Published : 16 Sep 2022 04:24 AM
Last Updated : 16 Sep 2022 04:24 AM
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், தமிழ்நாட்டில் புதிய அறிவு இயக்கமாக இருக்கிறது. அதன் கட்டுரைகள் இலக்கியத்தில், அறிவியலில், அரசியலில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் இலக்கியப் பகுதி தமிழ் நாளிதழ்கள் செய்யாதது. எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களும் உரிய கெளரவத்தை இந்த நாளிதழ் அளித்துவருகிறது. ‘இந்து தமிழ் திசை’யின் அரசியல் சார்பற்ற நடுநிலை கவனம் கொள்ளத்தக்கது. இந்த வகையில் இந்த நாளிதழ் பத்தாம் ஆண்டில் அடியெடுத்துவைப்பது மிக முக்கியமான விஷயம். - எழுத்தாளர் இமையம்
தமிழ் சினிமாவுக்கும் தமிழின் சமகால எழுத்தாளர்களுக்கும் எவ்வளவு உறவு இருக்கிறதோ அவ்வளவுதான் தமிழ் தினசரிகளுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்குமான உறவு என்று சொல்லலாம். என் நண்பர்களிடம் வேடிக்கையாகச் சொல்வதுண்டு: “எழுத்தாளர்கள் பற்றி கிசுகிசுகூட எழுத மாட்டேன் என்கிறார்கள்” என்று. அந்தப் பெருமைகூட சினிமா நடிகர்களுக்குத்தான். இந்த நிலையை மாற்றியதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. எழுத்தாளர்களுக்குச் சமூகத்தில் என்ன இடம் இருக்க வேண்டும் என்பதற்கு நம் அருகில் உள்ள கர்நாடகமும் கேரளமும் சாட்சி. அந்த நிலை வருவதற்கு நெடுந்தொலைவு இருக்கிறது. அந்தத் தொலைவைக் கணிசமான அளவில் குறைத்ததில் ‘இந்து தமிழ் திசை’ முதலில் நிற்கிறது. - எழுத்தாளர் சாரு நிவேதிதா
பத்தாம் ஆண்டில் காலடிவைக்கும் 'இந்து தமிழ் திசை', தமிழ்ச் சமூகத்திற்கும் பத்திரிகையுலகிற்கும் செய்துள்ள பங்களிப்பு மிகுந்த பாராட்டிற்குரியது. இலக்கியத்திற்கெனத் தனிப்பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. எழுத்தாளர்களைச் சிறப்புக் கட்டுரைகள் எழுதவைக்கிறது. எழுத்தாளர்களின் நினைவைப் போற்றும் விதமாக சிறப்புப் பக்கம் ஒதுக்குகிறது. இது தமிழ் நாளிதழ் வரலாற்றில் தனித்துவமிக்கச் சாதனை. புத்தகத் திருவிழாவை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ‘இந்து தமிழ் திசை’ செய்து வரும் பணிகள் மிகுந்த பாராட்டிற்குரியது. வாசகர்களைக் கொண்டாடும் விதமாக வாசகர் திருவிழாவை நடத்தி அதன் வழியே வாசகர்களின் கருத்துகளை அறிந்துகொள்வதுடன் அவர்களையும் பத்திரிகையில் எழுதவைப்பதை ‘இந்து தமிழ் திசை’ வாசகர்கள் மீது கொண்டுள்ள அன்பின் அடையாளமாகவே கருதுகிறேன். - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
இந்து குழுமத்திலிருந்து தமிழ் நாளிதழ் வரப்போகிறது என்று செய்தி வந்தபோது பெரிய எதிர்பார்ப்பு, என்னைப் போன்ற வாசகர்களுக்கு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிறைவுசெய்யும் விதமாக ‘இந்து தமிழ் நாளிதழ்’ வருவது மகிழ்ச்சி. தனக்கெனத் தனி பாதை அமைத்து நடைபோட்டுவருகிறது. நடுப்பக்கம், இணைப்பிதழ்கள் ஆகிய பகுதிகளில் வெளிவரும் கட்டுரைகள் பெருவாரி மக்களால் கொண்டாடப்படுகிறது. பெண் இன்று, மாயா பஜார், வெற்றிக்கொடி போன்ற இணைப்பிதழ்கள் சிறப்பாக வெளி வருகின்றன. நாளிதழ்க் கட்டுரைகள் விவாதங்களை எழுப்பியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. மக்களுக்குக் கல்வி புகட்டக்கூடிய ஒரு நாளிதழாக ‘இந்து தமிழ் திசை’ இருக்கிறது.- எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்
‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் எனக்கு மறக்க முடியாத நினைவுகள் உண்டு. அதன் முதல் இலக்கியப் பக்கத்தில் என் நேர்காணல் வெளிவந்தது. இலக்கியம், அறிவியல், அரசியல் சார்ந்த பல முக்கியமான கட்டுரைகளை ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்டுள்ளது. அறிவார்ந்த தளத்தில் புதிய பார்வையுடன் செய்தியைச் சொல்வதற்கு ஓர் வெற்றிடம் இருந்தது. அதை ‘இந்து தமிழ் திசை’ பூர்த்திசெய்திருக்கிறது என நம்புகிறேன். அந்த வகையில் இந்தப் பத்தாண்டுப் பயணம் என்பது ஒரு சாதனைதான். - எழுத்தாளார் அழகிய பெரியவன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment