Last Updated : 12 Oct, 2016 10:26 AM

 

Published : 12 Oct 2016 10:26 AM
Last Updated : 12 Oct 2016 10:26 AM

ரஞ்சனி- காயத்ரிக்கு பதக்கம்

கடந்த ஆறு வருடங்களாக ஒவ்வொரு நவராத்திரி வெள்ளிக்கிழமை அன்றும் மியூசிக் அகாடமி வளாகத்தில் வெள்ளை கூடாரம் அமைத்து, உள்ளேயிருந்து அறுசுவை நடராஜனின் டிபன் வாசம் வரவேற்கும்! இந்த முறையும் அப்படியே!

மியூசிக் அகாடமியுடன் இணைந்து இந்திரா சிவசைலம் அறக்கொடை, இசைக் கலைஞர்களுக்குப் பதக்கம் வழங்கும் விழாவுக்கான கமகம வரவேற்பு அது!

சென்ற வருடம் ஆடவர் இரட்டையருக்கு (மல்லாடி சகோதரர்கள்) இந்தப் பதக்கம் கொடுக்கப்பட்டது. இந்த தடவை மகளிர் இரட்டையருக்கு (ரஞ்சனி-காயத்ரி). அடுத்த முறை இந்தப் பதக்கத்துக்காக கலப்பு இரட்டையரைத் தேடிப்பிடித்தால் ஹாட்ரிக் அடித்துவிடலாம்!

அகாடமியின் தலைவர் என்.முரளியின் வரவேற்பு உரையுடன் விழா ஆரம்பம். மறைந்த இந்திரா சிவசைலத்துக்கு கர்னாடக இசைமீது இருந்த ஆர்வம் பற்றி... அந்த குடும்பத்துடன் அகாடமிக்கு இருந்து வரும் நெருக்கம் பற்றியெல்லாம் விரிவாக எடுத்துரைத்தார் என்.முரளி. இந்த வருடம் பதக்கம் பெறும் ரஞ்சனி-காயத்ரியின் சங்கீத ஆற்றலைச் சிலாகித்தார். கடந்த 25 வருடங்களாக அகாடமி மேடையில் சகோதரிகள் பாடி வருவதைப் பெருமையுடன் குறிப்பிட்டார்.

தாய் இந்திராவின் நினைவாக இந்த அறக் கொடையை நிறுவியிருக்கும் மகள் மல்லிகா சீனிவாசன், விருது பெரும் சகோதரிகளை வாழ்த்தியும், அகாடமியைப் பாராட்டியும் பேசினார்.

சென்ற வருடம் மல்லாடி சகோதரர்கள் விருது பெற்றபோது, மல்லாடிகள் இருவருமே ஏற்புரை நிகழ்த்தினார்கள்! நல்லவேளை, இந்த முறை காயத்ரியின் ஏற்புரை மட்டுமே!

முதலில் வயலின் இசைக் கலைஞர்களாக அறிமுகமாகி பிரபலம் அடைந்தவர்கள் ‘ராகா சிஸ்டர்ஸ்’ என்று அழைக்கப்படும் ரஞ்சனி- காயத்ரி. மும்பையில் இவர்களுடைய வயலின் குரு, பேராசிரியர் டி.எஸ்.கிருஷ்ணசுவாமி. சென்னைக்கு சகோதரிகள் குடிபெயர்ந்ததும், இவர்களுக்கு வாய்ப்பாட்டு குரு, சங்கீத கலா ஆச்சாரியா பி.எஸ். நாராயணசுவாமி. தனது ஏற்புரையில், இரண்டு சுவாமிகளுக்கும் குரு வந்தனம் செலுத்தினார் காயத்ரி. நெகிழ்ச்சியான தருணம் அது!

விழா முடிந்ததும் ராகா சிஸ்டர்ஸ் கச்சேரி. இவர்களை பாவா (Bhava) சிஸ்டர்ஸ் என்று அழைப்பது இன்னமும் பொருத்தமாக இருக்கும். பாடும் ஒவ்வொரு உருப்படியிலும் பாவம், தேனாகக் குழைந்து வருகிறது இவர்களின் குரலில்!

இந்திரா சிவசைலம் மிகவும் விரும்பி ரசித்த சில பாடல்களைத் தங்கள் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டார்கள் சகோதரிகள். அவற்றில் ஒன்று, கீரவாணியில் அமைந்த பாபநாசம் சிவனின் ‘தேவி... நீயே துணை...’ கொலு சீஸனுக்கு சரியான தேர்வும்கூட!

மெயினாக சங்கராபரணம். இந்த ராகத்தின் ஆரம்பப் புள்ளிகள் வைத்து ரஞ்சனி கோடு போட்டுக் கொடுக்க, விரிவாக்கத்தில் வழவழ தார்ரோடு போட்டார் காயத்ரி. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசைகளிலிருந்து சர்சர்ரென்று சங்கராபரண சங்கதிகள் வந்து விழுந்தன - சர்ஜிக்கல் ஸ்டிரைக்ஸ் மாதிரி! இந்த ஆலாபனை ஒன்று போதும், இவர்கள் கழுத்தில் மேலும் பதக்கங்கள் வந்து குவியப் போவதற்கு கட்டியம் கூற! சாருமதி ரகுராமனின் வயலின் நிழலாக இனிமையுடன் பின்தொடர்ந்தது!

மனோஜ் சிவா (மிருதங்கம்), குருபிரசாத் (கடம்) தனி ஆவர்த்தனம் முடிந்ததும், ரஞ்சனி-காயத்ரி பாடியது பாபநாசம் சிவனின் ‘நம்பிக் கெட்டவர் எவரய்யா...’ முன்னதாக முடிந்த ‘தனி’யைப் பாராட்டுவது போலவும் இது அமைந்தது சிறப்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x