Published : 17 Oct 2016 06:32 PM
Last Updated : 17 Oct 2016 06:32 PM

வரலாற்றுச் சுவடுகளை அறிய உதவிய தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி

நாம் பேசும் பல வார்த்தைகள் தமிழா என்ற சந்தேகம் எப்போதாவது ஏற்பட்டது உண்டா? அப்படி ஏற்படவில்லையெனில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சிக்கு சென்றிருந்தால் கண்டிப்பாய் அந்த சந்தேகம் வலுத்திருக்கும். ஆம் அவ்வளவு புதிய தமிழ் வார்த்தைகள், நாம் பேசும் பல வார்த்தைகள் வேற்று மொழியில் இருந்து வந்து கலந்தவை என்பதை சொல்லி அதற்கான தூய தமிழ் வார்த்தைகளை சொல்கின்றனர்.

தமிழர்கள் தங்களது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் மறந்து போன நிலையில் இப்படியொரு கண்காட்சி ஆண்டுதோறும் நடத்துவது தேவையான ஒரு செயலாகவே இருக்கும். கண்காட்சியின் நுழைவாயிலில் தமிழின் பொய்யாப்புலவர் திருவள்ளுவர் ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ எனும் குறளுடன் நம்மை வரவேற்கிறார். ஆரம்பத்தில் புடவியும் (பேரண்டம்) உடுமண்டலங்களும் (Galaxy) வளிமுகில்களும் (வாய்மேகங்களும்) எவ்வாறு உருவாகின எனபதை படங்ககளுடன் தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி விளக்கியுள்ளனர்.

அதன்பின் செல்லச் செல்ல தமிழர்களின் சங்க கால வரலாற்றிலிருந்து மூவேந்தர்களின் வரலாறு, தமிழ் நிலத்தை ஆண்ட வேறு மன்னர்கள் என ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்துவது வரையான வரலாறு வரைபடங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நமக்கு பாடப்புத்தகங்களில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பல வரலாற்றை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் தகவல்களை வைத்திருந்தனர். அதற்கான ஆதாரங்கள் பலருக்கும் புரியும் வகையில் வைக்கப்பட்டிருந்தது சிறப்பு.

தமிழ்க்கடல் மறைமலை அடிகள், புலவர் குழந்தை, பதின்கவனகர் ராமையா, பேராசிரியர் சாலை இளந்திரையன், பாவலரேறு பெருஞ்சித்தரனார் போன்ற பல்வேறு தமிழ்ப் புலவர்கள் பற்றிய வாழ்க்கை குறிப்புகளையும் அவர்களது சாதனைகளையும் அவர்களது புகைப்படத்துடன் வைத்திருந்தனர். பல்வேறு குழந்தைகளும் அந்த தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகளை அறிந்துகொள்ள உதவியது. கண்காட்சியின் மூலம் பல்வேறு தலைவர்கள் பற்றியும் பல்வேறு நிகழ்வுகள் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களின் சிறப்புகள், அவை உருவான விதம், அம்மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தளங்கள் இவற்றைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய பலகைகள் மட்டுமல்லாது ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிறப்புப் பொருட்களான திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி உப்பு, ஆரணி பட்டு போன்றவற்றையும் நம் பார்வைக்கு வைத்திருந்தனர். த்மைசர்களின் ஆதி ஆட்டங்களும் அவை எவ்வாறு இப்போது மருவி உள்ளன என்பதைப் பற்றிய குறிப்புகளோடு அந்த ஆட்டங்களை சிறிய களிமண்ணால் செய்து வைத்திருந்தனர். ஆயகலைகள் 60 என பலர் சொல்ல கேட்டிருந்தாலும் அக்கலைகள் என்ன? என்பது யாருக்கும் தெரிவதில்லை. அக்கலைகளின் பெயர்களோடு அக்களைகளைப் பற்றிய குறிப்புகளும் புகைப்படங்களும் பார்வைக்கு இருந்தன.

தமிழின் தொன்மையான புத்தகங்களைப் பற்றிய குறிப்புகளோடு அப்புத்தகங்களையே பார்வைக்கு வைத்திருந்தது அருமையான முயற்சி. தமிழகத்தின் சின்னங்கள், சுற்றுலாத் தளங்கள் போன்றவற்றையும் களிமண்ணால் செய்து வைத்திருந்தனர். மரபு உணவுகள் சார்ந்த விழிப்புணர்வுகளையும் தீய உணவுகளை புறக்கணிப்பது தொடர்பானவற்றையும் ஒருங்கே அமைத்திருந்தனர்.

கண்காட்சியில் பார்வையார்களைக் கவர்ந்த பகுதி பேய் வீடுதான். அவ்வீட்டின் உள்ளே உடலுக்கு தீங்கு தரும் உணவுகளான துரித உணவுகள், நச்சு குளிர்பானங்கள் போன்றவற்றை பேயாகவும், எலும்புக்கூடுகளாகவும் மாட்டி வைத்திருந்தனர்.

தமிழ் மரபில் வந்த இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகளையும் இசைக்கருவிகளையும் காண முடிந்தது. இத்தனை விஷயங்களை ஒருங்கே ஒரு இடத்தில் பார்ப்பதற்கு எவ்வித கட்டணமும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு. இக்கண்காட்சியை தமிழகப் பெண்கள் செயற்களம் என்ற அமைப்பினர் கடந்த 10 வருடங்களாக நடத்தி வருகின்றனர்.

கண்காட்சி ஏற்பாட்டாளர்களிடம் பேசியபோது, ''தமிழர்களின் பாரம்பரியத்தையும், அவர்களின் மரபையும் மொழியையும் மீட்டெடுப்பதே எங்கள் அமைப்பின் குறிக்கோள். அதற்காகவே இந்த அமைப்பின் மூலம் இத்தகைய கண்காட்சியை நடத்தி வருகிறோம்'' என்றனர்.

மக்களிடம் சேகரிக்கும் பணத்தைக் கொண்டே முழுக்க முழுக்க இக்கண்காட்சியை நடத்துவதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தமிழர்கள் தங்கள் வரலாறை தாமே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படும் இக்கண்காட்சி நிறைய செய்திகளை நம்மிடையே சொல்கிறது. அவற்றை இன்னும் ஆழமாகத் தேடிப் படிக்க இவை உதவியாக இருக்கும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x