Published : 14 Oct 2016 10:10 AM
Last Updated : 14 Oct 2016 10:10 AM

லாலா ஹர்தயாள் 10

விடுதலைவீரர், படைப்பாளி

விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த படைப்பாளியுமான லாலா ஹர்தயாள் (Lala Hardayal) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*டெல்லியில் உள்ள சீராகானா என்ற பகுதியில் (1884) பிறந்தார். உருது, பாரசீக மொழிகளில் பண்டிதரான அப்பா, தன் மகனுக்கு நல்ல கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தார். துளசி தாசரின் ராமசரிதமானஸ் மற்றும் புராணங்களைத் தாயிடம் கற்றார்.

*டெல்லி செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல் லூரியில் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற் றார். பஞ்சாப், லாகூரில் பயின்று சமஸ் கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற் றார். அசாதாரண நினைவாற்றல் கொண்டவர். தேசபக்தி மிக்கவர்.

*லாகூரில் செயல்பட்ட கிறிஸ்தவ இளைஞர்கள் அமைப்பின் செயலருடன் ஒரு பிரச்சினையில் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இளைஞர்களை ஒன்றுதிரட்டி ‘இந்தியா அசோசியேஷன்’ அமைப்பைத் தொடங்கினார். லாலா லஜபதிராய் உள்ளிட்ட பலர் இதில் இடம்பெற்றிருந்தனர்.

*எம்.ஏ. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதால் பஞ்சாப் அரசின் உதவித்தொகை கிடைத்தது. லண்டன் சென்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு ‘பொலிடிகல் மிஷனரி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். ஆங்கில அரசின் உதவித்தொகையில் படிக்கப் பிடிக்காமல், பாதியிலேயே நாடு திரும்பினார்.

*‘பஞ்சாப்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினார். இவரது செல்வாக்கு அதிகரித்ததால் ஆங்கில அரசு மிரண்டது. இவரைக் கைது செய்ய அரசு தயாராவதை உணர்ந்த லாலா லஜபதிராய், இவரை வற்புறுத்தி பாரீஸுக்கு அனுப்பிவைத்தார். கர்ப்பமாக இருந்த மனைவியைப் பிரிந்து சென்றவர், அதன்பிறகு பிறந்த மகளின் முகத்தை இறுதிவரை பார்க்கவே இயலவில்லை.

*பாரீஸில் ‘வந்தேமாதரம்’, ‘தல்வார்’ ஆகிய பத்திரிகைகள் தொடங்கினார். 1910-ல் அங்கிருந்து அமெரிக்கா சென்றார். அங்கு இவரும் சிலரும் இணைந்து ‘கதர்’ (Ghadar) என்ற பத்திரிகையை வெளியிட்டனர். இவர்கள் ஒன்றிணைந்து 1913-ல் அமெரிக்க பசிபிக் பிராந்திய ஹிந்த் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினர். பத்திரிகையின் பெயரிலேயே கட்சி பிரபலம் அடைந்ததால், ‘கதர் கட்சி’ என்று குறிப்பிடப்பட்டது.

*மராட்டி, வங்காளம், ஆங்கிலத்தில் ‘கதர்’ பத்திரிகை வெளிவந்தது. பல நாடுகளிலும் இதன் கிளைகள் விரிந்தன. இந்தியாவில் ஆங்கில அரசு கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளை இது உலகுக்கு அம்பலப்படுத்தியது. உலகின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியது. கதர் கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட்டார். முதல் உலகப்போர் தொடங்கியபோது, ஸ்டாக்ஹோமில் இந்திய தத்துவவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

*அமெரிக்காவுக்கு 1920-ல் சென்றவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தியா விடுதலை பெற ஆயுதப் புரட்சிக்கான முனைப்புகளை மேற்கொண்டார். காகோரி ரயில் கொள்ளை வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு, இவரை இந்தியா கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது ஈடேறவில்லை.

*கதர் கட்சியின் முயற்சியால், ஜெர்மனியில் இருந்து வங்கத்துக்கு 2 கப்பல்களில் ஆயுதங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. உளவாளிகள் காட்டிக்கொடுத்ததால் அவை வழியிலேயே பறிமுதல் செய்யப்பட் டன. நாடுவிட்டு நாடு பயணம், போராட்டங்களுக்கு இடையில் தனது அனுபவங்கள், கருத்துகளை எழுதிவந்தார்.

*இந்தியா திரும்ப வேண்டும் என்ற இவரது ஆசை இறுதிவரை நிறை வேறவில்லை. பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டிய லாலா ஹர்தயாள், அமெரிக்கா வின் ஃபிலடல்பியாவில் 55-வது வயதில் (1939) மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x