்படி ஒரு விஷயம் நமக்குள்ள நடக்காது. எந்த மன உளைச்சலும் இல்லாம தெம்பா இருங்க. எப்பவும் உங்க முன்னாடி வந்து நின்னுட மாட்டேன்.''
இப்படி மெசேஜ் செய்துவிட்டு திருவண்ணாமலைக்கு பஸ் ஏறினாள்.
........
குணசேகரனால் பதிலளிக்க முடியவில்லை.
இரு நாட்கள் கழித்து மன்னிப்பு கேட்டான்.
இப்போதும் அவர்கள் சாட் செய்துகொண்டிருக்கிறார்கள்.
.........
குணசேகரன் நடந்ததைச் சொன்னதும் சித்ரா மீது இனம் புரியாத மரியாதை ஏற்பட்டது. இப்படி எத்தனை சித்ராக்கள், குணசேகரன்கள் இருப்பார்கள் என்ற கேள்வியுடன் வீட்டுக்குப் புறப்பட்டேன்.
குணசேகரன் எனக்கு இர்ஃபான் கானாகவே தெரிந்தார். மாற்றுக் காதலை கண்ணியமாக சொன்ன விதத்தில் 'லன்ச் பாக்ஸ்' மிக முக்கியமான படம். சர்வதேச திரைப்பட விழாக்கள், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் என பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், முகம் பார்க்காமல் மனதால் அலைவரிசை பொருந்திப் போன காதலைப் பதிவு செய்த விதம் என்னை வெகுவாக ஈர்த்தது.
மும்பையில் அரசு அலுவலகத்தில் அக்கவுண்டட் ஆக பணிபுரிகிறார் சாஜன் ஃபெர்னாண்டஸ் (இர்ஃபான்கான்) இன்னும் சில நாட்களில் பணியிலிருந்து ஓய்வு பெற இருக்கும் சாஜன் மனைவியை இழந்தவர். தனி நபராக இறுக்கத்துடன், அதிகம் பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று கறாராக இருப்பவர். உணவு விடுதியிலிருந்து அலுவலகத்துக்கு டப்பா வாலாக்கள் மூலம் வரும் உணவை சாப்பிடுகிறார்.
ஒருநாள் மிக சுவையான உணவை சாப்பிடும் சாஜன், உணவு விடுதிக்கே சென்று சமையல் செய்ததைப் பாராட்டுகிறார். ஆனால், அந்த உணவு இலா (நிம்ரத் கவுர்) எனும் 30 வயது இளம் பெண், தன் கணவனுக்காக சமைத்துக் கொடுத்தது.
அந்த உணவு டப்பா வாலாக்கள் மூலம் தவறாக சாஜன் கைக்கு சென்று சேர்கிறது. இதை அறியாத இலா, அன்று மாலை டிபன் கேரியர் காலியாக இருப்பதைக் கண்டு, தான் சமையலில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகக் கருதுகிறாள். கணவன் வீட்டுக்கு வந்ததும் சமையல் எப்படி இருந்தது என்று ஆர்வமாய்க் கேட்கிறாள்.
காலிஃபிளவர் நன்றாக இருந்தது என்று கணவன் சொன்னதும், தன் சமையலை வேறு ஒருவர் சாப்பிட்டதாகத் தெரிந்துகொள்கிறாள். மேல்வீட்டு ஆன்ட்டியின் ஆலோசனைப்படி, முகம் தெரியாத அந்த நபருக்காக ஒரு கடிதம் எழுதி மறுநாள் டிபன் கேரியருடன் அனுப்புகிறாள். அதில், மிச்சம் வைக்காமல் காலியாக வைத்தமைக்கு நன்றி என்று எழுதியிருப்பதைப் படிக்கும் சாஜன் இன்று உணவில் உப்பு அதிகம் என்று எழுதுகிறார்.
அப்போது வேலைக்கு புதிதாக சேருகிறார் ஷேக் (நவாஸுதின் சித்திக்) அவருக்கு வேலை கற்றுக்கொடுக்கும் பொறுப்பு சாஜனுக்கு தரப்படுகிறது. சாஜன் பணி ஓய்வுக்குப் பிறகு அவர் இடத்தை ஷேக் நிரப்புவார் என்பது நிர்வாகத்தின் திட்டம்.
ஆனால், ஷேக் கேட்கும்போதெல்லாம் லன்ச் முடிந்து 4.45-க்கு வா என்று சொல்லும் சாஜன் அவருக்கு வேலை சொல்லித்தராமல், தட்டிக்கழிக்கிறார். ஒரு கட்டத்தில் ஷேக் அனாதை என தன்னிலை விளக்கம் கொடுத்து கலங்க, ஒவ்வொரு வேலையாக சாஜன் தருகிறார்.
சாஜன் - இலா கடிதப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கடிதங்கள் மூலம் சாஜன் கொஞ்சம் கொஞ்சம் மாறுகிறார்.
ஷேக் அலுவலகத்தில் செய்த கணிதத் தவறுக்கு நான் தான் காரணம் என்று அலுவலகப் பழியை சாஜன் தன் மீது போட்டுக்கொள்கிறார். அந்த அளவுக்கு அன்புக்குரியவராக மாறுகிறார்.
கடிதங்கள் மூலம் சாஜன் தன் மனைவி குறித்து எழுதுகிறார். அந்தக் கால பாடல், படங்கள் என திரும்பத் திரும்பப் பார்ப்பது எந்த விதத்திலும் சுவாரஸ்யம் இல்லை. ஆனால், அதையே விரும்பிச் செய்யாவிட்டாலும் திரும்பத் திரும்பச் செய்வதாகக் கூறுகிறார்.
இலா தன் கணவனுக்கு இன்னொரு பெண் மீது காதல் இருப்பதாகவும், சட்டையில் இருக்கும் சென்ட் வாசம் மூலம் கண்டுபிடித்ததாகவும் கடிதம் எழுதுகிறாள். இருவரின் நட்பும் பலமாகிறது.
பணம் அதிகம் தேவைப்படாத பூடான் நாட்டுக்கு தன் குழந்தையுடன் செல்ல முடிவெடுத்திருப்பதாக இலா எழுதுகிறாள். நானும் உங்களுடன் வரலாமா என்று சாஜன் கேட்கிறார்.
ஒருநாள் இருவரும் சந்திப்பது என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால், அன்றைய நாளில் தான் வயதானவர் என்ற தோற்றம் சாஜனுக்கு ஏற்படுகிறது. அதனால் இலாவை சந்திக்க வேண்டாம் என்று நினைக்கிறார். பேசிக்கொண்டபடி அந்த உணவகத்தில் இலா காத்திருக்கிறாள். சாஜன் அங்கு வந்து ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு இலாவை கவனிக்கிறார். பிறகு, இலாவிடம் பேசாமல், அருகில் செல்லாமல், தன்னை அறிமுகம் செய்துகொள்ளாமல் வீட்டுக்குத் திரும்புகிறார்.
மறுநாள் இலாவின் டிபன் கேரியர் வழக்கம் போல் வருகிறது. ஆனால், அது காலியாக இருக்கிறது. கோபத்தில் இலா இப்படி செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்த சாஜன் பதில் கடிதத்தில் உணவகம் வந்ததை எழுதுகிறார். மேலும், தாத்தாவின் வாடை எனக்கு வந்துவிட்டதை உணர்வதாக குறிப்பிடுகிறார்.
நாசிக் செல்ல முடிவெடுத்து ரயில் ஏறுகிறார். அதிலும் விருப்பமில்லாமல் வீடு திரும்புகிறார். உணவு சரியாக சென்று சேரவில்லை என்று டப்பா வாலாக்களிடம் புகார் கூறுகிறார் இலா. அப்படி நடக்க வாய்ப்பேயில்லை என்று மறுக்கிறார் தொழிலாளி. அவரிடம் தன் டிபன் கேரியர் எந்த அலுவலகத்துக்கு செல்கிறது என்று கேட்டு, முகவரி தேடி பயணிக்கிறார் இலா. அங்கு சாஜன் இல்லை. அவர் பணி ஓய்வு பெற்றுவிட்டதாகவும், நாசிக் சென்றதாகவும் ஷேக் கூறுகிறார்.
விரைவில் நாசிக் வருவேன் என்று இலா மனதில் நினைத்துக்கொள்கிறார். டப்பா வாலாக்கள் உதவியுடன் இலாவின் இருப்பிடத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார் சாஜன்.
இலாவின் நம்பிக்கையில் காதலின் உன்னதம் உயர்ந்து நிற்கிறது. கடைசியில் இலாவின் நிலை என்ன? அவர் வார்த்தைகளிலேயே தெரிந்துகொள்ளலாம்.
''நீங்க நாசிக் போய் சேர்ந்திருப்பீர்கள். காலையில் எழுத்து தேநீர் தயாரித்திருப்பீர்கள். அதற்குப் பிறகு, ஒருவேளை காலை 'வாக்கிங்' சென்றிருப்பீர்கள். நான் இன்று காலையில் எழுந்தேன். என்னுடைய நகைகளை விற்றுவிட்டேன். வளையல்கள், தாலி போன்றவை. நிறைய இல்லை. ஆனால், நம்முடைய ஒரு ரூபாய் பூடானில் ஐந்து ரூபாய்க்கு சமமாம். அதனால் கொஞ்சகாலத்தை ஓட்டிவிடலாம். அதற்குப் பிறகு, பார்த்துகொள்ளலாம். இன்று யஷ்வி ஸ்கூலில் இருந்து வருவதற்குள் எங்களுடைய பொருட்களையெல்லாம் 'பேக்' செய்துவிட்டிருப்பேன். மதியம் வண்டிக்குப் புறப்பட்டுவிடுவோம்.
ஒருவேளை, இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு அனுப்பலாம். உங்களுடைய புதிய தபால்காரர் அதை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கவும் செய்யலாம். அல்லது ஒருவேளை இந்தக் கடிதத்தை நான் என்னிடமே வைத்துகொண்டிருக்க வேண்டும். பிறகு, சில ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் படிக்க வேண்டும். நான் எங்கயோ படித்திருக்கிறேன். சில சமயங்களில் தவறான ரயில்கூட சரியான இடத்துக்குக் கொண்டுபோய் சேர்க்கும் என்று. பார்க்கலாம்'' என்கிறார்.
தவறான ரயில் கூட சரியான இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கலாம் என்று ஷேக் சாஜனிடம் சொல்வது, கணவன் இறந்ததும் அவரால் பட்ட கஷ்டம் அதிகம் என அதிருப்தியை வெளிப்படுத்திய இலாவின் தாய், சடலத்துக்கு அருகில் பசிக்கிறது என சொல்வதாக வாழ்க்கையின் போக்குகளை நிதர்சனங்களாக கண் முன் நிறுத்துகிறார் இயக்குநர் ரித்தேஷ் பத்ரா.
இரண்டாவது குழந்தை குறித்து யோசிக்கவில்லையா என இலாவிடம் சாஜன் கேட்பது, இலா அடுத்த குழந்தைக்கான ஆவலை கணவனிடன் வெளிப்படுத்துவது, கணவன் அதற்கு அலட்சியமாய் பதில் சொல்வது என உறவின் உண்மை நிலையை சரியாகக் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் கவனத்துக்குரியது.
படத்தில் சாஜன் - இலாவும் சேர்வதில்லை. மனதால் சேர்ந்துவிட்ட அந்த காதலர்கள் நிஜத்தில் சேராதது பெரிய குறையாகவும் தெரியவில்லை. சேர்ந்தால்தான் காதல் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
*
குணசேகரன் - சித்ரா சந்திப்பு சமீபத்தில்தான் நிகழ்ந்திருக்கிறது. அன்பு அவர்களுக்குள் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது...
"என்னதான் இருந்தாலும் இதை முன்னே நகர்த்துவது காம்ப்ளிகேட்டட் ஆச்சே?" என்று மிகவும் கேஷுவலாக கேட்டதற்கு, குணசேகரன் ரொம்ப சீரியஸான முகத்துடன் சொன்னது:
"நானே அறியாமல் என்னிடம் பதுங்கியிருந்த தேடலும் தேவையும்தான் சித்ராவிடம் இணைத்தது. ஆதாய நோக்கத்தை இரு தரப்பிலுமே உதாசினப்படுத்தி, நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் அன்பையும் அரவணைப்பையும் பரிமாறிக்கொள்ளும் பட்சத்தில் பாதகங்களைத் தவிர்க்க முடியும்."
*
இலாக்களும் சித்ராக்களும் மாற்றுக் காதலை நாடுவது, மனதளவிலான வெறுமை சார்ந்த உளவியல் காரணமாக இருக்கலாம். ஆனால், இவர்கள் செய்தித்தாள்களின் விற்பனைப் பண்டமாக மாறாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களின் பரஸ்பர நம்பிக்கையும், தெளிவான சிந்தனையுடன் சூழல்களை அணுகும் போக்கும்தான் துணைபுரிகிறது.
அதேபோல் இலாக்கள், சித்ராக்கள், சாஜன்கள், குணசேகரன்களை முழுமையாகப் புரிந்துகொள்ள இலாக்கள், சித்ராக்கள், சாஜன்கள், குணசேகரன்களாலும் அல்லது அவர்களின் மனநிலையில் சிந்திக்க முற்படுபவர்களால் மட்டுமே சாத்தியம்!
- மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்.
க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in
முந்தைய அத்தியாயம்: >மான்டேஜ் மனசு 18: மாறாக் காதலின் பொக்கிஷங்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT