Published : 27 Oct 2016 04:23 PM
Last Updated : 27 Oct 2016 04:23 PM
மாற்றுக் காதலுக்கும் மாட்டிக்கொண்ட காதலுக்கும் வித்தியாசத்தைச் சொல்லும் நீரஜ் பாண்டேவின் புதிய குறும்படம்.
'எ வெட்னஸ்டே' என்ற மிகச் சிறந்த படத்தை இந்தியாவுக்கு, மன்னிக்கவும் உலகுக்குத் தந்த இயக்குநர் நீரஜ் பாண்டே எடுத்த குறும்படம் இது.
தீவிரவாதத்த்தையும் சமூகக் கோபத்தையும் சமூக அக்கறையையும் சரிவிகிதத்தில் அணுகிய ஓர் இயக்குநரின் குறும்படம் 'OUCH' (அடச்சே அல்லது அடக்கடவுளே!) சாதாரணமாகவா இருக்கும்?
ஐந்து நட்சத்திர ஓட்டல் அறைக்கு ஓர் ஸ்மார்ட் குடும்பஸ்தர் வருகிறார். அவர் யாருக்காக காத்திருக்கிறாரோ அந்த நபர் ஒரு பெண். ஒரு புத்தம் புது சூட்கேஸோடு வருகிறார். அப்படியென்றால், என்னதான் அவர்கள் திட்டம் என்ற எதிர்பார்ப்பும் தூண்டத் தொடங்குகிறது.
ஏற்கெனவே திருமணமாகி குடும்பத்துடன் இருக்கும் அந்தப் பெண்ணை நம்பி, தன் மனைவியைகூட விவாகரத்து செய்யப்போவதாக சொல்லிவிட்டு வந்துவிட்டார் அந்த நபர்.
ஆனால் நடந்தது என்ன?
எக்குத்தப்பாக சில உறவுகள் சிக்கிக்கொள்கின்றன வாழ்க்கையென்னும் கடலில். அது சிலநேரங்களில் விடுகதையாகவும் வேறு சில நேரங்களில் சிறுகதையாகவும் மலர்வதுண்டு. பலநேரங்களில் அது தொடர்கதையாகவும் டிவி சீரியல்களாகவும் கூட ஆகிவிடுகின்றன.
இந்தக் குறும்படத்தில் வருவது அந்த மாதிரி ஓர் உறவுச்சிக்கலில் மாட்டிக்கொண்ட இருவரின் முக்கியப்பொழுது ஒன்று மட்டுமே. மனோஜ் பாஜ்பாயின் துறுதுறு நடிப்பிலும் பூஜா சோப்ராவின் பக்குவப்பட்ட பாவனைகளிலும் வெளிப்படும் வசனங்கள் 10 நிமிட ஒரே காட்சியில் சிரிப்பை அள்ளிக்கொட்டுகிறது. அவர்களின் உரையாடல்கள் வழியே கதாபாத்திரங்களின் வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவந்துவிட்டார் இயக்குநர்.
திருமண வாழ்க்கைக்கு வெளியே நிகழும் நல்ல உறவுகளையும் நல்ல உள்ளங்களையும்கூட நாம் கொச்சைப் படுத்திவிடமுடியாது. ஆனால், குடும்பத்தை அம்போவென்று விட்டுவிட்டு எகிறத் துடித்து எக்ஸ்பிரஸையே பிடிக்க நினைக்கும்போது ப்ரண்ட் வீல் மட்டுமல்ல, பேக்வீல்கூட ஒத்துழைக்க வேண்டும் என நினைப்பதில்தான் நிறைய சிக்கல்கள்.
மாற்றுக் காதலுக்கும், உரிய சொந்தங்கள் பார்க்கவில்லை என்பதற்காக வீட்டில் ரொம்ப நாள் பொய் சொல்லித் திரியும் காதலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை உணரவைத்த பாண்டே சார் உங்க ஒர்க் சூப்பர்.
ஒரு நிமிஷம் இருங்க, எங்க வாசகர்களும் உங்கப் படத்தைப் பாக்க விரும்பறாங்க.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT