Published : 16 Oct 2016 12:15 PM
Last Updated : 16 Oct 2016 12:15 PM

நோவா வெப்ஸ்டர் 10

அமெரிக்காவில் ஆங்கிலச் சொல், எழுத்து இலக்கணத்தை வகுத்தவரும், அமெரிக்காவுக்கென பாடநூலை அறிமுகப்படுத்தியவருமான நோவா வெப்ஸ்டர் (Noah Webster) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் வெஸ்ட் ஹார்ட்ஃபோர்டு நகரில் (1758) பிறந்தார். தந்தை அரசு ஊழியர்; விவசாயி. அம்மா, தன் பிள்ளைகளுக்கு எழுத்தறிவு, கணிதம், இசை ஆகியவற்றைக் கற்பித்தார். நோவா மிகவும் கெட்டிக்காரச் சிறுவன்.

* இவரது அறிவுக்கூர்மையை உணர்ந்த பாதிரியார், யேல் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுத இவருக்குப் பயிற்சி அளித்தார். 16-வது வயதில் யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். லத்தீன், கிரேக்கம் பயின்றார். புத்தகங்கள் படிப்பதில் அளவுகடந்த நாட்டம் கொண்டிருந்தார். 1778-ல் பட்டம் பெற்றார்.

* தந்தையிடம் இருந்து பண உதவி கிடைக்காததால் சட்டம் பயிலும் ஆசையைக் கைவிட்டார். வருமானத்துக்காக ஆசிரியர் பணியில் ஈடுபட்டார். பிரபல வழக்கறிஞர் ஒருவருடன் தங்கியிருந்து அவரிடம் சட்டம் பயின்றார். 1781-ல் சட்டத்தில் பட்டம் பெற்றார்.

* வாழ்க்கையில் நல்லது அல்லது மோசமான தாக்கம் எதுவாக இருந்தாலும் அதுகுறித்து உடனடியாக ஒரு கட்டுரை எழுதிவிடுவார். ‘அமெரிக்கர்கள் தங்கள் பாடப் புத்தகத்துக்காக ஆங்கிலேயரை நம்பக்கூடாது. சொந்த நாட்டில் தயாராகும் பாட நூல்களைப் படிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். அமெரிக்கர்களுக்கு சொந்தமான அகராதி வேண்டும் என்று எண்ணினார்.

* மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்பினார். ‘ப்ளூ-பேக்டு ஸ்பெல்லர்’ என்ற நூலை வெளியிட்டார். புத்தகங்களை எப்படிப் படிப்பது, வார்த்தைகளை எவ்வாறு எழுத்துக்கூட்டி உச்சரிப்பது என்று இந்நூல் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது.

* ஆங்கில இலக்கண நூலை 1783-ல் வெளியிட்டார். உச்சரிப்பு, எழுத்துக்கூட்டுதல், படித்தல் ஆகியவற்றை கற்றுக்கொடுக்கும் முறையை இந்நூல் மேம்படுத்தியது. அமெரிக்க உச்சரிப்பை தரப்படுத்துவதிலும் பெரும் துணையாக அமைந்தது. இது ஏராளமான பிரதிகள் விற்றது. அமெரிக்க ஆங்கில சொல் இலக்கண நூலை வெளியிட்டார்.

* இவரது மொழி சீர்திருத்தப் பணியால் உருவான ஆங்கில உச்ச ரிப்பு முறைகளும், சொல் இலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக அமைந்துள்ளது. அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக் கப் புத்தகங்களையே படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

* வார்த்தைகள், அவற்றின் பிறப்பிடம் ஆகியவற்றை 25 ஆண்டுகளாக ஆராய்ந்து, 1828-ல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதியான வெஸ்டர் அகராதியை வெளியிட்டார். பல்வேறு மொழிகளின் சொல் பிறப்பியலை மதிப்பீடு செய்ய ஜெர்மன், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, அராபிய மொழி, சமஸ்கிருதம் உட்பட 28 மொழிகள் கற்றார்.

* ஒவ்வொரு மாநிலமாகச் சென்று தனது அகராதிக்கு காப்புரிமை பெற்றார். இதைத் தொடர்ந்து, காப்புரிமைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசு, அதை புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்த்தது. இதனால், ‘காப்புரிமைச் சட்டத்தின் தந்தை’ என்று போற்றப்பட்டார்.

* அமெரிக்க சொல் இலக்கணப்படியே அமெரிக்க ஆங்கிலப் பதிப்பு கள் அமைய வேண்டும் என்பதை செயல்படுத்திக் காட்டினார். பள்ளிப் பாடநூல்களை எழுதினார். அவை பிரிட்டீஷ் ஆங்கில இலக்கண முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தன. இசை, நடனம் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். அமெரிக்க மொழி அறிஞர், கல்வியாளர், பாடப்புத்தகங்களின் முன்னோடி எனப் போற்றப் பட்ட நோவா வெப்ஸ்டர் 85-வது வயதில் (1843) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x