Published : 23 Oct 2016 01:08 PM
Last Updated : 23 Oct 2016 01:08 PM
‘‘வாடா எலக்ட்ரீஷியன்! இன்னிக்கு எங்கே பல்பு மாட்டப் போறே..?’’
டீ வாங்கப் போன இடத்தில் சத்தார் பாய் சிரித்தபடியே கேட்டார். புது பேட்டரியை நகக்கண்ணில் வைத்ததுபோல எகத்தாளமாக ‘எர்த்’ அடித்தது அவரது கேள்வி. அவரும் சும்மா சொல்லவில்லை. பத்து வயதிலேயே நான் ‘எலக்ட்ரீஷியன்’ பட்டம் வாங்கிய அந்த சம்பவம் முந்தைய நாள்தான் நடந்தது.
***
‘அடேய் பாலா.. சீக்கரம் வாடா’ - தெருவில் நின்றபடி அழைத்தான் மனோகரன்.
நல்ல வேளை, அம்மா வீட்டில் இல்லை.. கடைக்கு போனவர் திரும்பி வருவதற்குள் அவசர அவசரமாக அவனுடன் கிளம்பினேன்.
அடுத்த தெருவில்தான் அவன் வீடு. கொஞ்ச நேரத்தில் சிவா, குப்பன், ஆறுமுகம் எல்லோரும் அங்கு ஆஜர்.
விடுமுறை நாட்களில் அவன் வீடுதான் எங்களுக்கு விளையாட்டு அரங்கம்.
அன்றும் ராஜா, ராணி, திருடன், போலீஸ் ஆட்டம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது.
‘டேய்.. நாமளும் கோயில் கட்டி விளையாடலாமாடா...’ திடீரென ஒரு புது திட்டத்தை அறிவித்தேன்.
எங்கள் ஊர் கமலக்கண்ணி அம்மனுக்கு நடக்கும் சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றது. பத்து நாட்களுக்கு கோயிலில் மைக் செட் கட்டி பாட்டு போடுவதும், வண்ண விளக்குகளால் அலங்கரிப்பதும் இரவில் அம்மன் வீதியுலா வருவதும் என்று களைகட்டியிருக்கும். மாலையில் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் புத்தகப்பையை வீட்டில் வைத்துவிட்டு, நண்பர்கள் அனைவரும் கோயிலுக்கு ஓடிவிடுவோம். கோயில் எதிரில் உள்ள ஆலமரத்தில் ஊஞ்சல், குரங்கு ஆட்டம் , கண்ணாமூச்சி என நேரம் போவதே தெரியாது.
வீதியுலா, மேளக்கச்சேரி, ஆட்டம், பாட்டம், வேளா வேளைக்கு பொங்கல், சுண்டல் என பத்து நாட்களாக கோயிலுக்குள் சுற்றிக்கொண்டிருந்ததன் தாக்கமோ என்னவோ தெரியவில்லை.. என்னுடைய ‘கோயில் கட்டி விளையாடும்’ திட்டத்துக்கு எல்லாரும் கோரஸாக தலையாட்டினார்கள்.
மனோகரன் வீட்டுக்கு அருகில் மாடு கட்டுவதற்காக சிறிய கொட்டகை போட்டிருந்தனர். அங்கு கோயில் கட்ட முடிவானது. உடனடியாக திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கிவிட்டோம். நிதி ஒதுக்கீடு, பூமி பூஜை, நல்ல நேரம் எதுவும் பார்க்கவில்லை.
எங்கள் கோயிலைக் கட்டுவதற்கு, நடிகையும் நடிகரும் விளம்பரப்படுத்துகிற அக்மார்க் டிஎன்டி மணப்பாறை முறுக்கு கம்பியா வேண்டும்.. ஏரிக்கரைக்கு ஓடிச்சென்று நொச்சி செடி கொம்புகளை ஒடித்து எடுத்து வந்தோம். குச்சிகளை நட்டோம்.. அதன்மீது தழைகளைப் போட்டோம்.. ‘வானளாவ’ இரண்டடி உயரத்துக்கு உயர்ந்திருந்த கோயிலை கால் மணி நேரத்துக்குள் கட்டி முடித்தபோது, எனக்கும் மனோகரனுக்கும் அப்படியொரு சந்தோஷம்!
கோயில் ரெடி! சாமி?
திருவிழாவின்போது வாங்கிய பொரி பாக்கெட்டில் இருந்த அம்மன் படத்தை ஒரு அட்டையில் ஒட்டினோம். கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்துவிட்டோம்.
‘ஏண்டா.. கோயில கட்டிட்டோமே, திருவிழா நடத்த வேணாமா?’ என்றான் மனோகரன். அதற்கும் பிளான் போட்டோம். களிமண்ணால் சக்கரங்கள் செய்து, அதன்மீது சிறிய கொம்புகள், தென்னங்குச்சிகளை வைத்து கட்டினோம். பள்ளிக்கூட மைதானம், பால் டெப்போ என பல இடங்களிலும் அலைந்து திரிந்து கண்ணில் பட்ட பூக்களை எல்லாம் பறித்து வந்தோம். தும்பைப்பூ முதல் அரளிப்பூ வரை சேர்த்து கட்டி தொங்கவிட்டோம்.
கோயிலுக்கு சற்றும் குறையாமல், ‘பிரம்மாண்டமாக’ அதே இரண்டடி உயரத்துக்கு தேரும் ரெடி!
தேரோட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. மனோகரனின் வீட்டு வாசலே மாட வீதிகளாயின. வீடுகள் இல்லாமல் வீதியா? குப்பன், சிவா, முனியன், மனோகரனின் தங்கை, தம்பி சரவணன் எல்லோரும் செங்கல்லால் ஒரு கட்டம் போட்டு, தங்களுக்கென தனியாக ‘வீடு’ கட்டிக் கொண்டனர். தேர் வலம் வந்தபோது அவரவர் வீட்டு வாசலில் நின்று தேங்காய், பழம் (கற்கள்தான் தேங்காய்.. கருவேல மரத்து காய்களே வாழைப்பழம்) கொடுத்து பூஜை செய்தனர்.
எல்லோரும் கைகாசு போட்டு வாங்கி வைத்திருந்த ஆரஞ்சு மிட்டாய், வீட்டில் இருந்து எடுத்து வந்த வேர்க்கடலை (இது ரெண்டும் ஜினல் ஜினல்தான்) எல்லாவற்றையும் வைத்து படையல் போட்டோம். பயபக்தியுடன் விழுந்து கும்பிட்டோம். விபூதிக்குகூட வழியில்லை. மண்ணை நன்றாக சலித்து, அதையே விபூதியாக்கிவிட்டோம். பிறகு ஆரஞ்சு மிட்டாய் பிரசாதம் விநியோகம்.
எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆரஞ்சு மிட்டாய் பிரசாதத்தை வாயில் போட்டு மென்றபடி பேசிக் கொண்டிருந்தோம்.
‘நம்ம கோயிலுக்கு லைட் போட்டா நல்லா இருக்கும்ணே’ என்றான் சரவணன் வெள்ளந்தியாக. அதைக் கேட்டதும் எனக்குள் ஆராய்ச்சி மணி அடித்தது.
எங்கள் வீட்டுக்கு அருகில் ரேடியோ ரிப்பேர் செய்யும் கடையும், அதற்குப் பக்கத்தில் சவுண்டு சர்வீஸ் கடையும் இருந்தது. கடைக்கு வெளியே, துண்டு வயர்களை குப்பையில் போட்டிருப்பார்கள். அவற்றையெல்லாம் எடுத்து வந்து இணைத்து நீளமான வயராக மாற்றினேன். மனோகரன் எங்கிருந்தோ ஒரு குண்டு பல்பை கொண்டு வந்தான். பல்பில் இருந்த கம்பியில் வயர்களை கட்டினேன். மறுமுனையை மனோகரன் வீட்டுக்குள் இருந்த பிளக்கில் சொருகச் சொன்னேன். எல்லோரும் என்னை ஒரு விஞ்ஞானியாக பார்த்தார்கள்.
பல்பு எரியவில்லை.
‘டேய் மனோகரா வயர நல்லா சொருவுடா..’ என்று கத்தினேன்.
அவனும் வயரை சொருகிவிட்டு சுவிட்சைப் போட்டான். ஹூகூம்.. லைட் எரியவில்லை.
‘வயர்ல கரண்டு வரலையாண்ணா’ - அன்னைக்கே வடிவேலு பாணியில் அப்பாவியாக கேட்டான் சரவணன்.
அந்தக் கேள்விதான் எங்கள் கோயிலுக்கு வைத்த வெடி என்பது அப்போது தெரியவில்லை.
‘இருடா பாக்குறேன்’ - எலக்ட்ரிகலில் டிப்ளமோ வாங்கியவன் கணக்காக சொல்லிவிட்டு, வயரில் இருந்த இணைப்பை தொட்டுப் பார்த்…
பயங்கர அலறல் சத்தம்.. உலகமே இருண்டுவிட்டதுபோல இருந்தது.. பத்துப் பதினைந்து நிமிடங்கள் எதுவும் தெரியவில்லை. ஏதோவொரு திக்கில் சொருகிப் போயிருந்த கண்கள் லைட்டாக இயல்பு நிலைக்கு திரும்பின. சிரமப்பட்டு கண்விழித்தேன். என்னைச் சுற்றி பெரும் கூட்டமே நின்றிருந்தது. வைத்தகண் வாங்காமல் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. நடந்ததை ஊகிப்பதற்குள் ஆளாளுக்கு எங்களை திட்டித் தீர்த்தனர். அந்த இரைச்சலுக்கிடையே, கோயிலைப் பார்த்தேன். அது இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து கிடந்தது.
ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்தாலும் எதையும் உடனே ஊகிக்கத் தெரியவில்லை. அம்மாவுக்கு பயந்து அன்று முழுவதும் வீட்டை விட்டு நான் வெளியே வரவில்லை.
மறுநாள், அம்மா கடைக்குப் புறப்பட்டுப் போன நேரத்தில், தலைதெறிக்க மனோகரன் வீட்டுக்கு ஓடினேன். என் நண்பர் கூட்டம் மொத்தமும் அங்குதான் இருந்தது. எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக (பரிதாபமாகத்தான்) பார்த்தார்கள். மனோகரனும் சரவணனும் என்னிடம் பேசவே தயங்கினர்.
மனோகரனைக் கூப்பிட்டு, ‘நேத்து என்னடா நடந்துச்சு?’ என்றேன்.
ஒருவரை ஒருவர் மீண்டும் திகிலுடன் பார்த்துக்கொண்டார்கள்.
‘ஏண்டா வயர தொட்ட..? உனக்கு ஷாக் அடிச்சிடுச்சு. அப்பிடியே ஆளு உசரத்துக்கு மேல போயி தொப்புன்னு கோயில் மேலயே விழுந்துட்ட.. நாங்கள்லாம் பயந்தே போய்ட்டோம்..’ என்றான் மனோகரன் அதிர்ச்சியில் இருந்து மீளாதவனாக.
அப்போதுதான் எல்லாம் புரிந்தது. பயத்தில் முனியனும் குப்பனும் இரண்டு நாள் என் வீட்டுப் பக்கமே வரவில்லை.
மனோகரனின் குடிசை வீடும் நாங்கள் கோயில் கட்டிய மாட்டுக் கொட்டகையும் இன்றைக்கு மாடி வீடுகளாக மாறிவிட்டன.
இப்போதும் ஊருக்குப் போனால், என்னை அறியாமல் அந்த இடத்தை திரும்பிப் பார்க்கிறேன். ‘கோயில்’ சம்பவம் ஞாபகத்துக்கு வந்து, ஒவ்வொரு முறையும் மனதுக்குள் ‘ஷாக்’ அடித்துவிட்டுப் போகிறது! பல்பு மாட்டுவது, ஃபீஸ் போடுவது என வயர் சம்பந்தமான வேலைகள் என்றால், இப்போதுவரை நைஸாக கழன்றுகொண்டு விடுகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT