Published : 21 Nov 2016 04:27 PM
Last Updated : 21 Nov 2016 04:27 PM
சாலையில் செல்லும்போது குப்பை லாரி எதிரே வந்தாலே மூக்கைப் பிடித்துக்கொள்கிறவர்கள் நாம். அந்த வேலையையே வாழ்க்கையாகக் கொண்டவர்களை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? குப்பை லாரி குறுக்கே வந்ததற்கே ''ஐயோ தாங்கமுடியவில்லை'' என்று தள்ளி ஓடும் நாம் மலம் அகற்றும் வேலையில் ஈடுபடுத்தப்படுபவர்களை மனிதர்கள்தான் என்று எண்ணியிருக்கிறோமா?
சமீபத்தில் வெளிவந்துள்ள 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் இவர்களது குரல்கள் ஒலிக்கின்றன. கழிவகற்றுபவர்களின் அந்த ஆதங்கக் குரல்கள் நம்மை தூக்கமிழக்கச் செய்கின்றன.
ஒரு துப்புரவுத் தொழிலாளி தான் அணிந்திருக்கும் காக்கிநிற உடுப்பைப் பற்றி சொல்கிறார்... ''இந்த துணியோட போனா யாரும் என்னை மதிக்கமாட்டாங்க.'' இன்னொரு தொழிலாளியோ, ''லெட்டின் பாத்ரூம் கழுவுற வேலையைப் பாத்திங்கன்னா செத்துர்றலாம்...'' என்கிறார்.
''இங்க பாருங்க நானும் மனுஷன்தானே'' என்று தனது பணியிடத்தின் மோசமான நிலையைக் காட்டிக் கதறுகிறார் பிறிதொரு தொழிலாளி. கழிவகற்றும் பணிபுரியும் ஒரு தாய் ''இந்த வேலை செய்யும்போது என் பையன் என்ன அம்மான்னுகூட கூப்பிடமாட்டான் என்பது கொடுமையிலும் கொடுமை. அதைவிட கொடுமை இன்னொரு தாய்மார், ''அந்த மாதிரி குப்ப அள்றதைப் பாத்து என் பையன் என்னத் தொடாதம்மா கையைக் கழுவிட்டு என்னைத் தூக்கும்மா'' என்று கூறும்போது நம் நெஞ்சம் கிழிபடுகிறது.
சாதி அமைப்புமுறை தகர்க்கப்பட்டால் ஒழிய இந்நடைமுறை விளிம்பு நிலை மக்களை அழுத்திக்கொண்டுதான் இருக்கும் என்ற குரலையும் உணரமுடிகிறது. இத்தகைய கொடிய நடைமுறை எப்பொழுது வந்தது என்ற கேள்வி ஆராய்ச்சி வரலாறு எழுத வேண்டுமானால் உதவும். ஆனால் இப்பொழுதும் தொடர்கிறதே இதை மாற்ற என்னதான் செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி...
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ என்று மகாகவி பாரதி கேட்டு ஒரு நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. நம் கண்ணெதிரே மனிதர்கள் நோகும் இந்த அவலம் இன்னமும் தொடர்வதை இதயம் உள்ளவர்கள் பார்த்தால் நிச்சயம் குற்ற உணர்ச்சி ஏற்படும். மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவு தொடரத்தான் வேண்டுமா? என்ற கேள்வி பிறக்கும்.
இந்திய சமுதாயம் எவ்வளவோ முன்னேறிவிட்டது என்று பெருமைபேசிக்கொள்கிறோம். யார் சொன்னது? 4 நிமிட முன்னோட்டத்திலேயே கழிவகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய சமூகத்தின் இன்றைய சாட்சிகள் 40 பேரை நம் கண்முன் நிறுத்திவிட்டார் இயக்குநர் திவ்யபாரதி. ட்ரெயிலரே இப்படியென்றால் மெயின் பிக்சர்? மாற்றம் தேடும் சமூகப் பணியில் களம் இறங்கியுள்ள இயக்குநர் திவ்ய பாரதியின் இம்முயற்சி நிச்சயம் தூண்டுகோலாய் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை...
நீங்களும் பாருங்கள்.... ''கக்கூஸ்'' ஆவணப்பட முன்னோட்டத்தை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT