Published : 26 Nov 2016 10:07 AM
Last Updated : 26 Nov 2016 10:07 AM

அதிசய உணவுகள் - 20: ஸ்டாம்பிட் உணவு விழா!

"வார்த்தைகள் வெளிப்படுத்தாத அன்பை நல்ல உணவு வெளிப்படுத்திவிடும்" - அலன் டி.உல்பெல்ட்

உலக பாரம்பரிய களமாகப் போற்றப்பட்டு, பாதுகாக்கப்படும் ராக்கி மலைத் தொடர்களைப் பார்த்து மகிழ கனடா நாட்டுக்குப் பயணபட்டிருந்தோம். பிரிட்டிஷ் கொலம்பியா தொடங்கி கனடாவின் மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்டா வரையில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மலைத் தொடர்களின் அழகை வருணிப்பதற்கு வார்த்தைகள் போதாது. வியக்கத்தகு வனப் பகுதிகள், பல்வேறு வன விலங்குகள், சுற்றியிருக்கும் காட்சிகளை அப்படியே பிரதிபலிக்கும் தெள்ளத் தெளிந்த தண்ணீரைக் கொண்ட அல்பைன் ஏரிகள் என்று கண்ட கண்கள் உள்வாங்கிய காட்சிகளே அவற்றின் அழகுக்குக் கட்டியம் சொல்லும்.

இந்தப் பயணத்தின்போது, கனேடியன் ராக்கி மலைத் தொடர்களுக்கு 80 கி.மீ தொலைவில் இருக்கும் கால்கரி என்ற நகரத்துக்குச் சென்றோம். அல்பர்டா மாகாணத்தைச் சேர்ந்த இந்த நகரத்தில் வருடந்தோறும் ஜூலை மாதத்தில் 'ஸ்டாம்பிட்' என்கிற உலகிலேயே மிகப்பெரிய திறந்த வெளியில் நடக்கின்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ரோடியோ என்கிற கட்டுக்குள் அடங்காக் குதிரைகளை அடக்கி, அதன்மீது சவாரி செய்வது, தேசியக் கண்காட்சி, குதிரைகள் அல்லது எருதுகள் இழுத்துச் செல்லும் பார வண்டிகளை வேகமாக ஓட்டிச் சென்று வெற்றிவாகை சூடுவது, விவசாயப் போட்டிகள், அணிவகுப்புகள், மேடை நாடகங்கள், கச்சேரிகள் என்று கால்கரி நகரமே விழாக்கோலம் பூண்டுவிடும். 10 நாட்கள் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களில் உள்ளூர், வெளியூர், வெளிநாட்டுப் பயணிகள் என்று லட்சக்கணக்கில் வந்து குவிந்து, கலந்து மகிழ்கிறார்கள்.

இந்த ஸ்டாம்பிட் விழாவின் முக்கிய அம்சமாக எல்லோராலும் போற்றப்படுவது அங்கே 10 நாட்களுக்கும், இலவசமாக வருவோருக்கு எல்லாம் வழங்கப்படுகின்ற காலை உணவு வகைகளாக இருக்கிறது.

நானும் என் கணவரும் கால்கரியில் நடைபெறுகிற ஸ்டாம்பிட் விழாவில் கலந்துகொள்வதற்கு ஏற்றாற்போல, எங்கள் பயணத்தைத் திட்டமிட்டிருந் தோம். இதற்குத் தேவையான நுழைவுச் சீட்டுகளை முன்னரே அங்கே வாழ்கின்ற, எங்கள் நண்பர் மூலம் பதிவு செய்திருந்தோம்.

ஸ்டாம்பிட் விழாவுக்கு உரித்தான உடையான ஜீன்ஸையும், கவ் பாய் தொப்பியையும் நான் அணிந்துகொண் டேன். என் உடல் முழுவதும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. துள்ளல் நடைபோட்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தோம். கால்கரி நகர மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, பல குழுக்களாகப் பிரிந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் இலவச காலை உணவை வழங்கிக் கொண்டிருந்தனர்.

ஒரு புகழ்பெற்ற ஷாப்பிங் மாலில் வெளியே நடந்துகொண்டிருந்த ஸ்டாம் பிட் ஃபிரீ பிரேக்பாஸ்ட்டுக்கு நாங்கள் சென்றோம். கண்களுக்கு எட்டிய தொலைவு வரையில் அடுப்பு கள் வரிசையாக அனல்விட்டு எரிந்து கொண்டிருந்தன. அதன்மீது கிடத்தப் பட்டிருந்த பேன் கேக்கை தயாரிக்கும் கல்களில் விதவிதமான பேன் கேக்குள் வெந்துகொண்டிருந்தன. ஒருபுறம் கொத்துக் கறிகளைக் கொண்டு தயாரிக் கப்படும் ஸாசேஜ்கள் வறுபட்டுக் கொண்டிருந்தன. இதைத் தவிர பழரசங்கள், முட்டை பொரியல்கள், காப்பி போன்ற சூடான பானங்கள் என்று பலவிதமான உணவு வகைகளை வந்தவர்களுக்கு எல்லாம் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தனர்.

நம்மூரில் திருவண்ணாமலை தீபத் தின்போதும், மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழா போதும் தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர், சுக்கு காபி, சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை வருகின்ற பக்தர்களுக்கு எல்லாம் விநியோகிப்பார்கள். அது சாதாரணமாக ஒருநாள் முழுவதும் நடைபெறும். ஆனால் ஸ்டாம்பிட் விழாவில் 10 நாட்களும் சிறிதுகூட சலிக்காமல் பேன் கேக்குகளைக் கொதிக்கக் கொதிக்க சுட்டுக் கொடுக் கிறார்கள். மொத்தம் 2 லட்சம் பேன் கேக்குகளுக்குக் குறையாமல் வழங் கப்படுகிறது என்பதை அறிந்து மலைத் துப் போனேன்.

மேப்பிள் சிரப்பில் ஊறவைத்த, சாக்லேட் சிரப்பைக் கொண்டு அலங்கரிக் கப்பட்டது, பலவிதமான பழத் துண்டுகள் சேர்த்தது என்று விதவிதமான பேன் கேக்குகளை நானும் என் கணவரும் உண்டு மகிழ்ந்தோம். வெறும் வயிற் றுக்கு மட்டும் விருந்து இல்லை, காதுகளுக்கும் ஜாஸ் இசையின் இனிய இசை விருந்தளித்தது. குழந்தைகளும், நடுத்தர வயதினரும், முதியவர்களோடு சேர்த்து வயது வித்தியாசங்களை மறந்து இசைக்கேற்ப ஆடி மகிழ்ந்தனர். ராட்டினம், மேஜிக் ஷோக்கள், பலவித மான விளையாட்டுகளுக்கு நடுவே, 'கவ் பாய்' தொப்பிகள் விற்பனையும் வெகு ஜோராக நடந்தது.

வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவங்களுள் ஒன்றாக இந்த ஸ்டாம்பிட் விழா அமைந்தது. ஆரம்ப தினத்தன்று கண்ட ஊர்வலம், பகல் வேளையில் கண்காட்சி, பிறகு முரட்டு குதிரைகளை அடக்கும் ரோடியோ, பார வண்டிகளின் போட்டி, அந்தி மயங் கும்போது இசை நிகழ்ச்சி, 'ஆ' என்று வாயைப் பிளக்க வைக்கும் ரேசர் ஷோக்கள், ஆட்டம் பாட்டம் என்று இசை களோடு உணவு வகைகளையும் சேர்ந்துக் கொள்ள வயிறும் மணமும் ஒருசேர குளிர வைத்த ஸ்டாம்பிட் விழாவை நினைத்தால் இன்றும் நெஞ்சம் ஆனந்தத்தால் நிரம்பி வழிகிறது.

உலகின் பல நாடுகளைச் சுற்றி பல கலாச்சாரங்களில் மூழ்கி மகிழ்ந்து, பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து, கறுப்பு, பழுப்பு, வெள்ளை, இடுக்கு கண்கள், சப்பை மூக்குகள், சதுரம், வட்டம், நீண்ட முகங்கள், அழகிய கண்கள், எடுப்பான மூக்குகள், செம்பட்டை, கருப்பு, வெளுப்பு முடி, ஒல்லி, குண்டு, படுகுண்டு, அளவான தேகம் என்று எத்தனை எத்தனை வகையான மனிதர்கள்! உலகெங்கும் பரவிக் கிடக்கும் இவர்கள், சாப்பிடும் சாப்பாடுகள்தான் எத்தனை விதமாக இருக்கிறது. சில… மிரள வைத்தன. பல… 'இப்படியுமா இருக்கும்?!' என்று வியக்க வைத்தன. இன்னும் சில… மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டின.

அங்கே பலவற்றைச் சாப்பிட்டேன். சிலவற்றைக் கண்டு கதிகலங்கி னேன். மேலும், சிலவற்றை வீட்டில் சமைத்து மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தேன். உலகை வலம் வந்த போது மொழி தெரியாத நாட்டில் சொந்தம், நண்பர்கள் என்று கொண்டாட முடியாத மனிதர்கள் காட்டிய அன்பு, செய்த உதவிகள் என்னையும் என் கணவரையும் மகனையும்... மனிதனை நாடு, மதம், உருவம், சாப்பிடும் உணவு, கலாச்சாரம் என்ற பாகுபாடுகளாகக் கடந்து மனிதனாக மட்டுமே, அவனுடைய மனிதநேயத்தை, அன்பு மனதை, ஆன்மாவை மட்டுமே பார்க்கக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

அன்பே சிவம்!

-நிறைவு

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:shanthisiva12@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x