Published : 18 Oct 2016 03:29 PM
Last Updated : 18 Oct 2016 03:29 PM
வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ் பாடல்களைப் பாடுவதில் எந்த அதிசயமும் இல்லை. ஆனால், அதே வெளிநாட்டினர் பாடும்போது அது பலரது கவனத்தை ஈர்க்கிறது. அதைப் பார்க்கும் தமிழர்களுக்கு, நம்மூர் பாடல் ஒன்று உலகளவில் பிரபலமாகியுள்ளதே என்ற பெருமையும் சேர்ந்து கொள்ளும். யூடியூப் போன்ற தளங்களும், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களும் பிரபலமான பிறகு இப்படி நம்மூர் பாடல்களை அயல் நாட்டினர் குரலில் அடிக்கடி கேட்க முடிகிறது.
ஆஸ்கருக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் சர்வதேச கவனம் பெற்றுவரும் ஒரு இசையமைப்பாளர். அவரது இந்திய பாடல்கள் பலதரப்பட்ட மக்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி, தமிழில், சிவாஜி படத்தில் அவர் இசையமைத்த பல்லேலக்கா பாடல் ஏற்கனவே பல வெளிநாட்டு இசைக்கல்லூரி மாணவர் குழுக்களால் மேடையேற்றப்பட்டுள்ளது. அது யூடியூபிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வரிசையில், தற்போது பிரிட்டனின் தேசிய இளைஞர் இசைக் குழுவும் (the National Youth Choirs of Great Britain), பிரிட்டனின் இந்திய கலை மேம்பாட்டு அமைப்பின் மிலாப்ஃபெஸ்ட் ( Milapfest, the UK’s national Indian Arts Development Trust) குழுவும் சேர்ந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
அடுத்த நான்கு வருடங்கள் தெற்காசிய கண்டத்தின் இசையின் அற்புதமான திறனை கண்டறிந்து கொண்டாடும் பொருட்டு ஒரு புது முயற்சி தொடங்கப்படவுள்ளது. அதன் ஆரம்பமாகவே இந்தப் பாடலை, இரு வேறு இசைக்குழுக்கள் சேர்ந்து பாடி அதை படம்பிடித்தும் உள்ளது.
பாடலை இந்த பிரிட்டன் இளைஞர்கள் குழு பாடியதோடு அதை படமாக்கிய விதமும் கண்களுக்கு வண்ணங்களாலான விருந்தாக இருக்கிறது. திறந்த புல்வெளியில் பல்வேறு தேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும், யுவதிகளும் மகிழ்ச்சியோடு ஆடி, பாடி ஒருவர் மீது ஒருவர் வண்ணம் அடித்து கொண்டாடி மகிழும் காட்சிகளைப் பார்க்கும்போது நமக்கும் அந்த குதூகலம் தொற்றிக்கொள்ளும்.
பாடலை அப்படியே பாடாமல் நடுவில் இந்திய பாரம்பரிய வாத்தியங்களை சேர்த்து சிற்சில மாறுதல்களை புகுத்தி நமக்கு பழகிய பாடலுக்கு புதிய தோற்றத்தைத் தந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT