Published : 07 Oct 2016 10:25 AM
Last Updated : 07 Oct 2016 10:25 AM

தாமஸ் மைக்கேல் கினேலி 10

பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளர் தாமஸ் மைக்கேல் கினேலி (Thomas Michael Keneally) பிறந்தநாள் இன்று (அக்டோபர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் (1935) பிறந்தார். ஆரம்பக் கல்விக்குப் பிறகு, பாதிரியார் ஆவதற்காக 6 ஆண்டுகள் மதக் கல்வி பயின்றார். பின்னர் எழுத்து மீதான ஆர்வத்தில் கதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.

*வருமானத்துக்காக பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது ‘தி ப்ளேஸ் அட் விட்டன்’ என்ற முதல் நாவல் 1966-ல் வெளிவந்தது. அடுத்து ‘தி ஃபியர்’ என்ற நாவலை எழுதினார். இவை இரண்டும் பாராட்டுகளைப் பெற்றன. இதற்காக ‘மைல்ஸ் ஃபிராங்க்ளின்’ விருது, ‘கேப்டன் குக் பி-சென்டனரி’ பரிசு பெற்றார்.

*நிறைய படிப்பார். வீட்டில் சொந்தமாக நூலகம் வைத்திருந்தார். பின்னாளில் அந்த நூலகத்தை ஒரு பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிவிட்டார். ‘வேறு எதையும்விட புத்தகங்கள் நமக்கு அதிக மனநிறைவை அளிக்கின்றன’ என்பார்.

*இவரது முதல் 2 நாடகங்கள் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸில் உள்ள நியூ இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை விரிவுரையாளர் பணி கிடைத் தது. தொடர்ந்து நாவல்கள், நாடகங்கள் எழுதினார்.

*ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். நாவல், நாடகம், கட்டுரை எதுவாக இருந்தாலும், எழுதத் தொடங்கும் முன்பு அதுசம்பந்தமாக விரிவாக, ஆழமாக ஆராய்ச்சி செய்வார். இவர் எழுதும் பாணி உளவியல் ரீதியிலானது. இவரது பல நாவல்கள் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை.

*தனது நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படங் களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.

*போல்டெக் ஃபெஸர்பெர்க் என்ற யூதரை 1980-ல் சந்தித்தார். அவர் நாஜிக்களின் சித்ரவதை முகாமில் இருந்து தப்பிப் பிழைத்தவர். தான் உட்பட ஏராளமான யூதர்களின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்கர் ஷிண்ட்லர் என்ற ஜெர்மன் அதிகாரி குறித்து தான் எழுதிவைத்த குறிப்புகளை இவரிடம் தந்தார்.

*அதில் மிகவும் கவரப்பட்ட கினேலி, அதை நாவலாக எழுத முடிவு செய்தார். இருவரும் சேர்ந்து ஷிண்ட்லருடன் தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் சென்று தகவல் சேகரித்தனர். இதுதான் இவரது உலகப் புகழ்பெற்ற ‘ஷிண்ட்லர்ஸ் ஆர்க்’ நூலாக வெளிவந்தது. இந்த நூலுக்காக 1982-ல் புக்கர் பரிசு பெற்றார்.

*இந்த நாவலை அடிப்படையாக வைத்து ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ என்ற பெயரில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் திரைப்படம் எடுத்தார். இது 1993-ல் ஆஸ்கர் விருது பெற்றது. ஆரம்ப காலத்தில் பெற்ற விருதுகள் தவிர 5 சர்வதேச விருதுகள், ஆஸி. பிரதமர் இலக்கிய விருதுகள், ஹெல்மெரிச் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

*இவர் கையெழுத்திட்ட சுயசரிதை நூலை 2009-ல் ஆஸ்திரேலியாவின் நினைவுப் பரிசாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கினார் ஆஸி. பிரதமர் கெவின் ரூட். ஆஸ்திரேலியாவின் ‘வாழும் பொக்கிஷம்’ எனப் போற்றப்படும் பிரபல படைப்பாளியான தாமஸ் மைக்கேல் கினேலி இன்று 81-வது வயதை நிறைவு செய்கிறார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x