Published : 09 Nov 2016 11:01 AM
Last Updated : 09 Nov 2016 11:01 AM

அப்துல் ரகுமான் 10

கவிக்கோ எனப் போற்றப்படும் தமிழ் கவிஞர்

‘கவிக்கோ’ என்று போற்றப்படும் சிறந்த தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான் (Abdul Rahman) பிறந்தநாள் இன்று (நவம்பர் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மதுரை கீழ்ச்சந்தைப் பேட்டையில் (1937) பிறந்தவர். தந்தை உருதுக் கவிஞர். தாத்தா உருது, பாரசீக மொழிகளில் கவிதை புனையும் ஆற்றல் மிக்கவர். அதனால், இயல்பிலேயே இவரும் கவிதை எழுதும் திறன் கொண்டிருந்தார்.

* பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, இவருக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லை. தமிழில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்பதை அறிந்தவர் மகிழ்ச்சியுடன் அங்கு சேர்ந்தார். இலக்கண, இலக்கியங்கள் பயின்றார். இவரும் கவிதை எழுதத் தொடங் கினார்.

* தமிழில் உயர்கல்வி பயின்றார். அப்போது, ஆங்கில இலக்கியம் மீதும் நேசம் பிறந்தது. கீட்ஸ், ஷெல்லி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதையில் மனம் கவரப்பட்டார். கல்லூரியில் நடக்கும் அனைத்து கவிதைப் போட்டிகளிலும் இவருக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும்.

* முதுகலைக் கல்வி பயிலும்போது, மவுலானா ஜலாலுத்தீன் ரூமி, இக்பால், தாகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோரது கவிதைகளைப் படித்தார். அவர்களைப் போலவே எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவ்வாறே எழுதவும் தொடங்கினார். ‘தமிழ்நாடு’ என்ற நாளிதழில் சில ஆண்டுகள் பணியாற்றினார். தமிழில் புதுக்கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

* தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். சமஸ்கிருதமும் கற்றார். எந்தத் துறையில் இறங்கினாலும் அதன் வேர் வரை சென்று ஆழக் கற்பது இவரது இயல்பு. 1974-ல் இவரது முதல் கவிதையான ‘பால்வீதி’ வெளிவந்தது.

* ‘திராவிட நாடு’, ‘திராவிடன்’, ‘முரசொலி’, ‘தென்றல்’, ‘இன முழக்கம்’, ‘மன்றம்’, ‘விகடன்’ உள்ளிட்ட பல இதழ்களில் இவரது தொடர் கட்டுரைகள், சிறுகதைகள் வெளிவந்தன. இலக்கியத்தின் பல களங்களில் முத்திரை பதித்தாலும், ஒரு கவிஞராகவே இவர் புகழ்பெற்றார். இவரது தத்துவக் கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

* ‘வானம்பாடி’ இயக்கத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக மலர்ந்தார். கவியரங்கக் கவிதைகளாலும் புகழ்பெற்றார். பேசும்போது சிலேடை மொழிகளாலும் மெல்லிய நையாண்டியாலும் மற்றவர்களைக் கவர்வது இவரது பாணி.

* வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் முதலில் தமிழ் விரைவுரையாளர், பின்னர் பேருரையாளர் அதன்பிறகு பேராசிரியராக உயர்ந்தார். தமிழ்த் துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார்.

* இவரது ‘ஆலாபனை’ கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இதன்மூலம், வெகுகாலமாக தமிழ்க் கவிதைக்கு வழங்கப்படாமல் இருந்த இந்த விருதை தமிழுக்குப் பெற்றுத் தந்தார். ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கிய வகைகளை தமிழில் பரவச் செய்தார். சூஃபி பாடல்களின் தத்துவ தரிசனம் இவர் பாடல்களில் பிரதிபலிக்கும்.

* கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஆய்வுக் கட்டுரை, சொற்பொழிவு, கவியரங்கம் என பல களங்களிலும் முத்திரை பதித்துவரும் கவிக்கோ அப்துல் ரகுமான் இன்று 80-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x