Published : 13 Oct 2016 10:18 AM
Last Updated : 13 Oct 2016 10:18 AM
நவீன நோயியலின் தந்தை என போற்றப்பட்டவர்
ஜெர்மனியைச் சேர்ந்த அறிவியலாளரும் நவீன நோயியலின் தந்தை, மருத்துவத்தின் பிதாமகர் எனப் போற்றப்பட்டவருமான ருடால்ஃப் லுட்விக் கார்ல் வர்ச்சோ (Rudolf Ludwig Carl Virchow) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*வடமேற்கு போலந்தின் விட்வின் என்ற நகரில் பிறந்தார் (1821). தந்தை, விவசாயி. சிறுவயதில் இருந்தே படிப்பில் கெட்டிக்காரர். ஜெர்மனி, லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட பல மொழிகளில் நல்ல ஞானம் பெற்றிருந்தார்.
*விசேஷ ராணுவ உதவித் தொகை பெற்று பெர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார். சாரிட்டி மருத்துவமனையில் பணியாற்றி, அதன் தலைவராக உயர்ந்தார். நோயியல் குறித்து ஆராய்ந்தார். முதன்முதலில் 1845-ல் லுக்கோமியா குறித்து கட்டுரை வெளியிட்டார். பல்வேறு நோய்களைக் குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கைகளை வழங்கினார். இதனால், ஜெர்மனியில் பொது சுகாதாரத் திட்டம் உருவானது.
*அந்த சந்தர்ப்பங்களில் பொது சுகாதாரக் களத்தில் பல்வேறு மாற்றங்களையும் மேம்பாடுகளையும் கொண்டு வந்தார். ‘மெடிக்கல் ரெஃபார்ம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். நோய்களுக்கான காரணங்கள், மருந்துகளின் விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு விலங்குகளைப் பயன்படுத்தினார்.
*வுட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் 1849-ல் நோயியல் உடற்கூறியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 5 ஆண்டுகளுக்குப் பின்னர், பெர்லின் சாரிட்டி மருத்துவமனையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நோயியல் இன்ஸ்ட்டிடியூட்டில் உடற்கூறியல் மற்றும் உடல் இயங்கலியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
*பல்வேறு நோய்கள் குறித்து ஆராய்ந்து லுகோமியா, அரிய வகைப் புற்றுநோய்க் கட்டியான கோர்டோமா, எம்போலிசம் (ரத்தக் குழாய் அடைப்பு நோய்), த்ரோம்போசிஸ் (இரத்த உறைவு நோய்) உள்ளிட்ட பல நோய்களுக்கு பெயரிட்டார். மேலும் வர்ச்சோஸ் நோட், வர்ச்சோஸ் செல், வர்ச்சோஸ் சின்ட்ரோம், வர்ச்சோஸ் கிளான்ட் உள்ளிட்ட பல மருத்துவ நிலவரங்கள் இவரது பெயரில் குறிப்பிடப்பட்டன.
*குற்ற விசாரணைகளுக்கு முதன்முதலாகத் தலைமுடி ஆராய்ச்சியைப் பயன்படுத்தினார். அனைத்து உடல் பாகங்களையும் சர்ஜரி செய்து, மைக்ரோஸ்கோப் மூலம் பரிசோதனை செய்யும் பிரேதப் பரிசோதனை முறையை முதன்முதலாக மேம்படுத்தினார்.
*அறிவியல் தொடர்பான இவரது உரைகள் தொகுக்கப்பட்டு, நூலாக வெளியிடப்பட்டது. மானுடவியல், இனப் பண்பாட்டியல், வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைக் குறிக்கும் ‘ப்ரீஹிஸ்டரி சங்கம்’ உள்ளிட்ட பல அமைப்புகளைத் தொடங்கினார்.
*சமூக மருத்துவம் மற்றும் கால்நடை நோயியலின் முன்னோடியாகவும் செயல்பட்டார். ‘வர்ச்சோ ஆர்சிவ்’, ‘ஜர்னல் ஆஃப் என்டமாலஜி’ உள்ளிட்ட பல இதழ்களையும் தொடங்கினார். ‘ஹான்ட் புக் ஆன் ஸ்பெஷல் பாதாலஜி அன்ட் தெரப்யூட்டிக்ஸ்’ என்ற 6 தொகுதிகள் கொண்ட பெரிய நூலை 1954 முதல் இரண்டாண்டு காலம் வெளியிட்டார். ‘செல்லுலார் பாதாலஜி’ என்ற நூல் 1858-ல் வெளிவந்தது.
*சமுதாய மருத்துவம் என்ற இந்தக் களத்தை, இவர் ‘சமுதாய அறிவியல்’ என்று குறிப்பிட்டார். ‘ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ்’ உள்ளிட்ட பல அறிவியல் அமைப்புகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*காப்ளே பதக்கம் உட்பட பல விருதுகளைப் பெற்றார். மருத்துவர், மானுடவியலாளர், நோயியல் மருத்துவர், உயிரியலாளர், எழுத்தாளர், ஆசிரியர், அரசியல்வாதி எனப் பல்வேறு களங்கள் வாயிலாக மானுட முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட, ருடால்ஃப் லுட்விக் கார்ல் வர்ச்சோ 1902-ம் ஆண்டு, 81-ம் வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT